WhatsApp Pay அதன் UPI சேவையை அனைத்து பயனர்களுக்கும் நீட்டிக்கிறது.. NPCI அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
இந்தியாவில் யுபிஐ சேவையானது அதிகப்படியான பணம் வைத்திருப்பவர்கள், மிடில் கிளாஸ், லோயர் மிடில் கிளாஸ் என்ற எந்தபாகுபாடும் இல்லாமல் அனைத்து தரப்பு மக்களிடமும் சென்று சேர்ந்துள்ளது.
பெரிய மால்களில் செய்யப்படும் பணப்பரிவர்த்தனை இல்லாமல் தற்போது டீ கடைகளில் கூட 10ரூபாய்க்கு யுபிஐ சேவையை பயன்படுத்துபவர்கள் அதிகரித்து வருகின்றனர். இந்த யுபிஐ பணப்பரிவர்த்தனை அறிமுகமானபிறகு பெரும்பாலான இந்தியவர்கள் பாக்கெட்களிலும், பர்ஸ்களிலும் பணத்தை வைத்துக்கொள்வதில்லை பெரும்பாலும் விரும்புவதில்லை. இதன் காரணமாகவே Phone Pe மற்றும் Google Pay பயன்பாடுகளானது அதிகரித்தது.
இந்த சூழலில் யுபிஐ பணப்பரிவர்த்தனையில் மெட்டாவின் வாட்ஸ்அப்பும் இணைந்துகொண்டது. ஆனால் தொடக்கத்தில் 2020-ம் ஆண்டு வாட்ஸ்அப் பயனர்களில் 40 மில்லியன் மக்களுக்கு மட்டுமே யுபிஐ சேவையை வழங்கவேண்டும் எனவும், படிப்படியாக அதன் வரம்பை உயர்த்திக்கொள்ளவும் தேசிய கொடுப்பனவு கழகமானது (NPCI) வாட்ஸ்அப்பிற்கு அறிவுறுத்தியது.
அதன்படி கடந்த 2022-ம் ஆண்டு அதன் வரம்பானது 100 மில்லியனாக உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது ஒட்டுமொத்தமாக வரம்பை நீக்கி வாட்ஸ்அப் தங்களின் அனைத்து பயனர்களுக்கும் வாட்ஸ்அப் பேவின் மூலம் யுபிஐ சேவையை பகிர்ந்துகொள்ளலாம் என தேசிய கொடுப்பனவு கழகமானது அறிவித்துள்ளது. வாட்ஸ்அப் 500 மில்லியன் பயனர்களை கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
வரம்பை நீக்கி அதிகாரப்பூர்வ அறிவிப்பு..
வாட்ஸ்அப் பேவின் யுபிஐ வரம்பை நீக்குவதாக தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) ஒரு சுற்றறிக்கை மூலம் அறிவித்துள்ளது.
அந்த அறிவிப்பின் படி, “நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (என்பிசிஐ) உடனடியாக அமலுக்கு வரும் வகையில், WhatsApp Pay-க்கான யுபிஐ பயனர்களுக்கான ஆன்போர்டிங் வரம்பை நீக்கியுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம், WhatsApp Pay இப்போது UPI சேவைகளை இந்தியாவில் உள்ள அதன் முழு பயனர் தளத்திற்கும் நீட்டிக்க முடியும்.
முன்னதாக, NPCI வாட்ஸ்அப்பின் UPI பயனர் தளத்தை படிப்படியாக விரிவுபடுத்த அனுமதித்தது. இந்த அறிவிப்பின் மூலம், வாட்ஸ்அப் பேவில் பயனர் ஆன்போர்டிங் மீதான வரம்பு கட்டுப்பாடுகளை NPCI நீக்குகிறது. ஏற்கனவே உள்ள அனைத்து UPI வழிகாட்டுதல்கள் மற்றும் TPAP விதிமுறைகளுக்கு WhatsApp Pay தொடர்ந்து இணங்க வேண்டும்” என்று சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
30% கட்டுப்பாடு அளவு தள்ளிவைப்பு..
கடந்த 2021-ம் ஆண்டு தேசிய கொடுப்பனவு கழகமானது (NPCI) ஒரேஒரு மூன்றாம் தரப்பு ஆப்பானது அதிகப்படியான யுபிஐ சேவையை வழங்குவதை கட்டுப்படுத்தி, மற்ற ஆப்களின் வளர்ச்சியையும் உறுதிசெய்யும் வகையில் புதிய கட்டுப்பாட்டு மார்க்கெட் விதிமுறையை கொண்டுவந்தது.
அதன்படி ஒவ்வொரு மூன்றாம் தரப்பு ஆப்களும் 30%-க்கு மேல் யுபிஐ சேவையை கொண்டிருக்க கூடாது என்று கூறப்பட்டது. ஆனால் அந்த யுபிஐ மார்க்கெட் ரூலானது மீண்டும் இரண்டு வருடத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி 2026 டிசம்பர் 31 வரை இந்த கட்டுப்பாட்டு விதிமுறை அமல்படுத்துவதை தள்ளிவைத்து அறிவித்துள்ளது.
தற்போது யுபிஐ சேவையில் Phone Pe மற்றும் Google Pay இரண்டும் சேர்ந்து 85% யுபிஐ சேவையை பெற்று ஆதிக்கம் செலுத்திவருகின்றன. Phone Pe 48% யுபிஐ சேவையையும், Google Pay 37% யுபிஐ சேவையையும் பெற்றுள்ளன. இதில் போட்டியாக வந்த வாட்ஸ்அப் தற்போது மிகப்பெரிய முன்னெடுப்பிற்கான பாதையை கண்டறிந்துள்ளது.