Srilanka prison riot  web
உலகம்

இலங்கை | சிறைச்சாலைக்குள் கைதிகள் இடையே வன்முறை.. 25 பேர் உயிரிழப்பு!!

நெகோம்போ நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகள் இரு தரப்பினருக்கும் இடையே வெடித்த மோதலில் 25 பேர் உயிரிழந்துள்ளனர்.

PT WEB

இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை காடாக மாறி மரண ஓலங்கள் காதுகளை கிழிக்கும் இடமாக மாறியது. 1800க்கும் அதிகமான கைதிகள் உள்ள இந்த சிறைச்சாலையில் போதைப் பொருள் விற்பனை தொடர்பாக இரு குழுவினருக்கு இடையே நேற்று மோதல் ஏற்பட்டது. கட்டுக்கடங்காமல் மோதல் தீவிரமடைந்ததால் காவல் துறை சிறப்பு படையினர் சிறைக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.

இந்த மோதலின் போது 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். சுமார் 35க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களை மீட்டு கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

Srilanka Prison Riot

இந்த சம்பவம் தொடர்பாக பெண் கைதிகள் சிறையின் கூரை மீது ஏறி போராட்டம் நடத்தியுள்ளனர். அவர்களை சமாதானப்படுத்திய சிறை பணியாளர்கள் மற்றும் காவல் துறையினர் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இந்நிலையில் இன்று மீண்டும் சிறை கைதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. நிலைமை கை மீறவே அதிரடிப்படையினர் சிறைச்சாலைக்கு விரைந்துள்ளனர். நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த மோதலில் 25 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறைத்துறை அதிகாரிகள் பலரும் இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே, கைதிகளின் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் சிறைச்சாலை முன்பு குவிந்துள்ளதால், அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.