தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசியாவில் எல் நினோ தாக்கத்தால் ஏற்பட்ட வறண்ட காலநிலை மற்றும் குறைந்த மழையளவு காரணமாக காட்டுத்தீ பரவல் தீவிரமடைந்துள்ளது. விவசாய நிலங்களை சுத்தம் செய்ய வைக்கப்பட்ட தீயே இத்தகைய பேரழிவுக்கு காரணமாக கூறப்படும் நிலையில், இது தொடர்பான வழக்குகளில் 72பேரை கைது செய்திருக்கிறது அந்நாட்டு காவல்துறை. இதற்கிடையில், கடந்த ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான காலக்கட்டத்தில் ஏற்பட்ட பல்வேறு காட்டுத்தீ சம்பவங்களில் ஏறக்குறைய 3 லட்சம் ஹெக்டர் நிலங்கள் தீக்கிரையாகியுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
இந்தச் சூழலில் தான், சூப்பர் மேன் உடையணிந்த 17 வயது சிறுவன் ஒருவன், காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் களமிறங்கி, தீயை அணைக்க போராடிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி கவனம் பெற்றுள்ளன. குறிப்பாக, இந்தோனேசியாவின் மத்திய கலிமந்தான் (Central Kalimantan) மாகாணத்தில் உள்ள பாலங்கரயா (Palangka Raya) பகுதியில், தற்போது காட்டுத் தீ பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், 17 வயதான ருடியன்சா (Rudiyansah), தனது தந்தையுடன் இணைந்து காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
ருடியன்சாவின் தந்தை முல்யாடி (Mulyadi) கடந்த 2020-ம் ஆண்டு தன்னார்வ தீயணைப்பு குழு ஒன்றை உருவாக்கியுள்ளார். இந்நிலையில், 2023-ம் ஆண்டு முதல் பள்ளி முடிந்த பிறகு, தனது ஓய்வு நேரத்தை தந்தையுடன் தீயணைப்பு பணிகளில் செலவிட்டு வருகிறார் ருடியன்சா. ஆனால், இந்த ஆண்டு அவர் செய்த ஒரு விஷயம்தான் உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்திருக்கிறது. தனக்குப் பிடித்த சூப்பர்மேன் கதாபாத்திரத்தின் உடையை அணிந்துகொண்டு, கையில் தண்ணீர் குழாயுடன் காட்டுத் தீயை அணைக்க களத்தில் இறங்கியுள்ளார்.
சூப்பர்மேன் உடையில் அவர் தீயை அணைக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி, லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ளன. இதையடுத்து, இந்தோனேசியாவின் வனத்துறை அமைச்சரே அவரை ‘வனத்தின் ஹீரோ’ என்று பாராட்டியுள்ளார். சூப்பர்மேன் உடையை அணிந்தது வெறும் பொழுதுபோக்குக்காகத்தான் என்று கூறும் ருடியன்சா, வீட்டில் நான் ஒரு சாதாரண பையன்தான் எனவும் ஆனால், தன் தந்தை தீயை அணைக்க வெளியே செல்லும்போது, அவருடன் நானும் செல்கிறேன் எனவும் தெரிவித்திருக்கிறார். எதிர்காலத்தில் வனத்துறை அதிகாரியாக வேண்டும் அவரின் கனவு.
சூப்பர்மேன் உடை வெறும் வேடம்தான் என்றாலும், காட்டுத் தீக்கு எதிரான அவரது போராட்டம், தற்போது உண்மையான ஹீரோவாக அவரை மாற்றியிருக்கிறது.