தமிழகத்தில் சட்டப்படி 35 அமைச்சர்கள் வரை நியமிக்கலாம் என்ற நிலையில், தற்போது சில முக்கிய துறைகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள வேளாண்மை, வருவாய், கூட்டுறவு, தொழிலாளர், ஆதி திராவிடர் நலன் உள்ளிட்ட துறைகள் நிரப்பப்படாமல் உள்ளன. தவெகவுடன் கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகளுக்கு அமைச்சரவை இடம் வழங்குவது, அதிமுகவிலிருந்து ஆதரவு தருவோருக்கு பதவி கொடுப்பது போன்ற பேச்சுவார்த்தைகள் காரணமாகவே விரிவாக்கம் தாமதமாகி வருவதாக கூறப்படுகிறது.
கடந்த மே 10-ஆம் தேதி ஆளுநர் அர்லேகர் முதலமைச்சர் விஜய் மற்றும் அவரின் அமைச்சரவையை சேர்ந்த 9 பேருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். ஆனால் பதவியேற்று சுமார் 1 வாரங்கள் ஆகியும் அமைச்சர்களுக்கு இலாக்காக்கள் ஒதுக்கப்படாமல் இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த சூழலில், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு இலாக்காக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதன்படி உள்துறை, பொது நிர்வாகம், நிதித்துறை, ஊரக வளர்ச்சித்துறை, பொதுப்பணித்துறை, மருத்துவத்துறை, உணவு மற்றும் குடிமைப் பொருட்கள் வழங்கல் துறை, மின்சாரத்துறை, பள்ளிக் கல்வித்துறை, கனிமங்கள் மற்றும் சுரங்கத்துறை, தொழில்துறை போன்ற முக்கிய துறைகள், கடந்த வாரம் பதவியேற்ற அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
அதே நேரம் பிற முக்கிய துறைகளான வேளாண்மை துறை, வருவாய், வீட்டுவசதித்துறை, கூட்டுறவு, சமூக நலன், மீன்வளத்துறை, போக்குவரத்துதுறை, உயர்கல்வித்துறை, தகவல் தொழில்நுட்பம், சிறுபான்மையினர் நலன், தொழிலாளர் துறை, ஆதி திராவிடர் நலத்துறை ஆகிய துறைகளுக்கு இன்னும் அமைச்சர்கள் நியமிக்கப்படவில்லை.
அரசிலமைப்பு சட்டப்படி ஒரு மாநிலத்தின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் எண்ணிக்கையில் 15 சதவீதம் வரை அமைச்சர்களை நியமித்துக்கொள்ளலாம். அதன்படி தமிழ்நாட்டில் அதிகபட்சம் 35 அமைச்சர்கள் வரை நியமிக்கப்படலாம். இந்த சூழலில் தவெகவுடன் கூட்டணி வைத்துள்ள காங்கிரஸ் கட்சிக்கு அமைச்சரவையில் பிரதிநித்துவம் அளிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், காங்கிரஸ் கட்சிக்கு எந்தெந்த துறைகள் என்பது தொடர்பாக தீவிர ஆலோசனை நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது.
மேலும், அதிமுகவில் இருந்து தவெகவுக்கு ஆதரவுக்கு தெரிவித்தவர்களுக்கும் அமைச்சர் பதவி கொடுக்கப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவளிப்பதாக கூறிய இடதுசாரிகள் அமைச்சரவையில் இடம்பெறப்போவதில்லை என்று கூறிவிட்டன. அதேவேளையில் விசிகவுக்கு ஒரு அமைச்சர் பதவி வழங்க பேச்சுவார்த்தை நடப்பதாகவும் கூறப்படுகிறது.
இது போன்ற காரணங்களாலே அமைச்சரவை இன்னும் விரிவாக்கம் செய்யப்படாமல் இருப்பதாகவும், இந்த பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வந்ததும் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு, நிரப்பப்படாமல் இருக்கும் துறைகளுக்கு விரைவில் அமைச்சர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று தவெக சார்பில் கூறப்படுகிறது.