ஃபேஸ்புக், இன்ஸ்டாவில் பதிவுகளுக்கான தணிக்கை நடைமுறை ரத்து.. மார்க் ஜுக்கர்பெர்க் அதிரடி அறிவிப்பு
ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களில் பதிவுகளின் உண்மைத்தன்மையை பரிசீலிக்கும் நடைமுறை கைவிடப்படுவதாக அதன் தலைவர் மார்க் ஜுக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக தளங்களில் கருத்து சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் நடவடிக்கையாக இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஜுக்கர்பெர்க் வீடியோ மூலம் விளக்கம் அளித்துள்ளார்.
அதற்கு பதில் எக்ஸ் தளத்தைப் போல பயனர்கள் அளிக்கும் தகவலின் படி உண்மைக்கு மாறான தகவல்கள் நீக்கப்படும் என அவர் கூறியுள்ளார். ஜுக்கர் பெர்க்கின் இம்முடிவை டொனால்டு ட்ரம்ப் வரவேற்றுள்ளார்.
ஜுக்கர்பெர்க் முடிவை வரவேற்ற மஸ்க்..
சமூக ஊடக தளங்களில் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமுக்கு போட்டியாக உள்ள எக்ஸ் தளத்தின் தலைவர் எலான் மஸ்க்கும் ஜுக்கர்பெர்க்கின் அறிவிப்பை வரவேற்றுள்ளார். THIS IS COOL என தனது எக்ஸ் சமூக தள பக்கத்தில் எலான் மஸ்க் பதிவிட்டுள்ளார்.
மெட்டா குழுமத்தின் சமூக ஊடகங்களில் தணிக்கை முறை கடுமையாக இருப்பதாக குடியரசுக் கட்சி விமர்சித்து வந்த நிலையிலும், அக்கட்சி இன்னும் 10 நாட்களில் அரியணை ஏற உள்ள நிலையில் ஜுக்கர்பெர்க்கின் முடிவு கவனத்தை ஈர்த்துள்ளது.