ஜூலை மாதத்திலிருந்து மின் கட்டணம் உயர்வா?
தமிழ்நாட்டில் மின் கட்டணத்தை 3 சதவீதம் உயர்த்த மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரைத்திருப்பதாகவும், அதனடிப்படையில் கட்டண உயர்வு குறித்து பரிசீலிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
அதேவேளையில், மின் கட்டணத்தை உயர்த்துவது குறித்து தமிழக அரசுதான் முடிவெடிக்க வேண்டுமென கூறியுள்ள மின்வாரிய அதிகாரிகள், அதுதொடர்பாக முதல்வரிடம் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
எனினும் அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவிருப்பதால், கட்டண உயர்வு இருக்காது என தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதற்கிடையே மின் கட்டண கணக்கெடுப்பு இரு மாதங்களுக்கு ஒரு முறை மேற்கொள்வதற்கு பதிலாக மாதந்தோறும் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவும் அரசுக்கு ஏற்கெனவே வலியுறுத்தல்கள் இருந்து வருகின்றன.
இந்நிலையில், மக்களை வதைக்கும் கட்டண உயர்வு திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழ்நாடு மின்சார வாரியம் இழப்பில் இயங்குவதாகவும், அதை லாபத்தில் இயங்கச் செய்யவே கட்டணம் உயர்த்தப்படுவதாகவும் கூறப்படுவதில் உண்மை இல்லை என அவர் தன் அறிக்கையில் கூறியுள்ளார்.
தனியாரிடமிருந்து அதிக விலைக்கு மின்சாரம் வாங்கப்படுவதுதான் மின் வாரியத்தின் இழப்புகளுக்கு காரணம் என்றும் நிலுவையில் உள்ள மின்திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம்தான் அந்த நிறுவனத்தை லாபத்தில் இயக்க முடியும் என்றும் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.