michael jackson x page
உலகம்

இசையால் உலகை மயங்க வைத்த மந்திரவாதி.. மைக்கேல் ஜாக்ஸனின் 17ஆவது நினைவு தினம்!

பாப் இசை மன்னன் மைக்கேல் ஜாக்ஸன் மறைந்து இன்றோடு 17 ஆண்டுகள் ஆகின்றன. அவரது நினைவுகளை சற்றே பின்னோக்கி பார்க்கலாம்.

PT WEB

மைக்கேல் ஜாக்சனின் நடன அசைவுகள் நளினமானவை... முன் நோக்கிச் செல்வது போல் பின்நோக்கிச்செல்லும் மூன் வாக் நடை ஒரு மாயாஜாலம். புவியீர்ப்பு விசைக்கு சவால் விடுப்பது போல 45 டிகிரி கோணத்தில் முன்னோக்கிச் சாயும் அவரது ‘ஆன்டி-கிராவிடி லீன்’ நடனம் இன்றும் ஓர் அறிவியல் அதிசயமாகவே பார்க்கப்படுகிறது. 1982ஆம் ஆண்டில் வெளியான இவரது த்ரில்லர் ஆல்பம் இன்றுவரை ஹிட் அடித்துக்கொண்டிருக்கிறது. இதுவரை 7 கோடிக்கும் அதிகமான எண்ணிக்கையில் விற்பனையாகி இசை உலகின் வரலாற்றையே மாற்றியமைத்துள்ளது த்ரில்லர். BAD, டேஞ்சரஸ், ஹிஸ்டரி ஆகிய ஆல்பங்களும் ரசிகர்களை இசை எனும் சுழலுக்குள் இழுத்துச்சென்றவை.

மைக்கேல் ஜாக்சன்

மைக்கேல் ஜாக்ஸன் வெறும் பாடகர் மட்டுமல்ல, சிறந்த மனிதாபிமானியும் கூட. வீ ஆர் த வேர்ல்டு மற்றும் ஹீல் த வேர்ல்டு போன்ற பாடல்கள் மூலம் உலக அமைதிக்காகவும், ஏழைக் குழந்தைகளின் கல்வி மற்றும் மருத்துவத்துக்காகவும் கோடிக்கணக்கான டாலர்களை நிதியுதவியாக வழங்கினார். வாழ்ந்தது 50 ஆண்டுகள்தான் என்றாலும் அதில் 40 ஆண்டுகள் புகழ் வெளிச்சத்தில் மிதந்தவர்.

ஆனால் 2003ஆம் ஆண்டுக்குப் பின் அவரது வாழ்க்கை முற்றிலும் துயரம் நிறைந்ததாக மாறியிருந்தது. போதை, உடல் பிரச்சினைகள், கடன், வழக்குகள் என உழன்றது வாழ்க்கை. அது 2009ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் தேதி, உலக சுற்றுப்பயணம் தொடங்க ஒரு வார காலமே இருந்தபோது, லாஸ் ஏஞ்சலஸ் நகரில் ஜாக்சனின் வாழ்க்கை முடிவுக்கு வந்தது. மயக்க மருந்துகளையும் வலி நிவாரணியையும் அதிகமாகக் கொடுத்ததால் ஜாக்சன் இறந்துபோனதாகக் கூறப்பட்டது. இன்வின்சிபிள், த்ரில்லர், ஸ்க்ரீம், ஹீல் த வேர்ல்டு, இம்மார்ட்டல், ஹிஸ்டரி என்பது போன்ற மைக்கேல் ஜாக்சனின் ஆல்பங்கள், பாடல்கள் பெயர்களே அவரது வாழ்க்கைப் பயணத்தின் அத்தியாயங்களாகவும் அமைந்துவிட்டது விநோதமான ஒன்று...