இது கைலாசா பாணி இல்லை.. வெறும் 400 பேரை கொண்டு ஒரு நாட்டையே உருவாக்கி அதிபரான 20 வயது இளைஞர்!
உலகம் முழுவதும் ஒரு சில தனி நபர்கள், தனித் தீவையோ அல்லது தனி நாட்டையோ வாங்கி உரிமை கொண்டாடி வருகின்றனர். ஏற்கெனவே தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆன்மிகவாதியான நித்யானந்தா ’கைலாசா’ என்ற நாட்டை வாங்கி, அங்கேயே தன் சீடர்களுடன் இருப்பதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், உண்மையில் அப்படியொரு இடம் இருப்பதாக இதுவரை நிரூபணமாகவில்லை. அதேபோல் சமீபத்தில் இந்தியாவைச் சேர்ந்த தொழில்நுட்ப முதலீட்டாளர் பாலாஜி ஸ்ரீனிவாசன் என்பவர் சிங்கப்பூருக்கு அருகில் உள்ள தனியார் தீவு ஒன்றை வாங்கி, அதற்கு ’நெட்வொர்க் ஸ்டேட்’ எனப் பெயரிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 20 வயது இளைஞர் ஒருவர், புதிதாக ’வெர்டிஸ்’ என்ற சிறிய நாட்டை உருவாக்கி அதன் அதிபராகியுள்ளார்.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டேனியல் ஜாக்சன் என்ற 20 வயது இளைஞர், குரோஷியாவிற்கும் செர்பியாவிற்கும் இடையிலான டானூப் ஆற்றின் குறுக்கே 125 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள உரிமை கோரப்படதாக, ஆள் நடமாட்டம் இல்லாத நிலத்தை ’வெர்டிஸ்’ குடியரசு நாடாக அறிவித்துள்ளார். தவிர, அந்நாட்டின் அதிபராகவும் அவரே உள்ளார். நியூயார்க் போஸ்ட்டின் அறிக்கையின்படி, இந்தப் பகுதி சட்டப்பூர்வ சாம்பல் மண்டலத்தில் உள்ளது. இது, ‘பாக்கெட் த்ரீ‘ என்று அழைக்கப்படும் ஓர் உரிமை கோரப்படாத நிலமாகும். இது நடந்துவரும் எல்லைப் பிரச்னை காரணமாக, குரோஷியாவோ அல்லது செர்பியாவோ அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கவில்லை.
இந்த வெர்டிஸ் நாட்டை உருவாக்க டேனியல் ஜாக்சன் 14 வயது முதலே ஆர்வம் கொண்டிருக்கிறார். 18ஆவது வயதில், டிஜிட்டல் வடிவமைப்பாளரான ஜாக்சன், தனது தொலைநோக்குப் பார்வையை முறைப்படுத்தத் தொடங்கினார். மே 30, 2019 அன்று, அவர் வெர்டிஸ் சுதந்திரக் குடியரசின் சுதந்திரத்தை அறிவித்தார். அப்போதிருந்து, அவர் ஒரு கொடி, ஓர் அடிப்படை அரசியலமைப்பு, அமைச்சர்கள் கொண்ட ஓர் அமைச்சரவை ஆகியவற்றை உருவாக்கியுள்ளார். மேலும் இப்போது அந்த நாட்டில் 400 குடிமக்கள் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்நாட்டின் மொழிகளாக ஆங்கிலம், குரோஷியன் மற்றும் செர்பியன் ஆகியவை அதிகாரப்பூர்வமாகப் பட்டியலிடப்பட்டுள்ளது. மேலும், யூரோ நாணயமாகப் பயன்படுத்தப்படுகிறது.
இந்நாட்டை, குரோஷிய நகரமான ஓசிஜெக்கிலிருந்து படகு மூலம் மட்டுமே அணுக முடியும். எனினும், இந்நாட்டிற்கும் எதிர்ப்பு உள்ளது. முன்னதாக, இந்த நாட்டில் ஜாக்சன் குடியேற எந்த முயற்சியிலும் சமுகமாக நடைபெறவில்லை. அக்டோபர் 2023இல், குரோஷிய காவல்துறை ஜாக்சன் உட்பட பல வெர்டிஸ் ஆதரவாளர்களை கைது செய்து நாடு கடத்தியதாகக் கூறப்படுகிறது. அவர், இப்போதும் குரோஷியாவிற்குள் நுழைய வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளார்.
செர்பியாவிலிந்து மக்கள் நுழைவதைத் தடுக்க குரோஷிய அதிகாரிகள் வெர்டிஸின் கடற்கரையில் ரோந்துப் பணிகளை அதிகரித்துள்ளனர். இதனால் இருதரப்பிலும் வெர்டிஸ் நாட்டுக்கு பதற்றம் இருப்பதாக ஜாக்சன் குற்றஞ்சாட்டுகிறார். ஆனாலும், எதிர்காலத்தில் இரு நாடுகளுடனும் அமைதியான இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்த விரும்புவதாக அவர் கூறியுள்ளார்.
வெர்டிஸின் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஒரு பாஸ்போர்ட் வழங்கப்படுகிறது. இருப்பினும், ஜாக்சன் அவை சர்வதேச பயணத்திற்குச் செல்லுபடியாகாது என்று எச்சரித்துள்ளார். அதேநேரத்தில் சிலர், வெர்டிசியன் பாஸ்போர்ட்களைப் பயன்படுத்தி மற்ற நாடுகளுக்குள் வெற்றிகரமாக நுழைந்துள்ளதாக அவர் கூறுகிறார். இந்த நாட்டின் குடிமகனாவதற்கு மருத்துவம், பாதுகாப்பு அல்லது சட்ட நிபுணத்துவம் பெற்ற நபர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. தற்போது அந்நாட்டின் அதிபராக ஜாக்சன் இருந்தாலும், அவர் தனக்கு அதிகார வெறி இல்லை என்று வலியுறுத்துகிறார். தவிர, தாம் பதவி விலகி சுதந்திரமான தேர்தல் நடத்தவும் வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளார். உண்மையில், குரேஷியாவும் செர்பியாவும் அந்நாட்டை உரிமை கொண்டாட நிலையில், அந்நாட்டுக்கு ஜாக்சனே அதிபராகத் தொடர்வார்.