தென் கொரியா | 24 வயது நடிகை மர்ம மரணம்.. யூடியூபர் காரணமா? ரசிகர்கள் சோகம்!
தென் கொரியாவைச் சேர்ந்த பிரபல நடிகை கிம் சே ரான் (24). 2000ஆம் ஆண்டு சியோலில் பிறந்த சே ரான், குழந்தை நட்சத்திரமாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். மேலும் இவர், ’எ பிராண்ட் நியூ லைஃப்’ மற்றும் ’தி மேன் ஃப்ரம் நோவேர்’ உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானார். இதுதவிர, மேலும் பல படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில், நேற்று மாலை அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்துகிடந்தார். இதுகுறித்து போலீசாருக்குத் தகவல் கிடைத்ததன் பேரில் விசாரணை நடத்தினர். அவர் வீட்டுக்கு யாரும் வந்து சென்ற அறிகுறிகள் இல்லை, அவரது மரணத்திற்கான காரணம் எதுவும் இல்லை எனக் கூறும் போலீசார், அவர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் எனத் தெரிவித்துள்ளனர்.
எனினும், இதுதொடர்பாக அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக, அவர் மீது சில வழக்குகள் இருப்பதாகவும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
2022ஆம் ஆண்டு, அவர் தனது காரை ஒரு தடுப்புச் சுவர் மீது மோதியுள்ளார். அப்போது அவர் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாகக் குற்றம்சாட்டப்பட்டார். இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதியில் உள்ள 57 கடைகளுக்கு கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. பின்னர் அவருக்கு 20 மில்லியன் வோன் அபராதம் விதிக்கப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறுபுறம், அவருடைய மரணத்திற்கு பிரபல யூடியூபர் ஒருவர் பதிவேற்றிய வீடியோக்கள் காரணமாக இருக்கலாம் என நடிகையின் தந்தை குற்றஞ்சாட்டியுள்ளார். ”அந்த யூடியூபர், ’திருமண வதந்திகளுக்குப் பிறகு தலைமறைவான நடிகை’, ’நிதி கிடைக்காமல் ஹோட்டலில் பணிபுரியும் சே ரான்’ என அவருக்கு எதிராகவும், அவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் விதத்திலும் பல வீடியோக்களை பதிவிட்டிருந்தார். அவரது பெயரில் ஆபாச வீடியோக்களை வெளியிட்டிருந்தார். அது தொடர்பாக அவரைக் கண்டித்த பின்னர், அவற்றை அந்த யூடியூபர் நீக்கிவிட்டார். இதுதொடர்பாக போலீசார் ஆவணங்களைக் கேட்டால் நாங்கள் கொடுக்க தயாராக இருக்கிறோம்” என அவர் தெரிவித்துள்ளார்.