நெதன்யாகுவை மீண்டும் வீழ்த்திய அரபு கட்சிகள்: வலதுசாரிகளுக்கு தோல்வி.. முக்கிய பதவியில் அரபு தலைவர்!
இஸ்ரேல் நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், அரபு கட்சிகளின் ஆதரவுடன் ஐசன்கோட் தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைக்கிறது. சபாநாயகர் பதவியிலும் வெற்றி பெற்றதால், நெதன்யாகுவுக்கு அரசியல் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
கடந்த மாதம் 27-ம் தேதி நடைபெற்ற இஸ்ரேல் நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் ஆளும் கட்சி கூட்டணி 53 இடங்களிலும், முன்னாள் ராணுவத் தளபதியும் எதிர்க்கட்சித் தலைவருமான ஐசன்கோட்டின் கூட்டணி 48 இடங்களிலும் வென்றது.
யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழலில், 19 இடங்களில் வென்ற அரபு கட்சிகளான ஜாயிண்ட் லிஸ்ட் (Joint List) மற்றும் ராம் (Raam) கட்சிகள் தங்கள் ஆதரவை ஐசென்கோட்டிற்கு (Gadi Eisenkot) வழங்க முன்வந்துள்ளதால், அவரது கூட்டணிக்கு 67 இடங்கள் கிடைத்தது. இதனால் அவருக்கு ஆட்சியமைக்க தேவையான 61 இடங்கள் கிடைத்துள்ளதால் இஸ்ரேல் அதிபர் அவரை பதவியேற்க அழைப்பை விடுத்துள்ளார். இதனால் அரபு கட்சிகளின் வெளிப்புற ஆதரவுடன் ஐசென்கோட் ஆட்சியமைப்பது உறுதியாகியுள்ளது.
இந்த சூழலில் இஸ்ரேல் நாடாளுமன்றம் கூட்டப்பட்டு புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி பிரமாணம் எடுத்துக்கொண்டனர். தொடர்ந்து நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகரை தேர்வு செய்யும் வாக்கெடுப்பு நேற்று தொடங்கியது.
சபாநாயகர் பதவிக்கு நெதன்யாகு தலைமையிலான வலதுசாரி கூட்டணி அமீர் ஓஹானாவுக்கு (Amir Ohana) என்பவரையும், காடி ஐசன்கோட்டின் கூட்டணி மதன் கஹானா (Matan Kahana) என்பவரையும் வேட்பாளராக நிறுத்தினர். பின்னர் நடைபெற்ற தேர்தலில் மொத்தமுள்ள 120 உறுப்பினர்களில், காடி ஐசன்கோட்டின் கூட்டணியை சேர்ந்த மதன் கஹானா 66 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். 19 இடங்களைக் கொண்ட அரபுக் கட்சிகளின் 18 உறுப்பினர்கள் மதன் கஹானாவுக்கு ஆதரவாக வாக்களித்ததே அவரது வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது.
அதே நேரம் அரபுக் கட்சிகளின் ஜாயிண்ட் லிஸ்ட் கூட்டணியின் தலைவரான அகமது திபி (Ahmad Tibi) உள்ளிட்ட ஒன்பது பேர் தற்காலிகத் துணை சபாநாயகர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். சபாநாயகர் பதவி எதிர்க்கட்சிகள் வசம் சென்றிருப்பது, இடைக்காலப் பிரதமராகத் தொடரும் பெஞ்சமின் நெதன்யாகுவுக்குப் பெரிய அரசியல் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக இடைக்கால பிரதமராக அவரால் நாடாளுமன்றத்தில் எந்த சட்டத்தையும் கொண்டுவர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. சபாநாயகர் தேர்தலில் அரபு கட்சிகளின் ஆதரவுடன் கிடைத்த இந்த 66 வாக்குகளின் பலம், ஐசன்கோட் தலைமையில் புதிய கூட்டணி ஆட்சி அமைவதற்கான முன்னோட்டமாகப் பார்க்கப்படுகிறது.

