நம் நாட்டில் JEE மற்றும் NEET தேர்வுகளுக்கு நிகரானது தென் கொரியாவில் நடத்தப்படும் சுனியுங் (Suneung) தேர்வு. இதில் தேர்ச்சி பெற்றால்தான் மாணவர்களுக்கு அங்குள்ள சிறந்த கல்லூரிகளில் படிக்க வாய்ப்பு கிடைக்கும்.
நல்ல வேலை கிடைக்க படிப்பறிவு முதன்மையானதாக இருக்கிறது. ஆனால், அந்தப் படிப்பறிவில் வெற்றிபெற தேர்வு முக்கியமானதாக இருக்கிறது. அந்தத் தேர்வு பள்ளிக்கூடங்கள் முதலே நடத்தப்பட்டு வருகின்றன. அப்படியான ஒரு தேர்வுதான், கொரிய நாடுகளில் ஒன்றான தென் கொரியாவில் 9 மணி நேரம் நடைபெறுகிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம், நம்பித்தான் ஆக வேண்டும். அந்த ஒரு தேர்வுதான் மாணவர் ஒருவரை உருவாக்கவும் செய்கிறது; அவரது எதிர்காலத்தை உடைக்கவும் செய்கிறது. தவிர, அன்றைய தேர்வு நடைபெறும் நாளில் அலுவலகங்கள்கூடத் தாமதமாகத் திறக்கப்படுகின்றன; விமானங்கள்கூடப் பறப்பதை நிறுத்துகின்றன; தேவாலயங்கள் மற்றும் கோயில்கள்கூடப் பிரார்த்தனை செய்ய சீக்கிரமாகவே திறக்கப்படுகின்றன. மாணவர்கள் தேர்வில் கவனம் செலுத்துவதற்காகத்தான் இவையெல்லாம் செய்யப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால், அந்த தேர்வுக்காக மில்லியன் கணக்கானவர்கள் மூர்ச்சைப் பிடித்துக் கொள்கிறார்கள். ஆம், இவையெல்லாம் மேலும் மேலும் உங்களுக்கு ஆச்சர்யத்தை அளிக்கலாம். ஆனால், அதுதான் உண்மை.
நம் நாட்டில் JEE மற்றும் NEET தேர்வுகளுக்கு நிகரானது தென் கொரியாவில் நடத்தப்படும் சுனியுங் (Suneung) தேர்வு. இத்தகைய தேர்வானது, அந்நாட்டில் நடத்தப்படும் ஒரு திறனறிதல் தேர்வாகும். இதில் தேர்ச்சி பெற்றால்தான் மாணவர்களுக்கு அங்குள்ள சிறந்த கல்லூரிகளில் படிக்க வாய்ப்பு கிடைக்கும். தவிர, அவர்களின் வேலை, வருமானம் மற்றும் பிற வாய்ப்புகளில்கூட இதன் தாக்கம் இருக்கும். இந்தத் தேர்வு, வருடத்திற்கு ஒருமுறை நவம்பர் மாதத்தில் மட்டுமே நடத்தப்படும். இதன்மூலம் மாணவர்கள் தங்களது திறன்களை வெளிப்படுத்துவர்கள். குறிப்பாக, தென் கொரிய இளைஞர்களின் வாழ்க்கையையே மாற்றும் சுனியுங் தேர்வானது, பலகட்ட சோதனைகளுக்குப் பிறகு காலை 8.40 மணிக்கு தொடங்குகிறது. மாலை 5.40க்கு நிறைவடைகிறது. என்றாலும், மாற்றுத்திறனாளி (பார்வைக் குறைபாடு) மாணவர்கள், கிட்டத்தட்ட 13 மணி நேரம் உட்கார்ந்து எழுதவும் நேரம் கூடுதலாய் ஒதுக்கப்படுகிறது. இதனால், அவர்களுக்கான தேர்வு, இரவு 9.45 மணி வரை நீடிக்கிறது.
பொதுவாக, 9 மணி நேரம் நடைபெறும் இந்தத் தேர்வில் கொரியா, கணிதம், ஆங்கிலம், சமூக அறிவியல் அல்லது அறிவியல் உள்ளிட்ட 5 மொழித் தேர்வுகள் இடம்பெறும். ஒவ்வொரு பாடத்திற்கான தேர்வு நேரம் சுமார் 80 முதல் 107 நிமிடங்கள் வரை இருக்கும். இதை எதிர்கொள்ள மாணவர்களுக்கு மிகுந்த கவனம் தேவைப்படுகிறது. அதேநேரத்தில் மாணவர்கள், சோர்வடையாமல் இருக்க நான்கு இடைவேளைகளும் விடப்படுகின்றன. எனினும், ஒரேயொரு நாள், ஒரேயொரு வாய்ப்பு என்பதுதான் அவர்களின் தலையாய விதியாய் இருக்கும்போது அதற்காக, அவர்கள் வருடம் முழுவதும் கடினமாகப் படிக்கிறார்கள்; பள்ளி முடிந்தும் பயிற்சி மையங்களில் இரவு வரை சென்று படிக்கிறார்கள். காரணம், சுனியுங் தேர்வில் வெற்றிபெறும் ஒரு மாணவர், அவரது முழு எதிர்காலத்தையும் வரையறுக்க முடியும். குறிப்பாக, இந்த வெற்றி, அந்நாட்டின் பல்கலைக்கழக சேர்க்கைகளை மட்டுமல்ல, உலகின் மிகவும் கல்வி சார்ந்த வேலைவாய்ப்புகளையும் சமூக அந்தஸ்தையும் வடிவமைக்கிறது.
இந்த நிலையில்தான் நடப்பாண்டுக்கான, கல்வித் தேர்வுகளில் ஒன்றான சுனியுங் தேர்வு இன்று நடைபெற்றது. நாடு முழுவதும் 1,310 இடங்களில் நடைபெற்ற இத்தேர்வை, 5,54,174 உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் எழுதினர். 2019ஆம் ஆண்டுக்குப் பிறகு, நடப்பாண்டில் அதிக மாணவர்கள் பங்கேற்று இருப்பதாக அங்குள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.
தென் கொரியாவில் சுனியுங் என்பது வெறும் ஒரு தேர்வுவாகப் பார்க்கப்படுவதில்லை. கலாசார முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. தவிர அது, மொழியறிவையும் தாண்டி, சகிப்புத்தன்மை மற்றும் மன ஒழுக்கத்தையும் சோதிக்க வடிவமைக்கப்படுகிறது. பலர் சுனியங்கை மன அழுத்தத்தின் ஒரு தேசிய சடங்கு என்று விவரிக்கிறார்கள். அதனால்தான் அன்றைய நாளில், முழு நாடும் அணிதிரள்கிறது எனக் கூறப்படுகிறது.
சுனியுங்கிற்கான, பாதை என்பது இன்றோ, நேற்றோ தொடங்கியது அல்ல. அது பல ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கியது. ஆம், தென் கொரியாவைப் பொறுத்தவரை, சுனியுங் தேர்வானது சிறப்பையும், ஒழுக்கத்தையும், தியாகத்தையும் போற்றும் சமூகத்திற்கு ஒரு கண்ணாடி போன்றது. விமர்சகர்கள் இதை மிகக் கடுமையானது என்று அழைத்தாலும், எதிர்காலத்தை உருவாக்கும் மாணவர்களோ, இதைத் தேசிய உறுதிப்பாட்டின் சான்றாகப் பார்க்கிறார்கள். அதனால்தான் தென் கொரியாவின் கல்வி மீதான நம்பிக்கை, மாணவர்களுக்கு மிகவும் புனிதமானதாகவும், வானத்தையே வசியப்படுத்தும் அளவுக்கு சக்தி வாய்ந்ததாகவும் பார்க்கப்படுகிறது. மறுபுறம், சமீபத்திய ஆண்டுகளில், தென் கொரிய அரசாங்கம் கல்வி அழுத்தத்தைக் குறைக்க முயற்சித்து வந்தாலும், பெரும்பாலானவர்களுக்கு, சுனியுங் வெற்றிக்கான தவிர்க்க முடியாத வாசலாகவே இருக்கிறது. எனினும், டிசம்பர் 5ஆம் தேதி இதன் தேர்வு முடிவுகள் வரும்போது வெற்றி பெற்றவர்கள் கொண்டாடி மகிழ்கிறார்கள்; தோல்வியுற்றவர்கள் கண்ணீர் சிந்துகிறார்கள். ஆனால் தோல்வியைப் பற்றிக் கவலைப்படாதவர்கள் அமைதியாகக் கடந்துசென்று அடுத்த ஆண்டு தயாரிப்புக்கான திட்டத்தைத் தொடங்குகிறார்கள்.