ஈரான் தாக்குதலால் அதிர்ந்த அமெரிக்கா.. வளைகுடாவில் ராணுவத் தளங்கள் மாற்றம்!
மத்திய கிழக்குப்போரில் அமெரிக்கா–இஸ்ரேல் கூட்டு நடவடிக்கைக்கு பதிலடி என ஈரான் வளைகுடா அமெரிக்கத் தளங்கள் மீது பாலிஸ்டிக் ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்கள் நடத்தியதில் சுமார் 40 பில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டதாக CSIS மதிப்பிட்டது.
செய்தியாளர் - M. மீரா
மத்திய கிழக்கில் நடைபெற்ற போரில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டு ராணுவ நடவடிக்கைகளுக்குப் பதிலடியாக வளைகுடா நாடுகளில் இருந்த அனைத்து அமெரிக்கத் தளங்கள் மீதும் ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியது.
இவ்வாறு ஈரான் நடத்திய தாக்குதல்களால் வளைகுடாவில் இருந்த அமெரிக்க சொத்துக்கள் அனைத்தும் சேதமடைந்தது. இதனால் ஏற்பட்ட ஒட்டுமொத்த செலவு சுமார் 40 பில்லியன் டாலர் என்று அமெரிக்காவின் சர்வதேச ஆய்வுகளுக்கான மையம் (CSIS) மதிப்பிட்டது.
பின்பு போரை நிரந்தரமாக நிறுத்தும் வகையிலான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் மின்னணு முறையில் ஜூன் 17 அன்று கையெழுத்திட்டனர். இதனைத் தொடர்ந்து முதற்கட்டமாக சுவிட்சர்லாந்தில் ஜூன் 21 அன்று பேச்சுவார்த்தையும் நடைபெற்றது.
இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைகள் மின்னணு முறையில் கத்தாரில் நடைபெற்றது. இந்த பேச்சு வார்த்தைகளின் எந்த நிலையிலும் இஸ்ரேல் கலந்துக் கொள்ளவில்லை. இதனால் அமெரிக்க அதிபர் டிரம்ப் மர்றும் இஸ்ரேல் பிரதமர் நட்பில் விரிசல் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் பஹ்ரைன், குவைத் மற்றும் சவுதி அரேபியாவில் உள்ள தங்களின் ராணுவத் தளங்களை மேற்கு நோக்கி நகர்த்த அமெரிக்காவின் மத்திய கட்டளைத் தலைமையகம் (CENTCOM) தற்பொழுது திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதன்படி இஸ்ரேலின் தெற்குப் பகுதியில் பரந்து விரிந்து கிடக்கும் நெகேவ் (Negev) பாலைவனப் பகுதி மிகவும் பாதுகாப்பான மற்றும் உகந்த இடமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. நெகேவில் உள்ள இஸ்ரேலிய வான்படைத் தளங்களை விரிவாக்கம் செய்து, அங்கு அமெரிக்கப் படைகளையும் அதிநவீனப் போர் விமானங்களையும் நிறுத்துவதன் மூலம் ஈரானின் அச்சுறுத்தல்களில் இருந்து தங்களின் ராணுவச் சொத்துக்களைப் பாதுகாக்க முடியும் என அமெரிக்கா நம்புகிறது.

