திருமாவளவன் புதிய தலைமுறை
தமிழ்நாடு

தேர்தல் வரைக்கும் பாஜக - அதிமுக கூட்டணி தொடருமா? - சந்தேகம் எழுப்பும் திருமாவளவன்!

பாஜக - அதிமுக கூட்டணி தொடருமா? என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

PT WEB

செய்தியாளர்: லெனின்.சு

வடகாட்டில் உள்ள காலி மைதானத்தை பயன்படுத்திக் கொள்ள, நீதிமன்றத்தின் மூலம் பட்டியலின மக்கள் ஆணை பெற்றுள்ள நிலையில், அதற்கு காவல்துறையினர் அனுமதி வழங்காமல் தடைவிதித்துள்ளனர். இதனை எதிர்த்து புதுக்கோட்டையில் விசிக சார்பில் நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வற்காக விமானம் மூலம் திருச்சிக்கு வந்த விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளார்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்...

supreme court

பல்கலைக்கழக மசோதாக்களை உச்சநீதிமன்றம் அங்கீகரித்து விட்டது:

வடகாட்டில் உள்ள காலி மைதானத்தை பயன்படுத்திக் கொள்ள, நீதிமன்றத்தின் மூலம் பட்டியலின மக்கள் ஆணை பெற்றுள்ளனர். இந்நிலையில், அதற்கு காவல்துறையினர் அனுமதி வழங்காமல் தடைவிதித்துள்ளனர். இதனை எதிர்த்து இன்று மாலை புதுக்கோட்டையில் விசிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. பல்கலைக்கழக மசோதாக்களை உச்சநீதிமன்றம் அங்கீகரித்து விட்டது. அதனை விமர்சிக்கும் வகையில் ஆளும் பாஜக அரசு குடியரசுத் தலைவர் மூலம் 14 கேள்விகளை உச்ச நீதிமன்றத்தை நோக்கி எழுப்பியுள்ளது.

குடியரசுத் தலைவரைக் கொண்டு அரசமைப்புச் சட்டத்தை தாக்கும் முயற்சியில் பாஜக செயல்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது:

அரசமைப்புச் சட்டத்தை கேலிக்குள்ளாக்கி, அதனை குடியரசுத் தலைவரைக் கொண்டு தாக்கும் முயற்சியில் பாஜக செயல்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. உச்ச நீதிமன்ற நீதிபதி கவாய் எந்த மாநிலத்திற்குச் சென்றாலும், அவரை அம்மாநில உயர் அதிகாரிகள், காவல்துறை உயர் அதிகாரிகள் நேரில் சந்தித்து வரவேற்க வேண்டும் என்பது மரபு. அவ்வாறு, மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த காவல்துறை தலைமை இயக்குனர், அரசு தலைமைச் செயலாளர் ஆகியோர் முறைப்படி வரவேற்பு கொடுக்கவில்லை என்பது அதிர்ச்சி அளிக்கிறது.

Droupadi Murmu

பாஜக அரசு தலித்துகளை எவ்வாறு நடத்துகிறது என்பதற்கு இது ஒரு சான்று:

நீதிபதியே இதனை வேதனையோடு சுட்டிக்காட்டி உள்ளார். பாஜக அரசு தலித்துகளை எவ்வாறு நடத்துகிறது என்பதற்கு இது ஒரு சான்று. மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஷின் இந்தப் போக்கை விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை திமுக தலைமையிலான கூட்டணி தான், ஒரு கூட்டணி என்கிற வடிவத்தோடு உள்ளது. தமிழக எதிர்க்கட்சிகள் கூட்டணி என்ற வடிவத்தை கூட எட்டவில்லை.

அதிமுக - பாஜக ஒரு கூட்டணியாக வடிவம் பெறவில்லை:

அதிமுகவும் - பாஜகவும் சேர்ந்து தேர்தலை சந்திப்போம் என அறிவித்துள்ளார்கள். அவர்கள் கூட்டணி தொடருமா? என்பது தெரியாது. அதே கூட்டணியில் இடம் பெற்று இருந்த பாமக இன்னும் கூட்டணி பற்றி எந்த முடிவையும் எடுக்கவில்லை. மேலும், தாங்கள் எந்த அணியில் உள்ளோம் என்பதையும் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. தேமுதிக என்ன செய்யும்? என்று யாருக்கும் தெரியாது. ஆகவே, அதிமுக - பாஜக ஒரு கூட்டணியாக வடிவம் பெறவில்லை என்பது உண்மை.

amit shah, edappadi palaniswami

விஜய் தனது தலைமையில் வாருங்கள் என மற்றவர்களை பார்த்து சொல்லுவாரா?

நடிகர் விஜய், அதிமுக கூட்டணியில் இடம் பெறுவார் என சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது. அப்படி ஒரு நிலைப்பாட்டை எடுப்பாரா? அதிமுக தலைமையை ஏற்றுக்கொண்டு கூட்டணியில் பங்குதாரராக இடம் பெறுவாரா? அல்லது விஜய் தனது தலைமையில் வாருங்கள் என மற்றவர்களை பார்த்து சொல்லுவாரா? என்பது தெரியாது. எனவே எதிர்க்கட்சிகளிடையே ஒரு ஐக்கியம் உருவாகுவதற்கு போதிய முகாந்திரம் இல்லை. வரும் தேர்தலை பொருத்தவரையில் திமுக கூட்டணி தான் மக்கள் செல்வாக்கோடு மீண்டும் ஆட்சியை கைப்பற்றும்.

இந்தியா கூட்டணிக்கு திமுக கூட்டணி வழிகாட்டியாக உள்ளது:

இந்திய கூட்டணி வலிமை இழந்துள்ளதாக ப.சிதம்பரம் கூறியுள்ளார் என்று செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், தேசிய அளவில் இன்னும் இந்திய கூட்டணி வலிமையாக இருக்க வேண்டும் என்ற கருத்தின் அடிப்படையில் அவர் தெரிவித்திருக்கலாம். தமிழகத்தை பொறுத்தவரை மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வலிமையாக உள்ளது. இந்தியா முழுவதும் இந்தியா கூட்டணிக்கு வழிகாட்டியாகவும் உள்ளது. இந்தியா கூட்டணி தேவையான நேரத்தில் பாஜகவிற்கு சவால் விடக்கூடிய அளவிற்கு நடவடிக்கையில் ஈடுபட்டு தேர்தலை சந்திக்கும்.

TVKVijay Vijay

இந்திய கூட்டணி தேசிய அளவிலான கூட்டணி. கடந்த ஓராண்டுக்கு முன்பு தான் நாடாளுமன்றத் தேர்தலை சந்தித்தது. இன்னும் பொதுத் தேர்தல் நடைபெற நான்காண்டு காலம் உள்ளது. பொது பிரச்சனைகளின் அடிப்படையில் அவ்வப்போது கூடி செயல்பட வேண்டும் என்ற நோக்கோடு உள்ளது. பாஜகவின் மக்கள் விரோத நடவடிக்கைகளை எதிர்ப்பதுதான் இந்தக் கூட்டணியின் நோக்கம் என்று திருமாவளவன் தெரிவித்தார்.