AI bot helps for 1000 jobs interview web
டெக்

“தூங்கும்போது AI மூலம் 1000 வேலைகளுக்கு விண்ணப்பம்..” - ஏஐ மேஜிக்கால் கிடைத்த 50 ஜாக்பாட்!

ஒரே இரவில் ஆயிரம் வேலைகளுக்கு தனி நபராக ஏஐ உதவியின் மூலம் அப்ளை செய்துள்ளார் ஒருவர். அதன் மூலம் அவர் 50 வேலைகளுக்கு முழு தயார்படுத்துதலுடன் நேர்காணலுக்கு சென்றதாகவும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

Rajakannan K

என்னதான் பெரிய பெரிய படிப்புகளை படித்து இருந்தாலும் எதேனும் ஒரு தேர்வுக்கு விண்ணப்பிப்பது, வேலைக்கு விண்ணப்பிப்பது என்று வந்துவிட்டால் பலருக்கும் சற்றே தடுமாற்றம் இருக்கும். இந்த பார்மெட் சரியாக இருக்குமா? எல்லாம் சரியாக பூர்த்தி செய்துவிட்டோமா? என்று பல முறை சரிபார்ப்பார்கள். அதற்காக கூகுளில் தேடி பல பார்மெட்டுகளில் இருந்து தமக்கு பிடித்த ஒன்றை சரிபார்ப்பார்கள்.

இப்படி இருக்க ஒரு நபர் ஒரே மாதத்தில் 1000 வேலைகளுக்கு விண்ணப்பித்திருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா?. என்னது ஒரே மாதத்தில் ஆயிரம் வேலைகளா.. கேட்பதற்கே ஆச்சர்யமாக இருக்கிறது அல்லவா. ஆம், தொழில்நுட்ப புரட்சிகள் இதை சாத்தியப்படுத்தி இருக்கிறது. இதற்காக அவர் எந்த தயாரிப்பையும் அவராக முன்னெடுக்கவில்லை, சிவி தயார்செய்வதிலிருந்து, நேர்காணலில் என்ன கேள்விகள் கேட்பார்கள், அதற்கு என்ன விடையளிக்கலாம் என்பது வரை அனைத்தையும் சேகரித்து கையில் கொடுத்துள்ளது செயற்கை நுண்ணறிவு.

AI

இதுக்குறித்து ரெட்டிட் பயனாளி ஒருவர், தனக்கு நிகழ்ந்த அனுபவத்தை தனது ரெட்டிட் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதில் ஒரே இரவில் 1000 வேலைகளுக்கு தான் விண்ணப்பித்தது எப்படி என்பதை சுவையாக தெரிவித்து இருக்கிறார்.

சுவாரசியத்தை பகிர்ந்த நபர்..

அவர் தன்னுடைய பதிவின் தொடக்கத்தில் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 1000 வேலைகளுக்கு விண்ணப்பித்ததாகவும், அதில் 50 நேர்க்காணல்களுக்கு அழைப்பு வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து, முதலில் அவர் ஏஐ பாட்டை உருவாக்கி அதில் விண்ணப்பிப்பவரின் தகவல்களை எப்படி திரட்டுவது, வேலைக்கான தனித்த குறிப்புகளை தயார் செய்தல், தனித்தன்மையான CV க்கள் மற்றும் கவர் லெட்டர்களை தயாரித்தல், வேலை தொடர்பான தனித்த கேள்விகளுக்கான விடைகள், ஆட்டோமேட்டிக்காக வேலைக்கு விண்ணப்பித்தல் போன்றவற்றை பயன்படுத்தியுள்ளார்.

பின்னர், மேற்கண்ட தகவல்கள் எல்லாம் தான் தூங்கும் நேரத்தில் நடந்து முடிந்துள்ளதாக குறிப்பிட்டிருக்கிறார். ஏஐ தொழில்நுட்பம் நொடிப்பொழுதில் பல தகவல்களை திரட்டி கொடுத்துள்ளது என்பதை தெரிவித்துள்ளார்.

மேலும், “இந்த முறை நம்பமுடியாத அளவிற்கு பயனுள்ளதாக இருக்கும். ஒவ்வொரு வேலை விளக்கத்திற்கும் ஏற்றவாறு CV-க்கள் மற்றும் கவர் கடிதங்களை உருவாக்குவதன் மூலம், எனது ஸ்கிரிப்ட் AI மற்றும் மனித ஆட்சேர்ப்பு செய்பவர்களால் கவனிக்கப்படுவதற்கான வாய்ப்புகளை கணிசமாக அதிகரிக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

தொழில்நுட்பம் சார்ந்து எழுந்த கேள்வி?

அத்துடன், இந்த தொழில்நுட்பம் குறித்த கேள்விகளையும் முன் வைத்துள்ளார். “இந்தத் தொழில்நுட்பப் புரட்சியைக் கவனிக்கும்போது, வேலை உலகில் ஏற்படும் ஆழமான தாக்கங்களைப் பற்றி என்னால் சிந்திக்காமல் இருக்க முடியவில்லை. திறமையாக இருந்தாலும், வேலை விண்ணப்பங்களின் ஆட்டோமேஷன் என்பது தொழில்முறை உறவுகளின் தன்மை பற்றிய கேள்விகளை எழுப்புகிறது.

ரெட்டிட் பதிவு

வேலைக்கான தேர்வு செயல்முறையை மேம்படுத்த நாம் முற்படும்போது, பணிச்சூழலில் அடிக்கடி மாற்றத்தை ஏற்படுத்தும் மனித செயல்பாடுகளை இழக்க நேரிடும். முன்னால் உள்ள சவால் தொழில்நுட்பம் தொடர்பானது மட்டுமல்ல, நெறிமுறை மற்றும் சமூக தன்மையானதும் கூட. செயற்கை நுண்ணறிவின் செயல்திறன் மற்றும் மனித தொடர்புகளின் செழுமை ஆகியவற்றுக்கு இடையே ஒரு நுட்பமான சமநிலையை நாம் கண்டுபிடிக்க வேண்டும். அப்போதுதான், வேலையின் எதிர்காலத்தை உருவாக்க முடியும், அது உற்பத்தியை மட்டுமல்ல, அனைவருக்கும் நிறைவாகவும் அர்த்தமுள்ளதாகவும் இருக்கும்” என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

தான்

இது மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இருப்பினும் இந்தப் பதிவுக்கு கீழே பலரும் ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள்.