அதிமுக pt web
தமிழ்நாடு

‘அதிமுகவை சுக்கல்சுக்கலாக உடைக்கிறது பாஜக’ அன்வர் ராஜா பேச்சுக்கு அரசியல் நோக்கர்கள் சொல்வதென்ன?

பாஜக உடனான கூட்டணியில் அதிமுக தலைவர்கள் அதிருப்தியில் இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், அதிமுக தலைவர் அன்வர் ராஜா அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்திருப்பதுதான் தற்போது பேசுபொருளாகியிருக்கிறது.

Angeshwar G

“அதிமுகவை பாஜக சுக்கல்சுக்கலாக உடைத்து சின்னாபின்னமாக்கிக் கொண்டிருக்கிறது என்பதை நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம்”.. இது பத்திரிகையாளர் மணி புதிய தலைமுறையுடனான சிறப்பு நேர்காணலில் பயன்படுத்திய வார்த்தைகள். அதிமுக மீண்டும் பாஜகவுடன் கூட்டணி வைத்ததில் இருந்து அக்கட்சிக்குள் ஏகப்பட்ட சலசலப்புகள் நிகழ்வதாக நாள்தோறும் செய்திகள் வெளியாகிக்கொண்டே இருந்தன. பல அதிமுக தலைவர்கள் அதிருப்தியில் இருப்பதாகவும் சொல்லப்பட்டது. இத்தகைய சூழலில்தான் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்திருக்கிறார் அன்வர் ராஜா.

அன்வர் ராஜா

திமுகவை எதிர்த்து எம்ஜிஆர் அதிமுகவைத் தொடங்கிய காலத்தில் இருந்து அதிமுகவில் பயணித்து வருபவர் அன்வர் ராஜா. அத்தகைய ஒருவர் திமுகவில் இணைந்திருப்பது அதிமுக எந்த அளவிற்கு மாற்று திசையில் பயணிக்கிறது என்பதற்கு சான்று எனத் தெரிவிக்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். அதிமுக பாஜக கூட்டணி குறித்துப் பேசிய பத்திரிகையாளர் மணி, “அதிமுக பாஜக கூட்டணி அதிமுகவின் கீழ்மட்டத்தில் சுத்தமாக ஒட்டவில்லை. இடையில் பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியில் வராமல் இருந்திருந்தால் கூட அதன் தாக்கம் இந்த அளவிற்கு இருந்திருக்காது. கூட்டணி அமைந்த பிறகு பேசாத பேச்சையெல்லாம் அண்ணாமலையும் அமித்ஷாவும் பேசுவது கூட்டணியை உள்ளிருந்து காலிசெய்வதாகத்தான் பொருள்” எனத் தெரிவித்திருந்தார்.

நேற்று திமுகவில் இணைந்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அன்வர் ராஜா கூட, “ஒரு அரசியல் கட்சி இன்னொரு அரசியல் கட்சியோடு கூட்டணி வைக்கலாம்; அதில் தவறில்லை. பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்ததில் நான் தவறு காணவில்லை. ஆனால், பாஜகவிற்கு அடிமையாக அதிமுக செல்வதைத்தான் நான் எதிர்க்கிறேன். பாஜகவிற்கு அடிமை சாசனத்தை எழுதிக்கொடுத்துவிட்டு அதிமுக பாஜக கூட்டணியை எடப்பாடி பழனிசாமி அமைத்திருக்கிறார். பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இந்த தேர்தல் எங்களுக்கு முக்கியமில்லை. மக்களவைத் தேர்தல்தான் எங்களுக்கு முக்கியம் எனத் தெரிவிக்கிறார். அப்படியானால் இந்தத் தேர்தலில் அதிமுகவை அழிப்பதுதான் முக்கியம். அந்த அஜெண்டாவோடுதான் அதிமுகவுடன் கூட்டணி அமைக்கிறார்கள்” எனத் தெரிவித்திருக்கிறார்.

கேசி பழனிசாமி, எடப்பாடி பழனிசாமி

அன்வர் ராஜாவின் அதிருப்தியைப் போலவே அதிமுகவில் பல முன்னணித் தலைவர்களும் அதிருப்தியில் இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. நேற்று புதிய தலைமுறையில், ‘அதிமுகவில் உள்ள பாஜக அதிருப்தியாளர்களை எப்படி சமாளிக்கப்போகிறார் பழனிசாமி?’ எனும் தலைப்பில் விவாதம் நிகழ்ந்தது. அப்போது பேசிய முன்னாள் எம்பி கேசி பழனிசாமி, “திமுக அரசாங்கத்தின் மீது கடுமையான அதிருப்திகள் இருக்கிறது. பாஜக தமிழ்நாட்டு அரசியல் களத்தை சிந்தாந்த அரசியல் களமாக உருவாக்குகிறபோது, திமுக அதை லாபகரமாக பயன்படுத்திக்கொள்கிறது. அப்படியிருக்கையில் தேர்தல் களம் திராவிடம் vs இந்துத்துவா என்றுதான் அமைகிறது.

என்னைப் போன்றவர்கள் எல்லாம் கண்மூடித்தனமாக பாஜகவை எதிர்க்கவில்லை. அதிமுக பாதுகாக்கப்பட வேண்டும். பாஜகவின் சித்தாந்தம் நல்ல சித்தாந்தமா? அதை ஏற்றுக்கொள்ளாலாமா என்பதெல்லாம் நமது பிரச்னையில்லை. மக்கள் அதை ஏற்றுக்கொள்கிறார்கள் அல்லது மறுக்கிறார்கள்; அதுவேறு. ஆனால், அதிமுக அதிக ஆண்டுகள் தொடர்ச்சியாக ஆண்ட கட்சி. இந்தக் கட்சி பாதுகாக்கப்பட வேண்டும்.

கர்நாடகத்தில் பாருங்கள். ஜனதா கட்சி ஒரு பிரதமரையே உருவாக்கிய கட்சி. இன்று அந்தக் கட்சி எங்கே சென்றது? அதுபோல் அதிமுக அழிந்துவிடக்கூடாது. இந்த இயக்கமும் தொண்டர்களும் பாதுகாக்கப்பட வேண்டும். அந்த உத்தரவாதத்தைதான் எடப்பாடி பழனிசாமி தர மறுக்கிறார்” எனத் தெரிவித்திருந்தார்.

Mani

இதை ஆமோதிக்கும் வகையில் பேசிய பத்திரிகையாளர் மணி, “சராசரியாக அதிமுகவிற்கு வாக்களிக்கக்கூடிய மக்கள் பாஜகவின் தலைமையிலிருந்து வரும் வார்த்தைகளால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். பாஜக இந்துத்துவா கொள்கைகளை வைக்கும்போது திமுக அதற்கு எதிரான கொள்கைகளை முன்வைத்து அரசுக்கு எதிரான அதிருப்திகளை மறைத்துக்கொண்டு இருக்கிறார்கள். அப்போது நீங்களே திமுகவின் வெற்றிகளை உறுதிப்படுத்துகிறீர்கள். அமித்ஷா தெளிவாக இருக்கிறார். ‘இரண்டாவது முறை திமுக ஆட்சி அமைப்பது குறித்து எங்களுக்குக் கவலையில்லை. எவ்வளவு தூரம் அதிமுகவை ஒழிக்க முடியுமோ ஒழிக்கிறேன்’ என்று. அதை பாஜகவினர் தெளிவாக செய்துகொண்டிருக்கின்றனர். அதை புரிந்துகொண்டும் அதிமுகவினர் மறைக்கிறார்கள்” எனத் தெரிவித்தார்.