”எங்களுக்கு மகிழ்ச்சி” விஜயின் சொந்த கிராமம் எங்குள்ளது? பல்லாண்டுகளுக்கு பின் வெளிவந்துள்ள தகவல்!
த.வெ.க. கட்சியின் தலைவரும், நடிகருமான விஜயின் பூர்விகம் தூத்துக்குடி அருகே உள்ள கொம்பாடி கிராமமா?
இது நாள் வரை வெளிவராத உண்மை தகவல்..! தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே உள்ளது கொம்பாடி என்கிற கிராமம். இந்த கிராமத்தில் சுமார் 200 குடும்பத்திற்கும் மேலாக வசித்து வருகின்றனர். இந்த கிராமம் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜயின் தந்தை இயக்குநர் S.A சந்திரசேகரின் சொந்த கிராமம் என்று கூறப்படுகிறது. இந்த கிராமத்தில் தூய மிக்கேல் அதிதூதர் பங்கின் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் 75 ஆவது பவள விழா கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்றது. இந்த விழாவின் போது வெளியிடப்பட்ட பவள விழா மலர் மூலமாக இது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரின் தந்தை சேனாதிபதி பிள்ளை காலம் வரை இந்த கிராமத்தில் வாழ்ந்து உள்ளனர். சேனாதிபதி பிள்ளை ரெயில்வேயில் பணிபுரிந்த காரணத்தினால் அவரது குடும்பத்தினர் பரமக்குடி சென்றுவிட்ட நிலையில், கொம்பாடி கிராமத்தில் இன்னும் எஸ்.ஏ. சந்திரசேகர் உறவினர்கள் குடியிருந்து வருகின்றனர். அவர்கள் முன்னோர் வாழ்ந்த வீடு, நிலங்கள் அங்கு உள்ளன.
இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் பூர்வீகம் தங்கள் கிராமம் என்றும், இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர், நடிகர் விஜய் திரைப்பட துறையில் சாதித்தது தங்களது கிராமத்திற்கு பெருமை என்றும் தெரிவிக்கின்றனர். தற்போது நடிகர் விஜய் கட்சி தொடங்கியுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாகவும், அவர் கட்சிக்கு ஆதரவாக இருப்போம் என்றும் தெரிவிக்கும் கிராம மக்கள் இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் நடிகர் விஜய் தங்களது கிராமத்திற்கு வர வேண்டும் என்றும் நெகிழ்வுடன் தெரிவித்தனர்..