donald trump reuters
உலகம்

ட்ரம்பைக் கொல்லத் திட்டம்! சிக்கிய பாகிஸ்தான் நபர்! பின்னணியில் இவர்களா?

ட்ரம்பைக் கொலை செய்யத் திட்டமிட்டதாகக் குற்றம்சாட்டப்பட்ட பாகிஸ்தானியருக்கு 27 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஈரானின் ஆதரவுடன் கொலைத் திட்டம் தீட்டப்பட்டதாக குற்றம்சாட்டியுள்ள நிலையில், இந்த வழக்கு சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.

PT WEB

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பைக் கொலை செய்யத் திட்டமிட்டதாகக் கூறப்படும் பாகிஸ்தானியர் ஆசிப் மெர்ச்சண்ட், 27 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டார். ஈரானின் புரட்சிகரக் காவல் படையுடன் தொடர்பு இருந்தது விசாரணையில் தெரியவந்தது. 2020-ஆம் ஆண்டு காசிம் சுலைமானி கொலைக்கு பழிவாங்கும் நோக்கில் இந்த சதி திட்டம் தீட்டப்பட்டது.

செய்தியாளர் - ராஜ்குமார். ர

கடந்த 2020-ஆம் ஆண்டு ஜனவரி மாதம், ஈரானின் முக்கிய ராணுவத் தளபதியான காசிம் சுலைமானி (Qasem Soleimani), ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்கா நடத்திய ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்டார். அப்போது அமெரிக்க அதிபராக இருந்த டொனால்ட் ட்ரம்ப்தான் இந்தத் தாக்குதலுக்கு உத்தரவிட்டிருந்தார். இதற்குப் பழிவாங்கும் நோக்கில் அமெரிக்க அரசியல் தலைவர்களைக் குறிவைத்து ஈரான் சதி திட்டம் தீட்டியதாக அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பைக் கொலை செய்யத் திட்டமிட்டதாகக் கூறப்படும் பாகிஸ்தானியருக்கு அமெரிக்க நீதிமன்றம் 27 ஆண்டுகள் மற்றும் 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.

pakistani man

பாகிஸ்தானைச் சேர்ந்த 48 வயதான ஆசிப் மெர்ச்சண்ட் (Asif Merchant), கடந்த 2024-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அமெரிக்காவுக்குச் சென்றுள்ளார். அங்கு ட்ரம்பைக் கொலை செய்வதற்காகக் கூலிப்படையினரை ஏற்பாடு செய்து தரும்படி சிலரை அணுகியுள்ளார். இதற்காக முன்பணமாக 5,000 அமெரிக்க டாலர்களையும் வழங்கியுள்ளார். ஆனால், அவர் தொடர்புகொண்ட நபர் அமெரிக்கப் புலனாய்வு அமைப்பான FBI-யின் ரகசியத் தகவலாளராகச் செயல்பட்டு வந்துள்ளார். இதையடுத்து, 2024-ஆம் ஆண்டு அவர் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கின் விசாரணையின்போது, ஆசிப் மெர்ச்சண்ட் ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரக் காவல் படையான (Islamic Revolutionary Guard Corps – IRGC) அமைப்புடன் தொடர்பில் இருந்தது தெரியவந்தது. மேலும், ட்ரம்ப் மட்டுமின்றி, அப்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் ஐக்கிய நாடுகள் சபைக்கான முன்னாள் அமெரிக்கத் தூதர் நிக்கி ஹேலி ஆகியோரும் இந்தச் சதித் திட்டத்தின் சாத்தியமான இலக்குகளாக இருந்ததாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. ஈரானின் புரட்சிகரக் காவல் படையுடன் இணைந்து ஆசிப் மெர்ச்சண்ட் இந்தக் கொலைத் திட்டத்தை முன்னெடுத்ததாக அமெரிக்கத் தரப்பு குற்றம்சாட்டியுள்ளது. குறிப்பாக, 2020-ஆம் ஆண்டு அமெரிக்கத் தாக்குதலில் கொல்லப்பட்ட காசிம் சுலைமானியின் மரணத்திற்குப் பழிவாங்கும் நோக்கிலேயே இந்தச் சதித் திட்டம் தீட்டப்பட்டதாகவும் விசாரணையில் கூறப்பட்டுள்ளது.

donald trump

இந்த வழக்கில், 2026-ஆம் ஆண்டு மார்ச் 6-ஆம் தேதி அமெரிக்க நடுவர் குழு ஆசிப் மெர்ச்சண்ட் குற்றவாளி எனத் தீர்ப்பளித்தது. இதையடுத்து, சர்வதேச எல்லைகளைக் கடந்து பயங்கரவாதச் செயலில் ஈடுபட முயன்றது மற்றும் கூலிக்கு ஆள் வைத்து கொலை செய்யத் திட்டமிட்டது உள்ளிட்ட குற்றங்களுக்காக அவருக்கு 27 ஆண்டுகள் மற்றும் 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்களைக் குறிவைத்த கொலைச் சதித் திட்டத்தின் பின்னணியில் ஈரானின் புரட்சிகரக் காவல் படை இருந்ததாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் கிடைத்துள்ள தீர்ப்பு சர்வதேச அளவில் மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது.