திருப்பரங்குன்றம் pt web
தமிழ்நாடு

திருப்பரங்குன்றம் | “கலவரத்தை தூண்ட முயற்சிக்கிறாங்க; நாங்க ஒற்றுமையா இருக்கோம்” மக்கள் சொல்வதென்ன?

உள்ளூரில் இந்துக்களும் இஸ்லாமியர்களும் ஒற்றுமையுடனே இருக்கிறோம் என திருப்பரங்குன்றம் மக்கள் தெரிவித்துள்ளனர்.

PT WEB

செய்தியாளர் பிரசன்னா

திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றம் மலை மேல் காசி விஸ்வநாதர் கோயில் மற்றும் தர்கா அமைந்துள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவில்பட்டியை அடுத்த மைலாம்பட்டி பகுதியைச் சேர்ந்த காதர் பாட்ஷா என்பவர் தர்காவிற்கு ஆடு ஒன்றுடன் மலையேற முயன்றார். அவரை தடுத்த போலீசார் மலைமேல் ஆடு வெட்ட அனுமதியில்லை எனக் கூறி திருப்பி அனுப்பி வைத்தனர்.

இதை அடுத்து உடனடியாக இஸ்லாமியர்கள் அங்கு போராட்டம் நடத்தினர். தொடர்ந்து மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து தர்காவிலிருந்தும் வந்த இஸ்லாமியர்கள் மலைமீது ஆடுடன் செல்லும் போராட்டம் நடத்தினர். அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் மீண்டும் மலை மேல் ஆடு வெட்ட அனுமதி இல்லை என தெரிவித்தனர்.

திருப்பரங்குன்றம் மலை இந்துக்களுக்கு சொந்தமானது - எச்.ராஜா

இந்நிலையில், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமத் வந்து மலை மீது தர்காவில் ஆய்வு நடத்தினார். அதனைத் தொடர்ந்து ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி மலைமேல் ஆய்வு ஆய்வு செய்தார். அப்போது அவருடன் வந்தவர்கள் மலை மேல் உள்ள படிக்கட்டில் அசைவ உணவு சாப்பிட்டனர். இது தொடர்பாக வலைதளங்களிலும் அவர்கள் சாப்பிட்டதை பதிவிட்டனர்.

இந்நிலையில், பாஜக சார்பில் பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன், இந்து முன்னணி தலைவர் காடேஸ்வர சுப்ரமணியன் உள்ளிட்ட இந்து அமைப்பினர் மலைமேல் உள்ள காசி விசுவநாதர் கோயிலில் சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.

இதனால் திருப்பரங்குன்றம் நகர் முழுவதும் கடும் பதற்றம் ஏற்பட்டது. மலையை ஒரு தரப்பினர் சிக்கந்தர் மலை எனவும் இந்து அமைப்பினர் இது முருகனுக்கு சொந்தமான மலை என்றும் இது தொடர்பாக நீதிமன்ற தீர்ப்புகள் உள்ளன என்பது குறித்தும் இரு தரப்பினரும் கருத்துக்கள் தெரிவித்து வந்தனர். இது திருப்பரங்குன்றம் நகரில் கடும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

மதுரை காவல்துறை முக்கிய அறிவிப்பு

இந்நிலையில் இந்து அமைப்பினர் நாளை மிகப்பெரிய போராட்டம் ஒன்றை அறிவித்து அதற்கான ஏற்பாடுகளை செய்தது. மேலும், இது தொடர்பாக சமூக வலைதளங்களிலும் பொதுமக்களை பங்கேற்க அழைப்பு விடுத்து இருந்தது. இதனையடுத்து திருப்பரங்குன்றம் பழைய படிக்கட்டு பாதை புதிய படிக்கட்டு பாதை என மலைக்குச் செல்லும் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

நேற்று இரவு முதல் திருப்பரங்குன்றம் மலையை சுற்றியுள்ள பகுதிகளில் பேரிகார்ட் அமைத்து மலை முழுவதையும் போலீஸ் கட்டுப்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. மலைக்கு செல்லும் பாதைகளிலும் பரிகார்டு அமைக்கப்பட்டு யாரும் மலை மேல் அத்துமீறி செல்ல முடியாதவாறு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

திருப்பரங்குன்றம் கோவில்

மேலும், இந்து முன்னணி சார்பில் நாளை நடைபெறும் கூட்டத்தில் பொதுமக்கள் யாரும் கலந்து கொள்ள வேண்டாம் என மதுரை மாநகர காவல் துறை தெரிவித்துள்ளது. இதனை மீறி கலந்து கொள்ள வந்தால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களது வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், திருப்பரங்குன்றத்தில் உள்ள திருமண மண்டபத்தார் அனைவருக்கும் எந்த பொது அமைப்புகள் வந்தாலும் அவர்களுக்கு போலீசார் அனுமதியின்றி கூட்டம் நடத்துவதற்கோ அல்லது தங்குவதற்கோ அனுமதிக்க கூடாது எனவும் மீறி அனுமதித்தால் மண்டபத்தின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுவரை எந்த தடையும் இருந்தது இல்லை

திருப்பரங்குன்றம் மலை பிரச்சனை காரணமாக நகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து இப்பிரச்சனை நீடிக்குமானால் மதநல்லிணக்க மாநகரமாக திகழும் மதுரையில் மதகலவரம் ஏற்படும் அபாயமும் உள்ளது.

இதுதொடர்பாக மக்கள் புதிய தலைமுறையிடம் கருத்துகளைத் தெரிவித்திருந்தனர். பக்கீர் அகமது கூறுகையில், “25 ஆண்டுகளாக மலையில் கந்தூரி விழா நடத்தி வருகிறோம்” எனத் தெரிவித்தார். ராஜா உசேன் என்பவர் தெரிவிக்கையில், “மலையில் பல வருடங்களாக கந்தூரி விழா நடந்து வருகிறது. நானும் சென்றுள்ளேன். இதுவரையில் எந்த தடையும் இருந்தது இல்லை. பின் தற்செயலாக 6 மணிக்கு மேல் மலைக்கு செல்லக்கூடாது என ஆரம்பித்தார்கள். அப்போது ஒன்றும் இல்லை என விட்டுவிட்டோம். இப்போது திடீரென வந்து கந்தூரி விழா செய்யக்கூடாது என்கின்றனர். என்ன காரணம் என கேட்டால் காவல்துறை பதில் சொல்ல மாட்டேன் என்கிறார்கள்” எனத் தெரிவித்தார்.

வேண்டாத பிரச்னை

சௌந்தரராஜன் என்பவர் கூறுகையில், “எப்போதும்போல் அவர்கள் அவர்களது வழிபாட்டுத் தலத்திற்கு சென்று வருவார்கள். நாங்கள் கோயிலுக்கு சென்று வருவோம். அந்தக் காலத்தில் இருந்து தற்போதுவரை நாங்கள் சாதி மதம் பார்க்காமல் ஒற்றுமையாகத்தான் வாழ்ந்து வருகிறோம். இன்னும் அப்படித்தான் வாழ வேண்டும் என விரும்புகிறோம். இம்மாதிரிப் பிரச்னையில் இருதரப்பும் சுமூகமாக பேசி முடித்துக் கொள்வது நல்லது” எனத் தெரிவித்தார்,

பாண்டீஸ்வரி என்பவர் கூறுகையில், “இது வேண்டாத பிரச்னையாக நினைக்கிறேன். மக்கள் ஒற்றுமையாக சந்தோஷமாக இருக்கும்போது இது வேண்டாத பிரச்னைதான். இஸ்லாமிய மக்கள் எங்களிடம் எப்போதும்போலவே பழகி வருகிறார்கள்” என்கின்றனர்.

கலவரத்தை தூண்ட முயற்சிக்கிறார்கள்

கனகவேல் என்பவர் கூறுகையில், “மன அமைதிக்காகத்தான் எல்லோரும் கோவிலுக்குச் செல்வோம். ஆனால், இன்று மசூதியையும் கோவிலையும் வைத்து மிகப்பெரிய கலவரத்தை ஏற்படுத்த ஒரு சில அரசியல் இயக்கங்கள் செயல்பட்டு வருகின்றனர். மதுரை என்பது திருவிழாக்களின் நகரம்தான். மினாட்சி தேரின் வடம் பிடிப்பதாக இருக்கட்டும், சித்திரை திருவிழாவாக இருக்கட்டும் இஸ்லாமிய மக்கள் அத்தனை கோலாகலமாக கொண்டாடுவார்கள். இந்து சமயத்தினை சார்ந்தவராக இருந்தாலும், இஸ்லாமிய சமுதாயத்தினை சார்ந்தவராக இருந்தாலும் அண்ணன் தம்பியாகத்தான், ஒரு வீட்டுப் பிள்ளைகளாகத்தான் பழகி வருகிறோம்.

நான் சின்ன வயதில் இருந்தபோதே மசூதி இருந்துள்ளது. திடீரென இந்த பிரச்னை எதற்காக உருவானது என்பது தெரியவில்லை. எல்லாம் அரசியலாகத்தான் இருக்கிறது. இந்து மக்களாக இருந்தாலும், இஸ்லாமிய மக்களாக இருந்தாலும் இந்த அரசியலை மக்கள் விரும்பவில்லை. அரசு உடனடியாக அமைதிக் குழுவை ஏற்படுத்தி நிரந்தர தீர்வு காண வேண்டும்” எனத் தெரிவித்தார்.