’ஒரே மாதத்தில் 2 மடங்கு அதிகரித்த பணவீக்கம்..’ நடுத்தர மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி!
இந்தியாவில் மார்ச் மாதத்தில் 3.88% இருந்த மொத்த விலை பணவீக்கம் ஏப்ரலில் 8.3% ஆக இரட்டிப்பாக உயர்ந்துள்ளது. எரிபொருள், மின்சாரம், சில்லறை மற்றும் உணவுப் பொருட்களின் விலை ஏற்றம் காரணமாக கடந்த 42 மாதங்களில் இல்லாத அளவுக்கு பணவீக்கம் அதிகரித்துள்ளது.
சந்தையில் பொருட்களின் உற்பத்தி குறைவாகவும், அதனை வாங்க நினைக்கும் மக்களின் தேவை அதிகமாகவும் இருக்கும்போது பொருட்களின் விலை கடகடவென உயரும். இப்படி ஒரு நிலை ஏற்படும் போது பொதுமக்களிடம் இருக்கும் பணத்தின் மதிப்பு குறைந்து, பொருள்களின் விலை அதிகரிக்கும். இதுவே பணவீக்கம் என அழைக்கப்படுகிறது.
அந்த வகையில் இந்தியாவில் கடந்த மார்ச் மாதத்தில் 3.88% ஆக இருந்த மொத்த விலை பணவீக்கம், ஏப்ரல் மாதத்தில் 8.3% ஆக அதிரடியாக உயர்ந்துள்ளது. இது கடந்த 42 மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிகமாகும். அதே போல இந்தியாவின் எரிபொருள் மற்றும் மின்சாரப் பிரிவு பணவீக்கம் 24.71% ஆகவும், சில்லறை பணவீக்கம் 3.48% என்ற ஆகவும், உணவுப்பொருள் பணவீக்கம் 4.20% ஆகவும் அதிகரித்துள்ளது.
இந்த திடீர் பணவீக்கத்துக்கு அமெரிக்கா - ஈரான் போர் காரணமாக சமையல் எரிவாயு இறக்குமதி குறைந்ததே முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. பொதுவாக ஆண்டுக்கு 2% முதல் 3% வரை மட்டுமே இறங்கும் ரூபாய் மதிப்பு, இப்போது திடீரெனச் சரிந்ததால் அதன் காரணமாகவும் இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து பணவீக்கம் உயர காரணமாக அமைந்துள்ளது.
இந்த சூழலில் மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை அதிகரித்துள்ளதால் இது ஒட்டுமொத்தமாக அனைத்து பொருள்களின் விலையும் அதிகரிக்கச்செய்யும். இதனால் அடுத்து வரும் மாதங்களில் பணவீக்கம் மேலும் அதிகரித்து, அது பொருள்களின் விலையை இன்னமும் அதிகரிக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
பணவீக்கம் இப்படி தொடர்ந்து இரண்டு மடங்கு அதிகரித்தால் அது 100 ரூபாயில் வாங்கும் பொருள்களின் விலையை 200 ரூபாய் வரை அதிகரிக்கும். இதனால் அத்தியாவசிய பொருள்களை வாங்க நடுத்தர வர்க்கத்தினரே திணறும் சூழலை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

