நெருக்கடிநிலையின் 51ஆவது ஆண்டு.. கிளர்ந்தெழுந்த இந்தியா.. ஜனநாயகத்தின் கருப்புப் பக்கம்!!
1971 பொதுத்தேர்தலில் ராய்பரேலி தொகுதியில் இந்திரா காந்தி பெற்ற வெற்றி செல்லாது என்று 1975இல் தீர்ப்பளித்து அவரது எம்.பி. பதவியைப் பறித்தது அலகாபாத் உயர் நீதிமன்றம். ஏற்கெனவே பிரதமர் இந்திராவின் ஆட்சிக்கு எதிராக பல போராட்டங்கள் நடந்துகொண்டிருந்த காலகட்டம் இது. புதிதாக உருவான அரசியல் புயலை எதிர்கொள்ள நெருக்கடிநிலையை கொண்டுவந்தார் இந்திரா. 1975 ஜூன் 25 நள்ளிரவில் தொடங்கிய இந்த நெருக்கடி நிலை, 1977 மார்ச் 21 அன்று விலக்கிக்கொள்ளப்பட்டது. கிட்டத்தட்ட ஒன்றே முக்கால் ஆண்டுகள் - அதாவது 21 மாதங்களுக்கு நீடித்தது. இந்திய மக்களின் அடிப்படை உரிமைகள் முறித்துப்போடப்பட்ட காலகட்டம் இது என்று சொல்லலாம்.
ஜனநாயகத்தைப் பேசும் கூட்டங்கள், போராட்டங்கள் முடக்கப்பட்டன. அரசியல் பேசுவோர், ஆட்சியை விமர்சிப்போர் யாராக இருந்தாலும் கைது செய்யப்பட்டார்கள். இன்றைய பாஜகவின் தாய் அமைப்பான ஜனசங்கம், சிபிஎம், திமுக என்று எதிர்க்கட்சிகளின் முக்கிய தலைவர்கள் உட்பட ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். கடுமையான பத்திரிகை தணிக்கை நிலவியது. அரசை விமர்சித்த ‘இண்டியன் எக்ஸ்பிரஸ்’ உள்ளிட்ட ஊடகங்கள் வேட்டையாடப்பட்டன. இவ்வளவுக்கு மத்தியிலும் இந்தியா போராடியது.
பிஹாரின் சோஷலிஸ்ட் தலைவர் ஜெயபிரகாஷ் நாராயண் இந்த எதிர்ப்பின் மைய சக்தியாக இருந்தார். நாட்டைக் கடும் அழுத்தத்துக்கு உள்ளாக்கிய நெருக்கடிநிலையை 635 நாட்களுக்குப் பிறகு முடிவுக்கு கொண்டுவந்தார் இந்திரா. அடுத்த தேர்தலில் காங்கிரஸ் மோசமான தோல்வியைத் தழுவியது. சுதந்திரத்துக்குப் பின் முதல் முறையாக காங்கிரஸ் இல்லாத ஆட்சியை ஜனதா கட்சி அமைத்தது. மொரார்ஜி தேசாய் பிரதமரானார். ஆனாலும், இந்திய ஜனநாயகத்துக்கு நெருக்கடிநிலை உண்டாக்கிய சேதங்கள் இன்றும் தொடர்கின்றன!

