படப்பிடிப்பின் போது ஸ்டண்ட் கலைஞர் உயிரிழப்பு.. குடும்பத்தினருக்கு இயக்குநர் பா.ரஞ்சித் நிதியுதவி!
’தங்கலான்’ திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் ’வேட்டுவம்’. இப்படத்தில் அட்டகத்தி தினேஷ், ஆர்யா மற்றும் கலையரசன் போன்ற திரை நட்சத்திரங்கள் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர். பா. ரஞ்சித்தின் நீலம் புரொடெக்ஷன் இப்படத்தை தயாரிக்கிறது.
இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு நாகப்பட்டினத்தில் நடந்துவந்த நிலையில், சண்டைக்காட்சி படமாக்கப்பட்ட போது ஸ்டண்ட் கலைஞர் மோகன்ராஜ் பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவத்தை தொடர்ந்து படப்பிடிப்புக்கு அனுமதி பெறாத நாளில் ஷீட்டிங் நடத்தியதாக குற்றஞ்சாட்டி 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டது.
என்ன நடந்தது?
திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித்தின் வேட்டுவம் படப்பிடிப்பு நாகப்பட்டினம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது. மூன்று நாட்கள் அனுமதி பெற்று படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில், நாகப்பட்டினம் அருகே விழுந்தமாவடி அளப்பகுதியில் ஜுலை 13-ம் தேதி அனுமதி பெறாமல் சண்டை காட்சிக்கான படப்பிடிப்பு நடந்துள்ளது.
அப்போது காஞ்சிபுரம் மாவட்டம் பூங்கண்டம் பகுதியை சேர்ந்த ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ் (52 வயது) காரில் இருந்து தாவி செல்லும் கட்சிகள் படமாக்கப்பட்டது. இந்த காட்சி படப்பிடிப்பின்போது மோகன்ராஜ் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து இயற்கைக்கு மாறுபட்ட மரணம் என வழக்கு பதிவுசெய்த கீழையூர் போலீசார், திரைப்பட இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் பா.ரஞ்சித், சண்டை கலைஞர் வினோத், நீலம் தயாரிப்பு நிர்வாகி ராஜ்கமல், வாகன உரிமையாளர் பிரபாகரன் ஆகியோர் மீது உயிருக்கும் உடலுக்கும் தீங்கு விளைவிக்கும் செயல் (125), வாகனத்தை அஜாக்கிரதையாக இயக்குதல் (289), கவனம் இல்லாமல் மரணத்தை விளைவித்தல் (106) (1) ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
சிம்புவை தொடர்ந்து பா. ரஞ்சித் நிதியுதவி..
படப்பிடிப்பின் போது ஸ்டண்ட் கலைஞர் மோகன் ராஜ் உயிரிழந்த நிலையில், நடிகர் சிம்பு 1 லட்சம் நிதியுதவி வழங்கியதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் வேட்டுவம் படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளருமான பா. ரஞ்சித் 20 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.
இதற்கு முன்பு ஸ்டண்ட் கலைஞர் மோகன்ராஜ் உயிரிழந்த விவகாரத்தில் எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுக்கு விளக்கமளித்திருந்த பா. ரஞ்சித், சண்டைக்காட்சிகள் அனைத்து விதிகளையும் பின்பற்றியே படமாக்கப்பட்டது என்றும், பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்பட்டன என்றும், மோகன்ராஜ் அண்ணாவின் மரணம் எங்கள் அனைவரின் இதயத்தையும் உடைத்துவிட்டது எனவும் தெரிவித்திருந்தார்.