உக்ரைன் போர் தொடரும் நிலையில், ரஷ்ய ராணுவத்தில் 44 இந்தியர்கள் உள்ளதாக மத்திய அரசு அதிர்ச்சித் தகவல் தெரிவித்துள்ளது.
நேட்டோ அமைப்பு நாடுகளில் உக்ரைன் இணையக்கூடாது என்பதற்காக, அதன் அண்டை நாடான ரஷ்யா, கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி முதல் அந்நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது. இவ்விரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் போர், மூன்று ஆண்டுகளைக் கடந்தும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள ட்ரம்ப், இவ்விரு நாடுகளிடையே நடைபெற்று வரும் போரை நிறுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறார். ஆனால், இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்தப் போரில் வடகொரியா மற்றும் இந்திய இளைஞர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருவதாகக் கடந்த காலங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. சமீபத்தில்கூட ஹைதராபாத்தைச் சேர்ந்த அஃப்ஷா பேகம் என்ற பெண்மணி, ‘மும்பையை தளமாகக் கொண்ட நிறுவனம் ஒன்றின் மூலம் தனது கணவர், கடந்த ஏப்ரல் மாதம் ரஷ்யாவுக்குச் சென்றதாகவும், அங்கு அவருக்கு வலுக்கட்டாயமாக பயிற்சி அளிக்கப்பட்டதாகவும், அந்தக் குழுவில் சுமார் 30 பேர் இந்தியர்கள் இருந்ததாகவும், அதைத் தொடர்ந்து, தனது கணவரும் மற்றவர்களும் உக்ரைன் இராணுவத்திற்கு எதிராகப் போராட எல்லைப் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், இதனால் அவரை மீட்டு இந்தியாவுக்கு அனுப்புமாறு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இது தவிர, பெரும்பாலானோர் தவறான தகவல்களின் அடிப்படையில் ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்படுகிறார்கள் என அவர்களது குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
ரஷ்யாவுக்கு படிக்கச் சென்ற பலர் ஏமாற்றப்பட்டுள்ளதாகவும், இடைத்தரகர்கள் பொய்யான தகவல்களின் அடிப்படையில் இவர்களை ரஷ்ய ராணுவத்துக்கு அனுப்பி உள்ளனர் என்பதும் குடும்பத்தினரின் புகாராக உள்ளது.
இந்த நிலையில், உக்ரைன் போர் தொடரும் நிலையில், ரஷ்ய ராணுவத்தில் 44 இந்தியர்கள் உள்ளதாக மத்திய அரசு அதிர்ச்சித் தகவல் தெரிவித்துள்ளது. டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெயஸ்வால், இதனை உறுதி செய்தார். இந்தியர்களை மீட்டு தாயகம் அழைத்து வர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. இதற்காக ரஷ்ய அரசை மாஸ்கோவில் உள்ள தூதரகம் மூலம் இந்திய அரசு தொடர்பு கொண்டுள்ளது. ரஷ்யா ராணுவத்தில் உள்ள 44 இந்தியர்களையும் ராணுவத்திலிருந்து விடுவித்து இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சகம் கோரிக்கை வைத்துள்ளது. அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, ரஷ்ய இராணுவத்தால் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட இந்தியர்களின் எண்ணிக்கை இப்போது 170ஐ நெருங்கியுள்ளது. அதில், 96 பேர் ரஷ்ய அதிகாரிகளால் விடுவிக்கப்பட்ட நிலையில், மேலும் 16 பேர் காணாமல் போனவர்களாக பட்டியலிடப்பட்டுள்ளனர். உக்ரைனில் சண்டையிடும்போது குறைந்தது 12 இந்தியர்கள் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.