அமைச்சர் எ.வ.வேலு கேள்வி pt desk
தமிழ்நாடு

”காலாவதியான சுங்கச் சாவடிகளை அகற்றாமல் இருப்பது ஏன்?” - மத்திய அரசுக்கு அமைச்சர் எ.வ.வேலு கேள்வி

தமிழ்நாடு அரசு சார்பில் பலமுறை வலியுறுத்திய பின்பும் காலாவதியான சுங்கச் சாவடிகளை அகற்றுவதில் மத்திய அரசு கண்டும் காணாமல் உள்ளது ஏன் என அமைச்சர் எ.வ.வேலு குற்றம் சாட்டினார்.

PT WEB

செய்தியாளர்: மாதவன்

திருவாரூர் அருகே நீலக்குடியில் வெட்டாற்றின் குறுக்கே வடகண்டம், கங்களாஞ்சேரி, நன்னிலத்தை இணைக்கும் உயர்மட்ட பாலம் நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.6 கோடியே 36 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது. இதனை நெடுஞ்சாலைதுறை அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டு பாலத்தின் தரத்தை பரிசோதித்தார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியபோது...

Toll booth

தமிழ்நாட்டிற்கு இருமொழிக் கொள்கைதான் ஒத்துவரும்:

மூன்றாவது மொழியை கற்றுக் கொள்ளுங்கள் என்று கூறுபவர்கள், தமிழ்நாட்டில் உள்ள கேந்திர வித்யால பள்ளியில் தமிழ் மொழிக்கு ஆசிரியர்களை கூட நியமிக்காத நிலைதான் இருந்து வருகிறது. தமிழ்நாட்டிற்கு இருமொழிக் கொள்கைதான் ஒத்துவரும் என அந்த காலத்திலேயே பேரறிஞர் அண்ணா முடிவு செய்து அதற்கு ஏற்ப தாய் மொழி மற்றும் இணைப்பு மொழி கற்பிக்கப்பட்டு வருகின்றன.

மூன்றாவது மொழியை கற்றுக் கொள்ளுங்கள் என்று கூறி இந்தியை திணிப்பதற்கான முயற்சியை மத்திய அரசு மேற்கொள்வதை தவிர வேறு ஒன்றும் இல்லை. தமிழ்நாட்டை பொறுத்தவரை இருமொழிக் கொள்கைதான் என்று தமிழக முதல்வர் உறுதி அளித்துள்ளார். கடந்த கால ஆட்சியில் நிலம் கையகப்படுத்துவதற்கு தனியாக டெண்டரும், சாலை போடுவதற்கு தனியாக டென்டரும் விடுவார்கள். இதனால் நிலம் கையகப்படுத்தப்படாமலேயே சாலை போடும் பணி நின்றுவிட்டது.

anbumani

காலாவதியான சுங்கச் சாவடிகளை கண்டும் காணாமல் இருப்பது ஏன்?

தமிழ்நாட்டில் உள்ள பல தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச் சாவடிகள் காலாவதி ஆகிவிட்ட நிலையில், அதை அகற்றக்கோரி தமிழ்நாடு அரசு சார்பில் பலமுறை மத்திய அரசிடமும் நிதின் கடகரியிடமும் எடுத்துரைத்துள்ளோம். இது தொடர்பாக பலமுறை நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தும், கடிதம் எழுதியும் உள்ளனர். ஆனால், இதுவரை ஒழுங்குபடுத்தப்படவில்லை என்பதுதான் உண்மையாக உள்ளது” என்றார்.

அன்புமணியிடம் சட்டம் ஒழுங்கை நாங்கள் கொடுக்க முடியாது. தமிழக மக்கள் தான் கொடுக்க முடியும்:

தமிழ்நாட்டில் சட்டமும் சரியில்லை ஒழுங்கும் சரியில்லை என்னிடம் கொடுத்தால் ஒரு மாதத்தில் சரி செய்வேன் என்று அன்புமணி கூறியுள்ளதாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர்.... ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஜனநாயக முறையில் நடக்கும் தேர்தலில் போட்டியிட்டு நாட்டு மக்களின் ஏகோபித்த ஓட்டுக்களை வாங்கி சரி செய்வதற்கு நாங்கள் வேண்டாம் என்றா சொல்கிறோம். உங்களிடம் சட்டம் ஒழுங்கை நாங்கள் கொடுக்க முடியாது. தமிழக மக்கள் தான் ஒப்படைக்க முடியும் என்று அமைச்சர் ஏ.வ.வேலு தெரிவித்தார்.