சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் 23ம் தேதி, தான் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக பல்கலைக்கழக மாணவி ஒருவர் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், ஞானசேகரன் என்பவரை கடந்த ஆண்டு டிசம்பர் 24ம் தேதி கைது செய்தனர். இதையடுத்து கடந்த 2025 ஜனவரி மாதம் 5ம் தேதி, ஞானசேகரனை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை பெருநகர காவல் ஆணையர் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், ஐந்து மாதங்களாக தொடர்ந்து நடைபெற்ற விசாரணையை அடுத்து, இரு தரப்பு வாதங்களையும் கேட்ட சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி, ஞானசேகரனை குற்றவாளி என்று அறிவித்தார். அதோடு, தண்டனை விவரத்தை அறிவிப்பதற்காக வழக்கை ஜூன் 02ம் தேதி தள்ளிவைத்துள்ளார். இந்த தீர்ப்பை அரசியல் கட்சிகள், அமைப்புகள் அனைத்தும் வரவேற்றுள்ளனர். இந்த நிலையில்தான், அண்ணா பல்கலைக்கழக மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தி.மு.க. நிர்வாகியான ஞானசேகரன் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பதை தமிழக வெற்றிக் கழகம் வரவேற்கிறது என்று விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அவரது அறிக்கையில், 'சென்னை, உயர்நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில் விசாரணை நடைபெற்றதால் மட்டுமே இந்த வழக்கு விரைவாக நடத்தப்பட்டு, தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இதற்காகச் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வழக்கில் குற்றவாளி என்று மகளிர் நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ள ஞானசேகரனுக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்றும், இந்த வழக்கு தொடர்பாக சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் நிர்வாகத் தோல்வியின் காரணமாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து இவ்வழக்கை துரிதப்படுத்தியதால் தான், 5 மாதங்களில் தீர்ப்பு வந்துள்ளது. ஆனால், இவற்றையெல்லாம் மறைத்து, தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டதற்கு தமிழ்நாடு காவல் துறை தான் காரணம் என்று மனசாட்சியின்றி பச்சைப் பொய்யை தி.மு.க. தலைவர் கூறி சுயதம்பட்டம் அடித்துக் கொள்கிறார் என்பதை அனைவரும் அறிவர்.
சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற முடியாமல், பெண்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கத் தவறிய செயல் திறன் அற்ற அவல ஆட்சி இது. இந்தக் கொடுமைகளுக்காக தமிழக மக்கள் இன்னும் 10 மாதங்களில் தி.மு.க. அரசை வீட்டுக்கு அனுப்பி வைப்பது உறுதி என்பதை நீதியின் பக்கம் நின்று, நெஞ்சுறுதி மிக்க மகளிர் பக்கம் நின்று தெரிவித்துக் கொள்கிறேன்' என்று விஜய் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக, கடந்த டிசம்பர் 30ம் தேதி அன்புத் தங்கைகளே என்று கைப்பட கடிதம் எழுதியிருந்த விஜய், தமிழ்நாடு ஆளுநரை சந்தித்து, இந்த வழக்கில் குற்றவாளிக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்று கோரிக்கை மனு கொடுத்தது குறிப்பிடத்தக்கது.