மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடந்து முடிந்திருக்கிறது தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு. நேற்று மாலை முதலே தவெக ஆதரவாளர்கள் மாநாட்டுத் திடலில் கூடத்தொடங்கிய நிலையில், இன்று மாலை 3 மணியளவில் மங்கள இசையுடன் தொடங்கியது. தொடர்ந்து மாநாட்டுப்பாடல் வெளியானது. அதில் விஜயும் பாடியிருந்தார். அதில் இருந்த சில வரிகள், “சாதி எனும் சாக்கட இங்க.. ஆறா மாறி கிடக்குது புள்ள.. போதாதுன்னு மதத்த திணிக்கும்.. மதவாதம் ஏறுது மெல்ல“ என்ற வரிகளை விஜயே பாடியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. அதன்பின்னர் மாநாட்டு மேடைக்கு வந்தார் தவெக தலைவர் விஜய். வழக்கம்போல் ரேம்ப் வாக்.. தவெக நிர்வாகிகளின் பேச்சு.. இறுதியில் மைக்கைப் பிடித்தார் விஜய்.
விஜய் பேசியதைப் பார்ப்பதற்கு முன்பாக வேறொரு விஷயத்தைப் பார்த்துவிடலாம். மொத்த மாநாட்டிலும், தமிழ்நாட்டில் கோலோச்சிய முன்னாள் தலைவர்களுக்கு எல்லாம் நானே வாரிசு என்பதுபோல்தான் விஜயின் பெரும்பாலான பேச்சுக்கள் இருந்தது. மாநாட்டுப் பாடலில், பெரியாரின் பேரன் என்ற வார்த்தை இருந்தது. மாநாட்டுக்கான மேடை முகப்பில் அறிஞர் அண்ணா மற்றும் எம்ஜிஆருக்கு நடுவே விஜய் இருப்பது போன்ற புகைப்படங்களும் வரலாறு திரும்புகிறது என்ற வார்த்தைகளும் இருந்தன. அவர்கள் குறிப்பிடுவது 1967 மற்றும் 1977 ஆம் ஆண்டுகளில் அண்ணா தலைமையில் திமுக ஆட்சி அமைத்ததையும், எம்ஜிஆர் தலைமையில் அதிமுக ஆட்சி அமைத்ததையும்.
கிட்டத்தட்ட 35 நிமிடங்கள் விஜயின் பேச்சு இருந்தது. சினிமாவில் வசனம் பேசுவதுபோல்.. “சிங்கம் வேட்டைக்கு மட்டும்தான் வெளிய வரும்.. வேடிக்கை பார்க்க வெளிய வராது. வேட்டையில கூட தன்னைவிட பெரிய மிருகங்களைத்தான் குறிவைத்துத்தாக்கும்; ஜெயிக்கும். எவ்வளவு பசியிருந்தாலும் உயிரில்லாததை தொட்டுக்கூட பார்க்காது. அப்படிப்பட்ட சிங்கம் அவ்வளவு எளிதாக எதையும் தொடாது.. தொட்டால் விடாது. காட்டின் நான்கு பக்கமும் தன் எல்லையை தானே வகுக்கும். அப்படிதான் காட்டையே தன் கட்டுக்குள் வைத்திருக்கும். சிங்கத்திற்கு கூட்டத்தோடு இருக்கவும் தெரியும் தனியாக இருக்கவும் தெரியும். தனியா தனித்தன்மையோட இருக்கவும் தெரியும். A LION IS ALWAYS A LION. EVEN IF IT IS SINGLE, IT IS KING OF THE JUNGLE” என்றார்.
பின்னர் மதுரையைப் பெருமைப் படுத்திய விஜய் இறுதியில் விஜயகாந்தை நினைவு கூர்ந்து அண்ணன் என்றார். “மதுரைன்னாலே அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டும், அழகர் திருவிழாவும், மீனாட்சியம்மனும் நினைவுக்கு வருவாங்க. ஆனால் மாநாட்டுக்காக இந்த மண்ணுக்கு வந்தவுடன், எனக்கு மனசுக்குள் ஓடியது புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் பற்றிய எண்ணங்கள்தான்; ஆனால் அவரோடு பழகும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. ஆனால், அவரைப்போலவே குணம் கொண்ட என்னுடைய அண்ணன், புரட்சிக்கலைஞர் கேப்டன் விஜயகாந்த் அவர்களோடு பழகும் வாய்ப்பு எனக்கு நிறையவே கிடைத்தது. மதுரை மண்ணை சேர்ந்த அவரை மறக்க முடியுமா?” என்றார்.
தன் மேலும் தனது கட்சியின் மேலும் வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கும் பதிலளித்திருக்கிறார் விஜய். “அரசியல் ஆய்வாளர்களுக்கு நான் சொல்வதெல்லாம் ஒன்றுதான். விஜய் பல லட்சம் பேர் கூடும் கூட்டத்தால் மட்டும்தான் இருக்கிறார் என்று தப்புக் கணக்கு போடாதீர்கள். இந்த கூட்டம் வெறும் ஒட்டாக மட்டும் இல்லாமல் வரப்போகும் தேர்தலில் மக்கள் விரோத ஆட்சிக்கு நாம் வைக்கப்போகும் வேட்டாக, நம்மை கோட்டைக்கு அனுப்பப்போகும் ரூட்டாக இருக்கப்போகிறது” எனத் தெரிவித்திருக்கிறார்.
திமுக, அதிமுக, பாஜக என்ற மூன்று தலைகளையும் விமர்சித்தார் விஜய். “மாபெரும் மக்கள் சக்தி அணி அணியாக நம்மிடம் இருக்கும்போது, அடிமைக்கூட்டணியில் சேர வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது?
இது சுயம் இழந்த கூட்டணி இல்ல. சுயமரியாதை கூட்டணி. ஆர்.எஸ்.எஸ்.-இடம் அடிபணிந்துகொண்டு, மதச்சார்பற்ற கூட்டணி என மக்களை ஏமாற்ற மாட்டோம். பாசிச பாஜக உடன் நேரடி கூட்டணியோ அல்லது மறைமுகக் கூட்டணியோ அமைக்க நாம் என்ன உலக மகா ஊழல் கட்சியா என்ன? மக்கள் அரசியல் என்ற சவுக்கை பாசிச பாஜகவுக்கும், பாய்சன் திமுகவுக்கும் எதிராக கையில் எடுப்போமா? ஒரு எம்.பி. சீட் கூட கிடைக்கவில்லையென, தமிழ்நாட்டுக்கும் இம்மக்களுக்கும் ஓரவஞ்சணை செய்கிறது பாஜக. கீழடி நாகரீகத்தை மறைத்துவிட்டு, எங்க நாகரீகத்தையும் வரலாறையும் அழிக்க உள்ளடி வேலை செய்கிறது. தமிழ்நாட்டை தொட்டா என்ன நடக்குமென தெரிய பல உதாரணங்கள் இருக்கு. உங்க எண்ணம் எப்போதும் நிறைவேறாது
ஒரு தவறு செய்தால், அதை தெரிந்து செய்தால், அதை செய்தது கபட நாடக மு.க.ஸ்டாலின் Uncle-ஆகவே இருந்தாலும்... கேட்போம். நீங்கள் நடத்தும் ஆட்சியில் நேர்மை இருக்கா? நியாயம் இருக்கா? ஊழல் இல்லாமல், சட்டம் ஒழுங்கு சரியா இருக்கா? பொதுமக்களுக்கோ பெண்களுக்கோ பாதுகாப்பு இருக்கா? இயற்கை வளங்களுக்கு பாதுகாப்பு இருக்கா? சொல்லுங்க My Dear Uncle... சொல்லுங்க. உலகிலேயே Mr. Clean Records எல்லாம் உங்களுக்கும் உங்க கூட இருக்கவங்களுக்கும்தான் கொடுக்கணும். இதைக்கேட்டு வாயே இல்லாத ஊர்கள்கூட வயிறு வலிக்க சிரிக்கும். பெண்களுக்கு 1,000 ரூ கொடுத்தால் போதுமா? பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்ற கதறல் சத்தம் கேட்குதா உங்களுக்கு? ஆனா, உங்களை அப்பானு கூப்பிடறதா சொல்றீங்களே Uncle... What is this Uncle? It's very very worst Uncle
எம்.ஜி.ஆர்-னா யார் தெரியும்ல? அவர் மாஸ் தெரியும்ல? எதிரியை கூட கெஞ்ச வைத்தவர் அவர். இன்று அந்த கட்சி எப்படி இருக்கிறது? அப்பாவி தொண்டர்கள் அதை சொல்லமுடியாமல் வேதனையில் தவிக்கிறார்கள்“ என்றார்.
”என் வீட்டு ரேஷன் கார்டில் உங்க பெயர் இல்லாமல் இருக்கலாம், உங்கள் வீட்டு ரேஷன் கார்டில் என் பெயர் இல்லாமல் இருக்கலாம். ஆனாலும் நீங்கள் என் ரத்த உறவுதான். என்னை உடன்பிறப்பாக கொண்ட எல்லா சகோதரிகளின் பிள்ளைகளுக்கும் நான் என்றும் தாய்மாமன்தான்
நாம் அடைக்கலம் தேடி அரசியலுக்கு வரவில்லை. 30 வருடங்களுக்கும் மேலாக இந்த மக்கள் கொடுத்த நன்றிக்கடனுக்காக அரசியலுக்கு வந்துள்ளேன். நீங்கள் எனக்கு கடவுள் கொடுத்த வரம்” என்றார்.
தனது வழக்கமான பாணியில் குட்டிக்கதை சொன்ன விஜய், “ஒரு நாட்டில் ஒரு ராஜா, தனக்கு பக்கபலமாக இருக்க தளபதியை தேடுகிறார். சரியான தகுதிகளுடன் 10 பேர் தேர்வாகினர். அதில் ஒருவரை தேர்வு செய்ய வேண்டுமென, விதை நெல்லை கொடுத்து அதை வளர்க்கும்படி கூறி தேர்வு வைக்கிறார். 3 மாதங்கள் கழித்து, அனைவரும் வந்தனர். அதில் ஒருத்தர்மட்டும் வெறும் தொட்டியை வைத்திருந்தார். எவ்வளவோ முயன்றும் அது வளரவில்லை என்றார். ராஜா அவரை கட்டியணைத்துவிட்டு, அவரையே தளபதி என்றார். காரணம், ராஜா அவர்கள் 10 பேருக்கும் கொடுத்தது அவித்த விதை நெல். அது முளைக்கவே முளைக்காது. 9 பேரும், வேறு விதை நெல்லை வைத்துள்ளனர். இதில் நீங்கள்தான் ராஜா. நீங்கள் தேர்வு செய்யப்போகும் தளபதி யார்?” என்றார்.