திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்துக்கு ஆர்.கே.மணி என்பவரை மாவட்ட செயலாளராக நியமிக்க எதிர்ப்பு எழுந்த நிலையில் தற்போது அது தொடர்பாக மனு அளிக்கப்பட்டுள்ளது. திருவொற்றியூர் தொகுதிக்கு மட்டும் தனி மாவட்ட செயலாளரை நியமிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தில் அமைப்பு ரீதியாக 120 மாவட்டங்கள் உருவாக்கப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்ட நிலையில், 95 மாவட்ட செயலாளர்கள் தற்போது வரை நியமனம் செய்யபட்டு உள்ளனர். மீதமுள்ள 25 மாவட்ட செயலாளர்களை நியமனம் செய்வதில் சிக்கல் இருந்ததால் கடந்த ஒரு மாதமாக மாவட்ட செயலாளர்கள் நியமனம் நடைபெறாமல் இருந்தது.
இன்று இறுதி பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்றும் 19 மாவட்ட செயலாளர்கள் பட்டியல் மட்டுமே வெளியாக உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர், தருமபுரி, சென்னை, திருவள்ளூர், ராமநாதபுரம் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் உள்ள தொகுதிகளுக்கான மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று அறிவிக்க இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்தான், சென்னை பனையூரில் தவெக தலைவர் விஜயின் காரை மறித்து தொண்டர்கள் மனு அளிக்க முயற்சித்துள்ளனர். அதாவது, திருவள்ளூரில் உள்ள திருவொற்றியூர் தொகுதியை மட்டுமே ஒரு மாவட்டமாகப் பிரித்து திருவள்ளூர் கிழக்கு என்று பெயரிடப்பட்டுள்ளது. இதற்கான மாவட்டச் செயலாளராக ஆர்.கே. நகரைச் சேர்ந்த ஆர்.கே. மணி என்பவர் நியமனம் செய்யப்பட இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு இன்னும் சில மணி நேரங்களில் வெளியாக இருக்கும் சூழலில், இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து திருவொற்றியூர் தொகுதி நிர்வாகிகள் சேர்ந்து மனு அளித்துள்ளனர். அதில், “எங்கள் தொகுதியைச் சேர்ந்தவரை மட்டுமே மாவட்ட செயலாளராக நியமிக்க வேண்டும். பல ஆண்டுகள் நாங்கள் வேலை பார்த்துள்ளோம். எனவே, மாற்று தொகுதியைச் சேர்ந்தவரை மாவட்ட செயலாளராக நியமிக்கக் கூடாது” எனத் தெரிவித்து மனு அளித்துள்ளனர்.