ஈரான் | அலி காமேனியின் இறுதிச்சடங்கு - கண்கலங்க செய்த 14 மாதக் குழந்தையின் சவப்பெட்டி!
அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்த ஈரான் உச்சத் தலைவர் அயதுல்லா அலி காமேனியின் அரசு மரியாதையுடன் கூடிய இறுதிச்சடங்கு தெஹ்ரானில் உள்ள கிராண்ட் மொசல்லாவில் நடைபெறுகிறது. 36 ஆண்டுகள் ஆட்சியிலிருந்த அவரின் சவப்பெட்டிக்கருகே 14 மாதப் பேத்தி ஜஹ்ரா முகமதி கோல்பயேகானியின் சவப்பெட்டி வைக்கப்பட்ட காட்சி அனைவரையும் கண்கலங்கச் செய்தது.
செய்தியாளர் ; m. மீரா
2026 பிப்ரவரி 28 அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதலில், ஈரானில் 36 ஆண்டுகளுக்கும் மேலாக உச்ச அதிகார மையமாக விளங்கிய அயதுல்லா அலி காமேனி போரின் முதல் நாளிலேயே கொல்லப்பட்டார். மேலும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த சிலரும் கொல்லப்பட்டதாக கூறப்பட்டது. இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கிடையில், மத்திய கிழக்கில் போர் தீவிரமாக நீடித்ததால், காமேனியின் இறுதிச்சடங்கு பலமுறை ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் அயதுல்லா அலி காமேனியின் அரசு மரியாதையுடன் கூடிய இறுதிச்சடங்கிற்கான நிகழ்வு இன்று (ஜூலை 4) ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் உள்ள 'கிராண்ட் மொசல்லா' (Grand Mosalla) வளாகத்தில் காமேனியின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இறுதிச் சடங்குகளில் பங்கேற்க ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்த நிலையில், காமேனியின் சவப்பெட்டிக்கு அருகிலேயே அவரது 14 மாதப் பேத்தி ஜஹ்ரா முகமதி கோல்பயேகானியின் (Zahra Mohammadi Golpayegani) சவப்பெட்டியும் வைக்கப்பட்டிருந்தது. இது மிகவும் நெஞ்சை உருக்கும் காட்சியாக அமைந்தது.
முன்னாள் உச்ச தலைவரின் சவப்பெட்டிக்கு மிக அருகில் வைக்கப்பட்டிருந்த அந்தச் சிறு குழந்தையின் சவப்பெட்டி, அஞ்சலி செலுத்த வந்தவர்களை ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியது. அக்குழந்தையின் புகைப்படமும் அதனருகே வைக்கப்பட்டிருந்தது. இச்சடங்கின்போது, காமேனியின் மருமகன், அவரது மூத்த மகள் மற்றும் ஈரானின் புதிய உச்ச தலைவரான அயதுல்லா மொஜ்தபா காமேனியின் மனைவி ஆகியோரது சவப்பெட்டிகளும் வைக்கப்பட்டிருந்தன. அவர்களுக்கும் மக்கள் அஞ்சலி செலுத்தினர்.
ஈரானிய அதிபர் மசூத் பெஷெஷ்கியன் அஞ்சலி செலுத்தியபோது கண்ணீர் மல்கக் காணப்பட்டார். வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சியும் அஞ்சலி செலுத்தினார். ஈரானின் தலைமைப் பேச்சுவார்த்தையாளராகவும் பணியாற்றும் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப், காமேனியின் சவப்பெட்டிக்கு முன்னால் நின்றபோது முற்றிலும் உடைந்து அழுதார். பொதுமக்கள் அஞ்சலி முடிந்த பின்னர் ஊர்வலங்கள் மற்றும் புனித தலங்களில் தரிசனத்துடன் ஜூலை 9ஆம் தேதி மஷ்ஹத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட இருக்கிறது.

