தாய்லாந்து | கழுத்து சுளுக்கிற்காக மசாஜ் செய்த பாடகி.. இறுதியில் நேர்ந்த சோகம்! நடந்தது என்ன?
தாய்லாந்தில் இளம் பாப் பாடகி ஒருவருக்கு கழுத்தில் சுளுக்கு ஏற்பட்ட நிலையில், அதனை சரிசெய்ய பார்லரில் மசாஜ் செய்ய சென்றுள்ளார். ஆனால் இந்த மசாஜ் காரணமாகவே சில தினங்களில் அவர் எதிர்பாரா விதமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. என்ன நடந்தது? பார்க்கலாம்...
மசாஜ் மற்றும் ஸ்கின் கேர் போன்றவற்றிக்கு பெயர் பெற்ற இடம், தாய்லாந்து. பொதுவாகவே மசாஜை சரியான முறையில் செய்யவில்லை என்றால், பல்வேறு பிரச்னைகள் அதனால் ஏற்படும். மூளை காயங்கள், பக்கவாதம் உள்ளிட்ட பல பிரச்னைகளை ‘தவறான மசாஜ்’ உண்டாக்க கூடும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த வகையில்தான், தாய்லாந்தை சேர்ந்த 20 வயது பாப் பாடகி சாயதா ப்ரோஹோம் என்கிற பிங் சாயதா.
இவருக்கு கழுத்து, தோள்பட்டை வழி அதிக அளவில் ஏற்படவே, மசாஜ் செய்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்து, உள்ளூர் மசாஜ் சென்டரை அனுகியுள்ளார். இதற்காக கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி உதான் தானி என்ற பகுதியிலுள்ள, மசாஜ் செய்யும் பார்லரில் அவர் மசாஜ் செய்துள்ளார். அப்போது அவருக்கு ஏற்பட்ட வலிகளும் சரியாகியுள்ளது.
இருப்பினும் சில தினங்களில் கழுத்தின் பின்புறத்தில் வலி அதிகரிக்கவே, மீண்டும் மசாஜ் செய்ய சென்றுள்ளார். இதன்பிறகு, அவரது கழுத்தில் ஏதோ மறுத்த உணர்வு ஏற்பட, மீண்டும் மூன்றாவது முறையாக அதே மசாஜ் செண்டருக்கு சென்றுள்ளார். ஆனால், கடந்த இரண்டு முறை மசாஜ் செய்த ஊழியர் இம்முறை இல்லை. வேறொரு ஊழியர்தான் மசாஜ் செய்துள்ளார்.
இவர் மசாஜ் செய்தபின் சயாதாவிற்கு கை விரல்களில் உணர்வின்மை, எரிச்சல், வீக்கம் போன்றவை ஏற்பட்டுள்ளது. இதனால், அவதியடைந்த அவர், அக்டோபர் 30 ஆம் தேதி பிபூன்ரக் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அவர்களோ, உதான் தானி மருத்துவமனைக்கு செல்லும்படி தெரிவிக்கவே, நவம்பர் 6 - நவம்பர் 11 வரை உதானி தானியில் தங்கி சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
பின் எக்ஸ்ரே எடுத்து பார்த்தபோது, கழுத்தில் எந்த பிரச்னையும் இல்லை என்று வந்துள்ளது. இதனால் உடல்நிலை சரியானதாக நினைத்து வீடுதிரும்பிய அவர், மீண்டும் நவம்பர் 22 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் இம்முறை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதுதொடர்பாக சாயதா தனது சமூக வலைதளப்பக்கத்தில் இறுதியாக வெளியிட்ட வீடியோவில் அனைத்து தகவல்களையும் அளித்துள்ளார்.
இந்நிலையில், அவரது உடலானது பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதில், மசாஜ் செய்ததால்தான் சாயதாவின் உடல்நிலையில் இத்தகைய பிரச்னை ஏற்பட்டது என்று தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.