ஒரு குடும்பத்தின் மிகப்பெரிய வரமாக, குழந்தைச் செல்வம் பார்க்கப்படுகிறது. ஒரு குழந்தைக்கே இவ்வளவு சந்தோஷம் என்றால், இரண்டு குழந்தைகள் என்றால் சொல்லவே வேண்டியதில்லை. அதிலும் ஒருவீட்டில் இரட்டைக் குழந்தைகள் பிறந்துவிட்டால், சந்தோஷத்திற்குக் கொஞ்சமும் பஞ்சமிருக்காது. எனினும், இரட்டையர்கள் எங்கும் சகோதரர்களாகவோ அல்லது சகோதரிகளாகவோ பார்க்கப்படுகிறார்கள். ஆனால், தாய்லாந்தில் பிறக்கும் இரட்டைக் குழந்தைகள் ஆண், பெண் எனில் அவர்கள் காதலர்களாகப் பார்க்கப்படுகிறார்கள். தவிர, அவர்களுக்கு திருமணமும் செய்து வைக்கப்படுகிறது. எதற்காக இந்த விநோத நடவடிக்கை? இதன் பின்னணியில் இருக்கும் காரணம் என்னவென்பது குறித்து இங்கு பார்ப்போம்.
தாய்லாந்தின் கலாசினில் உள்ள பிரச்சாயா ரிசார்ட்டில் வசிப்பவர்கள், தட்சனாபோர்ன் சோர்ன்சாய் மற்றும் அவரது சகோதரி தட்சதோர்ன். இரட்டைக் குழந்தைகளான இவர்களுக்குத்தான் குடும்பத்தினர் முன்னிலையில் திருமணம் செய்துவைக்கப்பட்டு உள்ளது. இதில் இன்னொரு ஆச்சர்யம் என்ன தெரியுமா? அவர்கள் இருவருக்கும் வெறும் 4 வயதுதான். இதுகுறித்த அந்த வீடியோவில், நான்கு வயது சகோதரி தனது சகோதரனுக்கு கன்னத்தில் முத்தமிடுகிறார். பின்னர், அவர்கள் திருமண சடங்குகளைச் செய்கிறார்கள், விழாவுக்குப் பிறகு புத்த துறவிகள் தம்பதியினரை ஆசீர்வதிக்கிறார்கள். ஒருகட்டத்தில், திருமண நிகழ்வுக்குப் பிறகு இரட்டையர்களின் நெற்றியில் குறியிடப்பட்டது காணப்படுகிறது.
இந்த திருமணம், கடந்த ஜூன் மாதம் 28ஆம் தேதி நடைபெற்றது. மேலும் இந்த திருமணத்திற்கு வரதட்சணையாகக் குடும்பத்தினர் நான்கு மில்லியன் பாட் மற்றும் தங்கத்தை வழங்கியுள்ளனர். வைரலாகி வரும் அந்த வீடியோ, பல்வேறு எதிர்வினைகளையும் பெற்று வருகிறது. தாய்லாந்து மக்களின் கலாசார நடைமுறைகளில் இதுவும் ஒன்று எனக் கூறப்பட்டாலும் பயனர்கள் பலரும் அதற்கு கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தாய்லாந்தில் பிறக்கும் எதிர்பாலின இரட்டையர்கள், முன்ஜென்மத்தில் காதலர்களாக இருந்ததாகவும், அவர்கள் மீண்டும் இரட்டையர்களாகப் பிறப்பதாகவும் நம்பப்படுகிறது. அவர்களுடைய வாழ்க்கையில் நோய் அல்லது விபத்தைத் தடுக்கும் வகையிலேயே இத்தகைய திருமணம் செய்து வைக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இந்த நடைமுறை, குடும்பங்களில் பாரம்பரியமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இது குழந்தைகளின் வாழ்க்கையில் நல்லிணக்கத்தையும் நீண்ட ஆயுளையும் தரும் என்று நம்பப்படுகிறது. எனினும், இந்தத் திருமணம் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்படவில்லை. மேலும் சடங்கு நோக்கங்களுக்காக மட்டுமே செய்யப்படுகிறது. அதிலும், இரட்டையர்களின் திருமணம் அவர்களுடைய 10 வயதுக்குள்ளே செய்யப்பட வேண்டும் எனக் கூறுகின்றனர்