கோவை: LPG எரிவாயு டேங்கர் லாரி வெடிப்பு எக்ஸ் தளம்
தமிழ்நாடு

கோவை: LPG எரிவாயு டேங்கர் லாரி கவிழ்ந்த சம்பவம்... என்ன நடந்தது? முழு தகவல்!

கோவை அவிநாசி சாலை உப்பிலிபாளையம் மேம்பாலத்தில் LPG எரிவாயு டேங்கர் லாரி நேற்று நள்ளிரவு கவிழ்ந்துள்ளது. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்...

PT WEB

செய்தியாளர் : பிரவீண்

கொச்சியிலிருந்து கோவை கணபதி பகுதியில் உள்ள எரிவாயு குடோனுக்கு 18 டன் கொள்ளவுடன் LPG gas நிரப்பி டேங்கர் லாரி ஒன்று நேற்று நள்ளிரவு 3 மணியளவில் வந்து கொண்டு இருந்தது. கோவை அவிநாசி சாலை உப்பிலிபாளையம் மேம்பாலத்தில் ஏறி வரும்போது எதிர்ப்பாராத விதமாக, லாரிக்கும் டேங்கருக்கும் இடையேயான இணைப்பு துண்டானது. இதனால் தனியாக பிரிந்த டேங்கர், மேம்பாலத்தின் மீது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

கோவை: LPG எரிவாயு டேங்கர் லாரி விபத்து

மேலும் டேங்கரிலிருந்து எரிவாயு கசிய தொடங்கிய நிலையில் லாரி ஓட்டுநர் இது தொடர்பாக உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தார். அதன் பேரில் உடனடியாக விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் எரிவாயு டேங்கரின் மீது தண்ணீரை பீய்ச்சியடித்து எரியாவு நேரடியாக காற்றில் கலப்பதை தற்காலிகமாக நிறுத்தினர்.

தொடர்ந்து தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், பொதுமக்கள் அருகில் செல்லாத வண்ணம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அவிநாசி சாலை மேம்பாலமானது கோவை மாநகரின் முக்கிய சாலைகள் சந்திப்பாக இருப்பதன் காரணமாக மேம்பாலத்தில் போக்குவரத்தை தடை செய்த போலீசார், போக்குவரத்தில் மாற்றம் செய்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கோவை: LPG எரிவாயு டேங்கர் லாரி வெடிப்பு

மேலும் தனியார் தண்ணீர் லாரிகள் வரவழைக்கப்பட்டு பொறியாளர்களும் சம்பவ இடத்தில் எரிவாயு கசிவை தடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டனர். சுமார் 18 டன் கொள்ளளவு கேஸ் டேங்கரில் இருந்ததால், மீதமிருந்த எரிவாயுவை மற்றொரு டேங்கருக்கு மாற்றிய பிறகுதான் முழுமையாக கசிவை அப்புறப்படுத்த முடியும் என தெரிவித்துள்ளனர். இதையடுத்து அதிகாரிகள் மீட்பு பணிகளை முழு வீச்சில் மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே டேங்கரை அப்புறப்படுத்த திருச்சி IOCL-ல் இருந்து வாகனம் வரவழைக்கப்பட்டுள்ளதாக கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் தெரிவித்தார். ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு பாதுகாப்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் தற்காலிகமாக எரிவாயு கசிவு தடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனிடையே டேங்கர் லாரி விபத்து நிகழ்ந்த இடத்தை சுற்றிலும் 500 மீட்டர் தூரத்துக்கு உள்ள பள்ளிகள் அனைத்துக்கும் விடுமுறை அறிவித்து கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மீட்கப்பட்ட பின்னர் பீளமேடு பகுதியில் உள்ள LPG குடோனுக்கு கொண்டு செல்லப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.