நாமக்கல் | இருளில் மூழ்கிய அரசு மருத்துவமனை - செல்போன் வெளிச்சத்தில் மருத்துவம் பார்த்த அவலம்
செய்தியாளர்: எம்.துரைசாமி
நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்றிரவு திடீரென மின்தடை ஏற்பட்டதாக தெரிகிறது. தொடர்ந்து அங்கு ஜெனரேட்டர் இயங்காத நிலையில் சுமார் அரைமணி நேரத்திற்கும் மேலாக மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவு, உள்நோயாளிகள் சிகிச்சை பிரிவு, தீவிர சிகிச்சை பிரிவு, பிரசவ வார்டு உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. இதன் காரணமாக பணியில் இருந்த மருத்துவர்கள் செல்போன் வெளிச்சத்தில் மருத்துவம் பார்த்தனர்.
இந்த நிலையில் அரைமணி நேரத்திற்குப் பிறகு ஜெனரேட்டர் இயக்கப்பட்டதால், மின் விநியோகம் சரி செய்யப்பட்டு சகஜ நிலையை எட்டியது. இதுகுறித்து மருத்துவக் கல்லூரி டீன் சாந்தா அருண்மொழியிடம் நாம் கேட்ட போது... "மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மின்தடை ஏற்பட்ட போது உடனடியாக தானியங்கி ஜெனரேட்டர் செயல்படவில்லை.
இதனையடுத்து எலக்ட்ரீசியன் அங்கு அனுப்பப்பட்டு, ஜெனரேட்டரை சரிசெய்யப்பட்டது. தொடர்ந்து மருத்துவமனைக்கு தடை இன்றி மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. போதிய அளவு டீசலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார். திடீரென ஏற்பட்ட மின்தடை காரணமாக நோயாளிகள் பெரும் அவதி அடைந்தனர்.