”ஒருவேளை அவரா இருப்பாரோ?” விஜய் சொன்ன 2 குட்டிக்கதைகள்.. யாரை குறிப்பிட்டு சொன்னார்?
தமிழக அரசியல் களத்தில் புதிய உதயமாக மாறியிருக்கும் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் கட்சியானது, வருகின்ற தமிழக சட்டமன்ற தேர்தலை நோக்கி முழுவீச்சாக செயல்பட்டு வருகின்றது. அதன் பெரிய ஆக்கமாக, மக்களை கவர்ந்திழுக்கும் பெரும் முயற்சியாக மாறியிருக்கிறது மதுரையில் நடைபெற்றுள்ள இரண்டாவது மாநில மாநாடு.
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரை பாரபத்தி பகுதியில் இன்று பெரும் மக்கள் படை சூழை நடைபெற்று முடிந்துள்ளது. விஜய் தலைமையில் விக்கிரவாண்டியில் நடத்தப்பட்ட முதல் தவெக மாநாடே தமிழக அரசியல் களத்தில் புயலை கிளப்பிய நிலையில், சட்டசபை தேர்தலையொட்டி நடக்கும் இரண்டாவது மாநாட்டில் விஜய் என்ன பேசப்போகிறார் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்தது.
அதிலும் அவர் பேசப்போகும் குட்டிக்கதைகள் யாரை பற்றியும், எந்த சம்பவத்தை பற்றியும் இருக்கப்போகிறது என்ற எதிர்ப்பார்ப்பும் இருந்தது.
இந்நிலையில் மக்கள் மத்தியில் பேசிய தவெக தலைவர் விஜய், அவருடைய பாணியில் இரண்டு குட்டிக்கதைகளை கூறினார். அதில் என்ன சொன்னார் யாருக்காக சொன்னார் என்பதை இங்கே பார்க்கலாம்..
விஜய் சொன்ன 2 குட்டிக்கதைகள்..
மதுரை மாநில மாநாட்டில் உரையாற்றிய தவெக தலைவர் விஜய், தொடக்கமே ’ஒரு சிங்கம்’ என சிங்கக் கதை கொண்டே தொடங்கினார்.
அப்போது பேசிய அவர், “சிங்கம் வேட்டைக்கு மட்டும்தான் வெளிய வரும்.. வேடிக்க பாக்க வெளிய வராது. வேட்டையில கூட தன்னவிட பெரிய மிருகங்களதான் குறிவச்சு தாக்கும்; ஜெயிக்கும். எவ்வளவு பசியிருந்தாலும் உயிரில்லாதத தொட்டுக்கூட பார்க்காது. அப்படிப்பட்ட சிங்கம் அவ்வளவு ஈஸியா எதையும் தொடாது.. தொட்டா விடாது. காட்டின் நான்கு பக்கமும் தன் எல்லையை தானே வகுக்கும். அப்படிதான் காட்டையே தன் கட்டுக்குள் வைத்திருக்கும். சிங்கத்திற்கு கூட்டத்தோடு இருக்கவும் தெரியும் தனியாக இருக்கவும் தெரியும். எப்பவும் தன் தனித்தன்மையை இழக்காது. LION IS ALWAYS A LION” என மாஸ்ஸாக பேசினார்.
உரையின் இறுதியில் தளபதியை தேடும் மன்னர் பற்றிய கதையாக சொன்ன விஜய், “ஒரு நாட்டில் ஒரு ராஜா, தனக்கு பக்கபலமாக இருக்க தளபதியை தேடுகிறார். சரியான தகுதிகளுடன் 10 பேர் தேர்வாகினர். அதில் ஒருவரை தேர்வு செய்ய வேண்டுமென, விதை நெல்லை கொடுத்து அதை வளர்க்கும்படி கூறி தேர்வு வைக்கிறார்.
3 மாதங்கள் கழித்து, அனைவரும் வந்தனர். 9 பேர் விதையை முளைக்கவைத்திருந்தனர், ஆனால் ஒருவர் மட்டும் வெறும் தொட்டியை வைத்திருந்தார். எவ்வளவோ முயன்றும் அது வளரவில்லை என்றார். ராஜா அவரை கட்டியணைத்துவிட்டு, அவரையே தளபதி என்றார்.
காரணம், ராஜா அவர்கள் 10 பேருக்கும் கொடுத்தது அவித்த விதை நெல். அது முளைக்கவே முளைக்காது. 9 பேரும், வேறு விதை நெல்லை வைத்து வளர்த்துள்ளனர்.
இதில் நீங்கள்தான் ராஜா. நீங்கள் தேர்வு செய்யப்போகும் தளபதி யார்?” என்ற கேள்வியோடு முடித்தார் விஜய்.
2 குட்டிக்கதைகளும் யாருக்காக சொன்னார் விஜய்?
முதல் குட்டிக் கதையை பொறுத்தவரையில், தவெக தலைவர் விஜய் மக்களை சந்திக்கவில்லை, மக்கள் பிரச்னைகளை கூட அவர் இருக்கும் இடத்திற்கு அழைத்துவந்து கேட்டுத் தெரிந்துகொள்கிறார், களத்திற்கே செல்லாதவர் எப்படி மக்கள் பிரச்னைகளை சரிசெய்வார் என்ற விமர்சனங்கள் தொடர்ந்து வைக்கப்பட்டு வருகின்றனர்.
அதேபோல சமீபத்தில் செஞ்சியில் நடைபெற்ற நாதக பொதுக்கூட்டத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தவெக தொண்டர்களை அணிலுடன் ஒப்பிட்டு ‘வேட்டையாடவேண்டும் என்றால் ஒரு புலியை வேட்டையாடலாம், அணிலை போய் எல்லாம் எப்படி வேட்டையாடுவது’ என விமர்சித்திருந்தார்.
இவற்றிற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகவே, தவெக ஒரு சிங்கம் போன்றது என்றும், எங்களுடைய களம் அரசியல் களம், அந்த களத்தில் மக்களின் அனைத்து பிரச்னைக்கான குரலாக எங்கள் குரல் ஒலிக்கும், அந்தக்குரல் எல்லோரையும் அதிரச்செய்யும் என்பதாக தவெக விஜய் பேசியுள்ளார்.
இரண்டாவது குட்டி கதையை பொறுத்தவரையில், தளபதியை தேடிக்கொண்டிருந்த ராஜாவின் கதையாக உவமை படுத்தும் விஜய், தவெக கட்சியில் அரசியல் தெரிந்த மூத்தவர்கள், திறமையானவர்கள், அரசியல் தந்திரவாதிகள் இல்லை என்ற பெரிய விமர்சனத்திற்கு பதில் சொல்லும் விதமாகவே அமைந்திருந்தது. அதிலும் தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளராக ஆனந்த் தேர்வுசெய்யப்பட்டபோது எழுந்த விமர்சனத்திற்கும் பதிலளிக்கும் விதமாகவே ‘நேர்மையானவர், உண்மையானவர்’ என்ற பொருளை தவெக விஜய் உறுதிப்படுத்தியுள்ளார்.
அதுமட்டுமில்லாமல் தமிழக அரசியல் களத்தில் தளபதியை தேடிக்கொண்டிருக்கும் ராஜாவாகிய மக்கள், தற்போது நேர்மையற்ற ஒரு கபடநாடக கும்பல் கையில் ஆட்சியை கொடுத்திருப்பது போன்றும், இனி நேர்மையான, உண்மையான தளபதியை தேர்ந்தெடுங்கள் என்பது போன்றும் தன்னுடைய குட்டிக்கதையை குறிப்பிட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்.
இந்த இரண்டு குட்டிக்கதைகள் மூலம் தமிழக அரசியலில் தற்போது போட்டிகளாக இருக்கும் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களையும் டார்கெட் செய்து அடித்துள்ளார் தவெக தலைவர் விஜய். அதுமட்டுமில்லாமல் நான் மக்களுடன் நேரடியாக சென்று பேசியபிறகு இது இரண்டு மடங்கு இருக்கும் என்ற எச்சரிக்கை மணியையும் அடித்துள்ளார் விஜய்.