ரஷ்யா மீது அமெரிக்காவின் பொருளாதாரத் தடை.. கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தும் இந்திய நிறுவனங்கள்?
அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடை காரணமாக, இந்தியா தனது மிகப்பெரிய சப்ளையரான ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியைக் கடுமையாகக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உக்ரைன் எதிரான போரில் அமைதியை நிலைநாட்டும் முயற்சியாக, ரஷ்யாவின் இரு பெரும் எண்ணெய் நிறுவனங்களான ரோஸ்நெஃப்ட் மற்றும் லுகோயில் ஆகியவற்றுக்கு அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. ரஷ்ய அரசுக்கு வருவாய் ஈட்டித் தருவதில் இவ்விரு நிறுவனங்களும் மிக முக்கியமானவை என்ற நிலையில், அவற்றை ட்ரம்ப் அரசு குறிவைத்துள்ளது. இதன் காரணமாக, இந்தியா தனது மிகப்பெரிய சப்ளையரான ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியைக் கடுமையாகக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளில் சீனா, இந்தியா, மற்றும் துருக்கி ஆகியன முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன.
இந்த நிலையில்தான், ரஷ்யாவின் மீது பொருளாதார அழுத்தத்தை அதிகரிக்க, ரஷ்ய எண்ணெய் வாங்குவதை நிறுத்துமாறு ட்ரம்ப் இந்த நாடுகளிடம் வேண்டுகோள் விடுத்து வருகிறார். ஆனால், ட்ரம்பின் இந்தப் பேச்சை மேற்கண்ட நாடுகள் கண்டுகொள்ளவில்லை. தொடர்ந்து கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்து வருகின்றன.
இந்த நிலையில்தான், ”ரஷ்யாவிடமிருந்து இனி எண்ணெய் வாங்குவதை நிறுத்திக் கொள்வோம்” என்று இந்தியப் பிரதமர் மோடி தன்னிடம் கூறியதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சமீபத்தில் தெரிவித்திருந்தார். ரஷ்யாவில் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்ட பிறகு அதையே மாற்றி, தற்போது ”இனி எண்ணெய் வாங்குவதை இந்தியா குறைத்துக் கொள்ளும்” என்று ட்ரம்ப் கூறியுள்ளார்.
இந்தியாவைப் பொறுத்தவரை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் நயாரா எனர்ஜி ஆகியவை ரஷ்ய எண்ணெய்யை அதிகம் வாங்குகின்றன. நாட்டின் முன்னணி தனியார் வாங்குபவரான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், ரஷ்யாவிலிருந்து அதன் கச்சா எண்ணெய் இறக்குமதியை கணிசமாகக் குறைக்க அல்லது முற்றிலுமாக நிறுத்த திட்டமிட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், இந்திய அரசு நடத்தும் சுத்திகரிப்பு நிறுவனங்கள் ரஷ்ய எண்ணெய் கொள்முதல் தொடர்பான ஆவணங்களை முழுமையாக மதிப்பாய்வு செய்து வருகின்றன. அமெரிக்கத் தடைகளுக்கு இணங்குவதை உறுதி செய்வதே இதன் நோக்கமாகும்.
நடப்பு ஆண்டில் இந்தியாவின் மொத்த இறக்குமதியில் ரஷ்ய எண்ணெய் 36%க்கும் அதிகமாக இருந்ததாக பகுப்பாய்வு நிறுவனமான கெப்ளர் தெரிவித்துள்ளது. இந்த கணிசமான சார்புநிலை, ஆகஸ்ட் மாதத்தில் தண்டனை வரிகள் அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அதிபர் டொனால்டு ட்ரம்புடன் மோதலையும் சிக்கலான வர்த்தக விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது. கடுமையான தடைகள் மற்றும் அமெரிக்காவின் அதிகரித்து வரும் அழுத்தத்தால், இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்கள் இப்போது மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்காவில் உள்ள மாற்று சப்ளையர்களை நோக்கி மாறக்கூடும் எனக் கூறப்படுகிறது.
முன்னதாக, உக்ரைன் போரால் மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது கடுமையான பொருளாதாரத் தடையை விதித்திருந்தன. அப்போதும் இந்தியாவும் சீனாவும் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய்யை அதிகம் வாங்கும் நாடுகளாக மாறிவிட்டன. மலிவு விலையில் கச்சா எண்ணெய் கிடைத்ததும் இந்தியாவுக்கு ஆதாயமாக இருந்தது. ராய்ட்டர்ஸ் வெளியிட்ட தகவலின்படி, 2025ஆம் ஆண்டின் ஜனவரி முதல் ஜூலை வரை, இந்தியா தினசரி சராசரியாக 1.73 மில்லியன் பீப்பாய்கள் ரஷ்ய கச்சா எண்ணெயை இறக்குமதி செய்துள்ளது. இது, இந்தியாவின் மொத்த எண்ணெய் இறக்குமதியில் மூன்றில் ஒரு பங்கைக் குறிக்கிறது. அதாவது, முன்பு ரஷ்யாவிலிருந்து வந்தது இதைவிட மிகக் குறைவாகவே இருந்தது. இந்தக் காலகட்டத்தில், மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா குறைத்தது.

