தொழில், பொருளாதார முன்னேற்றம், வேலைவாய்ப்பு என்று பல்வேறு காரணங்களுக்காக இந்தியர்கள் உலகின் பல்வேறு நாடுகளுக்கு செல்வதுண்டு. தனக்கான வளர்ச்சியை கட்டமைக்கும் இந்தியர்கள், தான் செல்லும் நாட்டின் வளர்ச்சிக்கும் முக்கிய பங்காற்றுகிறார்கள் என்பதில் மாற்று கருத்தில்லை. அப்படி, செல்லும் இந்தியர்கள் இனவெறி தாக்குதலுக்கு ஆளாக்கப்படுகிறார்கள்.
2025-இல், அவுஸ்திரேலியாவின் அடிலெய்டில் 23 வயது இந்தியர் சரண்ப்ரீத் சிங் மீது ஐந்து பேர் கொண்ட குழு தாக்குதல் நடத்தியது. 2025-இல் டப்ளின் நகரில் 40 வயது இந்தியர் மீது இளைஞர்கள் கும்பல் ஒன்று இனவெறி தாக்குதல் நடத்தியது.
ஏன் கடந்த 2 வாரங்களில் அயர்லாந்தில் மூன்று இனவெறி தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளன. இந்த சம்பவங்கள் அனைத்தும் , அண்மைக்காலமாக வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் மீது நடத்தப்படும் இனவெறி தாக்குதல்களை சுட்டிக்காட்டுகிறது.
இந்தவகையில், 6 வயது இந்திய வம்சாவளியை சேர்ந்த சிறுமியின் மீது இனவெறி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அயர்லாந்தின் வாட்டர்ஃபோர்டில் உள்ள சிறுமியின் வீட்டின் வெளியிலேயே இந்திய கொடூர சம்பவம் நடந்திருக்கிறது. சிறுமியை நோக்கி, ‘ டேட்டி இந்தியன். இந்தியாவிற்கு திரும்பி போ ’ என்ற கோஷங்களுடன் ஐந்து பேர் கொண்ட சிறுவர்கள் கும்பல் ஒன்று 6 வயது குழந்தையின் மீது இந்த தாக்குதலை நடத்தியுள்ளது.
கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்தவர் அனுபா அச்சுதன். இவர் அயர்லாந்தில் 8 ஆண்டுகளாக நர்சாக பணியாற்றி வருகிறார். அவர் தனது கணவர், 2 குழந்தைகளுடன் தென்கிழக்கு அயர்லாந்தில் உள்ள வாட்டர் போர்டு நகரில் வசித்து வருகிறார். சம்பவ தினமான, ஆகஸ்ட் 4 ஆம் தேதி திங்கட்கிழமை மாலை, இவர்களின் 6 வயது மகள் நியா அவரின் தோழிகளோடு வீட்டு முன்பு விளையாடி கொண்டிருந்துள்ளதாக குழந்தையின் தாய் தெரிவிக்கிறார்.
அப்போது, தனது 10 மாத குழந்தைக்கு உணவு கொடுக்க அனுபா சென்றிருந்த நிலையில், வெளியில் விளையாடி கொண்டிருந்த நியாவின் அழுகை சத்தம் கேட்டுள்ளது.
அழுதுகொண்டே வீட்டினுள் நியா வந்ததாக தெரிவிக்கும் அனுபா, நியா மிகவும் வருத்தத்தில் இருந்ததாகவும், அழு தொடங்கிய நியாவால் பேசக்கூட முடியாத அளவிற்கு அவள் பயத்தில் இருந்ததாகவும் தெரிவித்தார்.
மேலும், இது குறித்து தெரிவித்த சிறுமியின் தாய் அனுபா, ” ஐந்து பேர் கொண்ட சிறுவர்கள் கும்பல் ஒன்று, அவளிடம் முகத்தில் குத்தியதாகவும், தலைமுடியை இழுத்ததாகவும், முகம் உள்ளிட்ட உடலின் பல பகுதிகளில் சைக்கிள்ளை வைத்து தாக்கியதாகவும் அவர் தெரிவித்தது எனக்கு மிகவும் வேதனையாக இருந்தது. அந்த சிறுவர்கள்,’ டேர்ட்டி இந்தியன், இந்தியாவுக்குத் திருப்பிப் போ‘என்று கூறியுள்ளனர்.
இதற்கு பிறகு இரவு தூங்கும் போதெல்லாம் அவள் அழுகொண்டுடேதான் இருக்கிறாள். வெளியே விளையாட மிகவும் பயப்படுகிறாள். எங்கள் சொந்த வீட்டின் முன் கூட நாங்கள் பாதுகாப்பாக உணரவில்லை. இப்படி ஒரு சம்பவம் நடக்குமென்று நான் எதிர்பார்க்கவில்லை.
சில நாட்களுக்கு பிறகு அந்த சிறுவர்கள் கும்பலை நான் பார்த்தேன். அவர்கள் என்னை பார்த்து சிரித்தனர். நான் அவளின் தாய் என்பது அந்த சிறுவர்களுக்கு தெரியும். 12 அல்லது 14 வயது தான் அவர்களுக்கு இருக்கும். இன்னும் இதே இடத்தில்தான் அவர்கள் சுற்றித்திரிகிறார்கள்.
முறையான சான்றிதழ்களோடு எங்களது வேலைக்காகதான் இங்கு நாங்கள் வந்தோம். நாங்கள் தகுதிகள் இல்லாமல் வரவில்லை. நாங்கள் நன்கு பயிற்சி பெற்றவர்கள், அரசாங்கத்திற்கு எங்களின் சேவை தேவை.” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த சம்பவம் குறித்து அயர்லாந்து போலீஸிடம் புகார் அளித்த அவர், அந்த சிறுவர்களுக்கு தண்டையை கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை என்றும், சரியான வழிகாட்டுதலை கொடுக்கவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.