தென்னாப்பிரிக்காவில் மூன்று மாதங்களில் 581 பெண்கள் கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி தகவல் வெளியிடப்பட்டுள்ளது. ஜோகன்னஸ்பர்க் பகுதியில் 13 பெண்கள் கொலை செய்யப்பட்ட வழக்குகளில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெண்களுக்கு எதிரான வன்முறையைத் தடுக்க அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மக்களின் கோரிக்கை அதிகரித்துள்ளது.
செய்தியாளர்: துர்கா தேவி சரவணன்
தென்னாப்பிரிக்காவில் கடந்த ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான மூன்று மாதங்களில் 581 பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சமீபத்திய குற்ற புள்ளிவிவரங்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளன.
இதில், ஜோகன்னஸ்பர்க் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அரைகுறை ஆடைகளுடன், உடலில் பலத்த காயங்களுடன் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட 13 பெண்களும் அடங்குவர். இந்தத் தொடர் கொலைகள் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளன.
குறிப்பாக, இந்த வாரம் ஃப்ரீ ஸ்டேட்(free state) மாகாணத்தில் ஐந்து பெண்கள் மற்றும் ஒரு வயது குழந்தை துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முகமூடி அணிந்த மூன்று மர்ம நபர்கள், ஒரு வீட்டிற்குள் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில் வீட்டின் உரிமையாளரின் மனைவியும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவத்தில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்கள்படி, கவுடெங் மாகாணத்தில் மட்டும் 131 பெண்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கிடையில், ஜோகன்னஸ்பர்க் பகுதியில் 13 பெண்கள் கொலை செய்யப்பட்ட வழக்குகளில் இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் கெம்ப்டன் பார்க், போக்ஸ்பர்க், தெம்பிசா உள்ளிட்ட பகுதிகளில் பெண்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவங்களிலும் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்கக் கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனத் தற்காலிக காவல்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, குற்றவாளிகள் அனைவரும் கண்டறியப்படும் வரை விசாரணை தொடரும் என அதிபர் சிரில் ராமபோசா (Cyril Ramaphosa) உறுதியளித்துள்ளார். கடந்த ஆண்டே பெண்களுக்கு எதிரான வன்முறையைத் தேசியப் பேரிடராக அவர் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பெண்களுக்கு எதிரான வன்முறை உலக நாடுகளுக்கே பெரும் சவாலாக மாறியுள்ள நிலையில், தென்னாப்பிரிக்காவில் தொடரும் இந்தக் கொடூரக் கொலைகள் மக்களிடையே அச்சத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளன. குற்றவாளிகளைக் கைது செய்வதோடு மட்டுமல்லாமல், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதே தென்னாப்பிரிக்கா மக்களின் கோரிக்கையாக உள்ளது.