vijay vishwa and pa ranjith instagram
டிரெண்டிங்

”அவரைக் காணவில்லை..” பா.ரஞ்சித்தை கடுமையாக விமர்சித்த பிரபல நடிகர்.. பின்னணி என்ன?

இயக்குநர் பா.ரஞ்சித்தை ’போலி போராளி’ என்று பிரபல நடிகர் விஜய் விஷ்வா பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

PT WEB

செய்தியாளர் - கார்த்திகேயன்

குரு சோமசுந்தரம், அனுமோல் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ’பாரிஸ் கஃபே’. இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபிள் நடைபெற்றது.

pa ranjith

அப்போது, மேடையில் பேசிய நடிகர் விஜய் விஷ்வா, ”பல்வேறு திரைப்படங்கள் நீண்ட வருடங்களாக ரிலீஸ் ஆகாமல் உள்ளன. என்னுடைய படங்களில்கூட 4 இன்னும் ரிலீஸ் ஆகாமலே உள்ளன. திரையரங்குகள் கிடைக்காததால்தான் இந்த நிலை நீடிக்கிறது. எனவே, தமிழக அரசு சார்பில், ’வெற்றி’ என்ற பெயரில் புதிய ஓடிடி தளத்தைத் தொடங்கி, வெளியாகாமல் உள்ள படங்களை, அதில் வெளியிட வேண்டும்” என்று முதலமைச்சர் விஜய்க்கு கோரிக்கை வைத்தார்.

தொடர்ந்து பேசிய அவர், ”கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மற்ற விஷயங்களுக்கு எல்லாம் குரல் கொடுக்கும் பொய்ப் போராளிகள், இந்த விவகாரம் குறித்து ஏன் குரல் கொடுக்கவில்லை. எனக்கு முதல் வாய்ப்பு கொடுத்த இயக்குநர்தான் பா.ரஞ்சித். அதற்காக நான் வாழ்நாள் முழுவதும் கடமைப்பட்டுள்ளேன். இருப்பினும், எல்லா விஷயத்திற்கும் குரல் கொடுக்கும் அவர்கூட, இதற்கு எதிராகப் பேசவில்லை. சமூக வலைதளங்களில் தேடிப் பார்த்தேன். அவர்களைக் காணவில்லை என்று தெரிவித்தார்.

pa ranjith

விஜய் விஷ்வாவின் பேச்சு நிகழ்ச்சிக்கு சம்பந்தம் இல்லாமல் செல்வதை அறிந்த நிகழ்ச்சி ஏற்பட்டாளர், அவரை தடுத்து நிறுத்திய போதிலும், சொல்ல வந்ததை முழுதாக பேசிவிட்டே அங்கிருந்து நகர்ந்தார்.

பின்னர், ஆணவப் படுகொலைகளுக்கு எதிராகத் தொடர்ச்சியாக குரல் கொடுத்து வரும் கௌசல்யா ஷங்கர், மேடையில் பேச அழைக்கப்பட்டார். அப்போது, ”இந்த நிகழ்ச்சியில் எனக்கு ஒரு சிறிய நெருடல் உள்ளது. நடிகர் விஜய் விஷ்வா பேசும்போது ‘போலிப் போராளிகள்’ என்று குறிப்பிட்டார். அவ்வாறு கூறுவதற்கு அவர் சரியான நபரா என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால், நீங்கள் கூறியதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்” என தெரிவித்தார்.

pa ranjith

இதனைத் தொடர்ந்து, அங்கிருந்த பத்திரிகையாளர்கள் சிலரும் விஜய் விஷ்வா பேசியது தவறு என்று சுட்டிக்காட்டியதால், அவர்களிடமும் அந்த நடிகர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால், நிகழ்ச்சி மேடையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.