உறைந்து போய் நின்ற பெண்? ராணுவ வீரர்கள் செய்த செயல்.. கண்ணீர் வரவைத்த தருணம் உண்மையா?
செய்தியாளர் - கார்த்திகேயன்
கடந்த ஆகஸ்டு 26-ஆம் தேதி, நேபாளத்தையே புரட்டிப்போட்ட பெருவெள்ளம் தான், உலக மக்கள் பலரையும் பெரும் வேதனைக்கு ஆளாக்கியுள்ளது. நேபாளத்தின் எந்தவொரு பகுதிக்கு சென்றாலும், மக்களின் ஓலமும், கண்ணீர் விட்டு கதறி அழும் சப்தங்களும், அஞ்சி நடங்கிக் கிடக்கும் பதட்டமும் தான் சிதறிக் கிடக்கிறது. சுனாமி போல் கட்டுக்கடங்காமல் வந்த வெள்ளத்தில், சிறு துரும்புகள் போன்று அடித்து செல்லப்பட்ட இன்னும் பலபேர், தங்களை யாராவது காப்பாற்ற வரமாட்டார்களா என்று உயிரை கையில் பிடித்து வைத்து காத்துக் கிடக்கின்றனர். இவ்வாறு பல்வேறு உணர்வுகளையும், வலிகளையும் சுமந்துக் கிடக்கும் இந்த மிகப்பெரிய பேரிடர், மற்றொரு கனமான வலியையும் ஏற்படுத்தி, பலரையும் கண்ணீர் சிந்தி அழவைத்துள்ளது.
ஆனால், பொதுமக்கள் பலரின் கண்ணீருக்கு சொந்தமான இந்த சம்பவம், உண்மையில் நடக்கவே இல்லை. அது ஏ.ஐ.ஆல் உருவான, ஒரு டீப் ஃபேக் வீடியோ என்று சொன்னால் நம்புவீர்களா? அதாவது, நேபாள பெருவிபத்தில், தனது ஒட்டுமொத்த குடும்பத்தையும், வீட்டையும் இழந்த பெண் ஒருவர், பிரம்மை பிடித்தது போல் அமர்ந்திருக்கும் வீடியோ ஒன்று, இணையத்தில் வெளியாகியிருந்தது. இது பார்வையளர்கள் பலரையும் உலுக்கியிருந்தது. அவர் கதறி அழுத்திருந்தால் கூட நான் பாதித்திருக்க மாட்டேன்.. அசையாமல் நின்ற அந்த பெண், தான் அழாமல் எங்களை அழ வைத்துவிட்டாள் என்று மிகவும் எமோஷனலாக பலரும் கமெண்ட்ஸ்களை பதிவிட்டு வந்தனர்.
ஆனால், அந்த வீடியோவில் இருப்பது உண்மையான பெண்ணே கிடையாது. அது ஏ.ஐ வீடியோ என தெரிந்த பிறகு, கமெண்ட் செய்தவர்கள் பலரும் இப்படி ஏமாந்துவிட்டோமே என, தங்களது ஏமாற்றத்தை பதிவு செய்துள்ளனர். சமூக வலைதளங்களில் பார்வைகளை பெறுவதற்கும், அந்த பெண்ணுக்கு உதவுங்கள் என்று கூறி பணத்தை பெற்று மோசடி செய்வதற்கும், இந்த வீடியோவை பயன்படுத்து சிலர் முயற்சிப்பதாகவும் சொல்லப்படுகிறது. எனவே, இதுகுறித்து தெரியவந்தால் பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும்.. பெரும் இயற்கை பேரிடர், மிகப்பெரிய எழுச்சி போராட்டங்கள் நடக்கும்போது, பழைய வீடியோக்களை புதியது போலவும், ஏ.ஐ. வீடியோக்களையோ உண்மையானது போலவும் பரப்பி விடுவது வழக்கம். அந்த வகையில் தான் இந்த வீடியோவும் வைரலாகியிருக்கிறது.

