கையில் சிலம்பு...தடையை மீறி போராட்டம்! கைது செய்யப்பட்டார் குஷ்பு!
பாஜக, நாம் தமிழர், பாமக உள்ளிட்ட கட்சிகள் தடையை மீறி போராட்டத்தை மேற்கொண்டன.. இதனால், கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். இந்தநிலையில், தமிழக பாஜக மகளிர் அணியினர் பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நீதி கேட்டு இன்று மதுரையில் இருந்து சென்னை நோக்கி பேரணியை தொடங்கியுள்ளனர்.
கண்ணகி வேடமிட்டும், கைகளில் சிலம்புடனும் ஏராளமான பெண்கள் போராட்டம் மேற்கொண்டுள்ளனர்.
இதேபோல் அம்மனுக்கு மிளகாய் அரைத்து பூசியும் தீச்சட்டி ஏந்தியும் பாஜக மகளிர் அணியினர் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். “தமிழகத்தின் அநீதியை தட்டிக்கேட்காமல் கண்ணகி தாயே உறங்குவது ஏன்?” என பாஜகவினர் முழக்கமிட்டனர்.
இந்த போராட்டத்தை குஷ்பு தொடங்கி வைத்தநிலையில், கண்ணகி சிலம்பு மாதிரியை கையில் ஏந்தி குஷ்பு பேரணியில் பங்கேற்றார்.
செய்தியாளர்களை சந்தித்து பேசிய குஷ்பு, “ மக்களை திசைத்திருப்புவதற்காக பேசக்கூடாது. மணிப்பூரில் நடந்த பிரச்னை போல தமிழகத்தில் பிரச்னை இல்லை. மணிப்பூரில் எல்லை மீறிய பிரச்னைகள் இருக்கிறது.
இதனை புரியாமல் திமுகவினர் பேசுகிறார்கள் என்றால் , எதற்காக அவர்கள் அரசியலில் இருக்கிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை.” என்று பேசினார்.
இதனையடுத்து, தடையை மீறி போராடிய குஷ்பு உள்ளிட்ட பாஜகவினரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.