\
AP CM Chandrababu Naidu launched India's first and largest private gold mine
andhra pradeshx page

இந்தியாவின் அடுத்த KGF..? தங்க வேட்டைக்கு தயாரான ஆந்திரா.. SGF-ஐ தொடங்கிவைத்த AP முதல்வர்!

நாட்டின் மிகப்பெரிய தனியார் துறை தங்க சுரங்க திட்டமாக இது கருதப்படுகிறது.
Published on

ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு கர்னூல் மாவட்டத்தில் இந்தியாவின் முதல் மற்றும் மிகப்பெரிய தனியார் துறை தங்கச் சுரங்கத் திட்டத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கிவைத்தார்.

செய்தியாளர்: விக்கி

ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம் - ஜனசேனா - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு உள்ள கர்னுால் மாவட்டத்தில், 'ஜியோ மைசூர் சர்வீசஸ் இந்தியா' மற்றும் 'டெக்கான் கோல்டு மைன்ஸ்' ஆகிய தனியார் நிறுவனங்கள் தங்க சுரங்க திட்டத்தில் ஈடுபட உள்ளன. இதற்காக மாநில அரசு 1,500 ஏக்கர் நிலம் ஒதுக்கியுள்ளது.

நாட்டின் மிகப்பெரிய தனியார் துறை தங்க சுரங்க திட்டமாக இது கருதப்படுகிறது. அதில், முதல் கட்டமாக 600 ஏக்கரில் சுரங்க பணிகளை முதல்வர் சந்திரபாபு நாயுடு துவக்கி வைத்தார். மேலும், இரண்டாம்கட்ட திட்டப் பணிகளுக்கான அடிக்கல்லையும் நாட்டினார்.

இதுகுறித்து ஆந்திர அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், தங்க சுரங்கத்தில் இருந்து முதல் ஆண்டில் 400 கிலோ தங்கம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் ஆண்டு முதல் ஆண்டுக்கு, 900 கிலோ தங்கம் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. பின், ஆண்டுக்கு, 2,000 கிலோ தங்கம் உற்பத்தி செய்யும் அளவுக்கு திட்டத்தை விரிவுபடுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் வாயிலாக 700 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

சுரங்கத்தில் உற்பத்தியாகும் தங்கத்தின் மதிப்பில் 4 சதவீதம் உரிமைத் தொகையாக மாநில அரசுக்கு கிடைக்கும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. மேலும், முதல் ஆண்டில் ₹57 கோடியும், உற்பத்தி 900 கிலோவாக உயரும்போது ஆண்டுக்கு ₹144 கோடியும் அரசுக்கு வருவாய் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூல் மாவட்டம், துக்கலி மண்டலத்தில் உள்ள ஜொன்னகிரி கிராமத்தில் இந்தச் சுரங்கம் அமைந்துள்ளது. இந்தத் திட்டத்தின் முக்கியத்துவத்தைக் கருதி, இந்த கிராமத்தை 'ஸ்வர்ணகிரி' என மறுபெயரிட ஆந்திர அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. வரலாற்று ரீதியாக கர்நாடகாவின் கோலார் தங்க வயல்கள் KGF-உடன் ஒப்பிடப்படும் இத்திட்டத்திற்கு SGF "சுவர்ணகிரி தங்க வயல்" என்று பெயரிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com