\
US loses its 26-year measles-free status as infections surge again
measlesreuters

26 ஆண்டுகால சாதனைக்கு முற்றுப்புள்ளி! மீண்டும் நோயின் பிடியில் அமெரிக்கா!

26 ஆண்டுகளாகத் தன்வசம் வைத்திருந்த அந்தஸ்தை அமெரிக்கா தற்போது இழந்துள்ளது. இதற்கு ட்ரம்ப் நிர்வாகத்தின் செயல்பாடுகளே காரணம் என விமர்சனங்கள் எழுந்துள்ளன. அப்படி அமெரிக்கா இழந்த அந்தஸ்து என்ன? பார்க்கலாம்.
Published on: 

செய்தியாளர் - ராஜ்குமார். ர

அமெரிக்காவில் கடந்த 2000-ஆம் ஆண்டு தட்டம்மை நோய் பரவல் முற்றிலும் ஒழிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம், தட்டம்மை பரவல் இல்லாத நாடு என்ற அந்தஸ்தை சுமார் 26 ஆண்டுகளாக அமெரிக்கா தக்கவைத்திருந்தது. ஆனால், தற்போது உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பால் அந்த அந்தஸ்தை அமெரிக்கா இழந்துள்ளது.

தட்டம்மை (Measles) என்பது மிகவும் எளிதில் பரவக்கூடிய வைரஸ் தொற்று நோயாகும். பாதிக்கப்பட்ட நபர் இருமும்போதும், தும்மும்போதும் காற்றின் மூலம் மற்றவர்களுக்கும் இந்த நோய் பரவக்கூடும். காய்ச்சல், இருமல், கண்கள் சிவத்தல், உடல் முழுவதும் சிவப்பு நிறத் தடிப்புகள் ஏற்படுதல் ஆகியவை இதன் முக்கிய அறிகுறிகளாகும். சிலருக்கு நிமோனியா, மூளை வீக்கம் உள்ளிட்ட தீவிர பாதிப்புகளையும் ஏற்படுத்தக்கூடும். இருப்பினும், தடுப்பூசி மூலம் இந்த நோயைக் கட்டுப்படுத்தவும் தடுக்கவும் முடியும். அமெரிக்காவில் கடந்த 2000-ஆம் ஆண்டு இந்த நோய் பரவல் முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

measles
measlesreuters

இந்நிலையில், உலக சுகாதார அமைப்பின் அமெரிக்கப் பிராந்திய அமைப்பான Pan American Health Organization (PAHO), அமெரிக்காவில் ஒரே வகையான தட்டம்மை வைரஸ் தொடர்ந்து 12 மாதங்களுக்கும் மேலாகப் பரவியிருப்பதை உறுதி செய்துள்ளது. இதையடுத்து, தட்டம்மை ஒழிப்பு அந்தஸ்தை அமெரிக்கா இழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது அந்நாட்டின் பொது சுகாதாரத் துறையில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. காரணம் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் என்ற தகவலும் வெளியாகியுள்ளது தான்.

இது ட்ரம்ப் நிர்வாகத்தின் சுகாதாரக் கொள்கைகள் மீதான விமர்சனங்களை அதிகரித்துள்ளது. குறிப்பாக, மழலையர் பள்ளிகளில் சேரும் குழந்தைகளுக்கான MMR தடுப்பூசி செலுத்தும் விகிதம் 2019-20 கல்வியாண்டில் 95.2 சதவீதமாக இருந்த நிலையில், 2025-26 கல்வியாண்டில் 92.4 சதவீதமாகக் குறைந்துள்ளது. தடுப்பூசி செலுத்தும் விகிதத்தில் ஏற்பட்டுள்ள இந்தச் சரிவும் நோய்ப் பரவல் அதிகரிப்பதற்கான முக்கியக் காரணங்களில் ஒன்றாகக் கூறப்படுகிறது.

இதனிடையே, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகத்தில் சுகாதாரச் செயலாளராகப் பொறுப்பு வகிக்கும் ராபர்ட் எஃப். கென்னடி ஜூனியரின் செயல்பாடுகளும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளன. தடுப்பூசிகளின் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் குறித்து அவர் தொடர்ந்து சந்தேகங்களை எழுப்பி வந்துள்ளார்.

measles
measlesreuters

இதனால், தடுப்பூசிகள் தொடர்பான தவறான தகவல்கள் பரவுவதுடன், பொதுமக்கள் மத்தியில் தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கான தயக்கமும் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்தச் சூழலில், நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் திட்டங்களை மீண்டும் தீவிரப்படுத்த வேண்டும் எனச் சுகாதார வல்லுநர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

ஒருகாலத்தில் தட்டம்மை ஒழிப்பில் உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்த அமெரிக்கா, தற்போது மீண்டும் அந்த நோயை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. 26 ஆண்டுகளாகத் தக்கவைத்திருந்த அந்தஸ்தை இழந்திருப்பது சர்வதேச அளவில் பேசுபொருளாகியுள்ள நிலையில், இதற்கு ட்ரம்ப் நிர்வாகத்தின் சுகாதாரக் கொள்கைகள் எந்த அளவுக்குக் காரணமாக அமைந்துள்ளன என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

US loses its 26-year measles-free status as infections surge again
அமெரிக்காவுக்கு No சொல்லும் இந்தியர்கள்? மாறும் மாணவர்களின் தேர்வு! காரணம் என்ன?