தமிழக வெற்றிக் கழகம் பிப்ரவரி 2, 2024-ல் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், அதே ஆண்டு அக்டோபர் 27 ஆம் தேதி விக்ரவாண்டியில் முதல் மாநாட்டை நடத்தியது. பின்னர், மதுரையில் இந்தாண்டு ஆகஸ்ட் 24 ஆம் தேதி இரண்டாவது மாநாட்டை நடத்தியது. மதுரை மாநாட்டிற்கு பிறகு களத்திற்கு வந்து மக்கள் சந்திப்பு நடத்துவது என்று முடிவு செய்து திருச்சியில் இருந்து மக்களைச் சந்திக்கத் தொடங்கினார் தவெக தலைவர் விஜய்.
திருச்சி, அரியலூரில் செப்டம்பர் 13 ஆம் தேதியும், நாகை, திருவாரூரில் செப்டம்பர் 20 ஆம் தேதியும் மக்கள் சந்திப்புகள் நடந்தது. பின்னர் செப்டம்பர் 27 ஆம் தேதி நாமக்கல்லை தொடர்ந்து கரூரில் மக்கள் சந்திப்பு நடந்த போதுதான் மிகப்பெரிய துயர சம்பவம் நடந்தது. கரூர் கூட்ட நெரிசலில் 41 உயர்கள் பலியானது. அதன் பிறகு ஒரு வீடியோ மற்றும் சில ட்விட்களோடு விஜய் நிறுத்திக் கொண்டார். அவரது கட்சியினரும் கிட்டதட்ட சைலட் நிலைக்கு சென்றனர். நாட்கள் செல்ல செல்ல விசாரணையின் பக்கம் கவனம் சென்றுகொண்டிருந்தது. தற்போது கரூர் சம்பவத்தை சிபிஐ விசாரித்து வருகிறது.
விஜய்யோ தொடர்ந்து மவுனம் காத்து வந்தார். நீண்ட நாட்களுக்கு பிறகு கரூரில் உயிரிழந்தவர்களின் உறவினர்களை பனையூர் அலுவலகம் அழைத்து ஆறுதல் கூறினார். இதுவும் விமர்சனத்திற்கு உள்ளானது. இத்தகைய சூழலில்தான் தவெக சார்பில் பொதுக்குழு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு விஜய் பொதுவெளியில் பேசுகிறார் என்பதால் எதிபார்ப்பு நிலவியது. செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே பூஞ்சேரி பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழக வெற்றி கழகத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சித் தலைவர் விஜய் கலந்து கொண்டார்.
இன்றைய பேச்சிலும் திமுகவுக்கு எதிராகவும் குறிப்பாக முதல்வருக்கு எதிராகவும் காட்டமான விமர்சனங்களை முன் வைத்துள்ளார் விஜய். அவர் இன்றைக்கு என்ன பேசியிருக்கிறார் என்பதை முழுமையாக பார்த்த பின்னர், அவர் பேச்சின் சாரம் குறித்து பார்க்கலாம்..
நம்முடைய உறவுகளை இழந்ததால் சொல்ல முடியாத வேதனையிலும், வலியிலும் இவ்ளோ நேரம் இருந்தோம். நம்முடைய சொந்தங்களின் நிலைக்காக நாமும் மவுனம் காத்தோம். இப்படி அமைதி காத்து வந்த நேரத்துல நம்மல பத்தி வன்ம அரசியல் வலைகள் அர்த்தமற்ற அவதூறுகள்னு நிறைய விஷயங்கள் நம்மைப் பற்றி பிண்ணப்பட்டன, பரப்பப்பட்டன. சட்டம் மற்றும் சத்தியத்தின் துணை கொண்டு அதை துடைத்தெறிவோம். அதற்கு முன்பாக, தமிழக சட்டமன்றத்தில் நமக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட ஒரு உரைக்கு ஒரு நாகரீக பதிலடி கொடுக்கணும்னு நான் நினைக்கிறேன்.
அரசியல் செய்ய விருப்பமில்லை என்று அடிக்கடி சொல்லும் முதல்வர், நம்மள குறிப்பிட்டு பல்வேறு அவதூறுகளை பதிவு செய்வதன் வாயிலாக பெருந்தன்மையை பெயரில்மட்டுமே பேசும் முதல்வர் 15.10.2025 அன்று தமிழக சட்டமன்றத்தில் நமக்கு எதிராக பேசிய பேச்சில் எவ்வளவு வன்மத்தை கக்கியுள்ளார் என்பதை பற்றியும் எப்படிப்பட்ட அரசியல் செய்ய முயல்கிறார் என்பது பற்றியும் தமிழக மக்கள் உணராமலா இருப்பார்கள்.
கரூரோடு சேர்ந்து ஐந்தாறு மாவட்டங்களுக்கு மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளெல்லாம் நடத்தியிருக்கிறோம். போயிருக்கிறோம். அங்கெல்லாம் கடைசி நிமிடம் வரைக்கும் எங்களுக்கு அந்த இடம் கொடுப்பாங்களா மாட்டாங்களா அனுமதி கொடுப்பாங்களா மாட்டாங்களானு இழுத்தடிச்சிட்டே இருப்பாங்க. நாகையில் சொன்ன மாதிரி தான், நாங்க ஒரு இடம் தேர்வு பண்ணி கேட்போம். நல்லா இடமா மக்கள் தராளமா நின்னு பார்க்கிற மாதிரி. அதெல்லாம் நிராகரிச்சிட்டு மக்கள் நெருக்கடியில நின்று பார்க்கிற மாதிரி இடம் தேர்வு பண்ணி கொடுப்பாங்க. எல்லா இடங்களுக்கு இதுமாதிரிதான் நடந்திட்டு இருந்துச்சு. அதுமட்டுமல்ல, இந்தியாவில் எந்த அரசியல் கட்சி தலைவருக்கு கொடுக்கப்படாத நிபந்தனைகள், பஸ்ஸுக்குள்ளே உட்காந்து பார்க்கணும், மேல வந்து கைகாட்டக் கூடாது அப்படி அதீத கட்டுப்பாடுகள் விதிச்சாங்க. அத எதிர்த்து எங்க பக்கத்தில் இருந்து ஒரு அறிக்கையும் வெளியிட்டோம். தமிழக வெற்றிக்கழகம் சார்பாக அனைத்துக் கட்சிகளுக்கு சமமான முறையான பொது வழிகாட்டு முறைகள் வழங்கணும்னு சொல்லி உயர்நீதிமன்றத்தை நாடி இருந்தோம். இதையெல்லாம் தமிழக மக்கள் உணராமலா இருந்திருப்பாங்க.
இப்படி ஒரு அரசியல் காழ்ப்புடன், நேர்மை திறனற்று, நம்மைப்பற்றி குற்றம்சாட்டியுள்ள குறுகிய மனம் கொண்ட முதல்வருக்கு சில கேள்விகள்.. உச்சநீதிமன்றத்துல அதாவது 13.10.2025 அன்றைக்கு நடந்த விவாதங்களை வைத்தும் அந்த உத்தரவுகளை வைத்தும் இந்த கேள்விகள்..
இப்படி பொய் மூட்டைகளா நம்மை பற்றி அவதூறுகளை அவிழ்த்துவிட்ட முதல்வருக்கும் திமுக அரசுக்கும் சார்பாக கோடிகளை கொட்டி அமர்த்தப்பட்ட அறிவார்ந்த வழக்கறிஞர்கள், இந்த கபட நாடக திமுக அரசின் தில்லுமுல்லுகளை தாங்கிப்பிடிக்க இயலாமல் திக்குமுக்காடி நின்றது முதல்வருக்கு மறந்துவிட்டதா. இந்த கரூர் சம்பத்திற்கு பிறகு அவசர அவசரமா ஒரு தனிநபர் ஆணையம். அந்த தனிநபர் ஆணையத்தையே அவமதிக்கிற மாதிரி அரசு உயர் அதிகாரிகள், காவல்துறை உயர் அதிகாரிகள் எல்லாம் நம்மைப் பற்றி அவதூறுகள் பரப்பி ஒரு செய்தியாளர் சந்திப்பை அவசர அவசரமா நடத்துனாங்க. இதெல்லாம் ஏன் நடக்குது? எதுக்காக நடக்குது? அப்படினு ஒட்டுமொத்த தமிழக மக்களும் கேள்வி கேட்க ஆரம்பிச்சாங்க. இதுவும் தமிழக முதல்வர் மறந்துட்டாரா? அதுக்கப்புறம் அந்த தனிநபர் ஆணையத்தையே தலையில் கொட்டி வீட்டிற்கு அனுப்பிட்டாங்க.
இப்படிலாம் கேள்வி கேட்ட உடனே சட்டமன்றத்துல பேசும் பொழுது, உண்மை நிலையை தெளிவுபடுத்தத்தான் அப்படினு சட்டரீதியாகவும் சத்தியத்திற்காகவும் நடந்தது போல பேசியிருக்காங்க. இப்படி, ஒரு அம்பது வருஷமா பொதுவாழ்வில் இருக்கிற முதல்வர் சொன்னது எவ்வளவு பெரிய வடிகட்டிய பொய், சப்பக்கட்டுனு நான் சொல்லல உச்சநீதிமன்றம் சொல்லியிருக்காங்க. அதாவது அரசு காவல் உயர் அதிகாரிகள் ஊடகங்களிடம் பேசியது என்பது பொதுமக்களிடையே நியாயமான விசாரணை நடக்குமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் நியாயமான விசாரணை மூலமே அந்த சந்தேகத்தை மீட்டெடுத்தே ஆக வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தமிழக அரசின் தலையில் ஓங்கி நறுக்கென்று கொட்டியதை முதல்வர் மறந்துவிட்டாரா?
மாண்புமிகு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஐ.சி அமைத்து உத்தரவிட்டார் அல்லவா, அந்த உத்தரவை ஏதோ சட்டத்தின் மீதும் நீதி பரிபாலனத்தின் மீதும் மரியாதை கொண்டவர்கள் போது ஒரு நாடகத்தை திமுகவினரும் அவர்களது ஆதரவாளர்களும் கொண்டாடினார்கள் .. தவெகவுக்கு எதிராகவும் நமக்கு எதிராகவும் உயர்நீதிமன்றம் நீதிபதி தீர்ப்பு அளித்துவிட்டதாக விதந்தோதி விழா எடுத்தார்கள் அல்லவா? அந்த உத்தரவை குறித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் சொல்கையில், எந்த ஆவணத்தின் அடிப்படையில் அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது? என்று நான் கேட்கவில்லை. உச்சநீதிமன்றம் கேட்டிருக்கிறது. அப்பொழுது நீதிமன்றத்தில் பதில் சொல்ல முடியாமல் வாய் மூடி மவுனம் காத்ததே நாடே பார்த்தது. இதையும் முதல்வர் மறந்துட்டாரா.
கூட்டம் நடத்துவதற்காக பொதுவழிகாட்டுதல் அதாவது எஸ்.ஓ.பி உருவாக்கி வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை மனுவையை டிவிஷன் பெஞ்ச்தான் விசாரிக்க வேண்டும் தனிநீதிபதிகள் விசாரிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் சொன்னது அல்லவா? கோரிக்கையோ இல்லாமல் எஸ்.ஐ.டி அமைக்கப்பட்டது எந்த வகையில் சரி என்று கேள்வி எழுப்பியது உச்சநீதிமன்றம். இதெல்லாமே அறியாமலோ அறியாதது போலவோ உச்சபட்ச்ச அதிகார மயக்கத்தில் இருந்து பேசினாரோ முதல்வர்.
மனிதாபிமானம், அரசியல் அறம், மாண்பு இதெல்லாம் எதுவுமே இல்லாம வெறும் பேச்சுல மட்டுமே பேசிக்கிட்டு அரசியல் ஆதாய ஆட்டத்தை தொடங்கிவிட்டார் முதல்வர். இதெல்லாம் அவங்களுக்கு புதுசா என்ன? 1969-க்கு அப்புறம் எப்ப கட்சி அவங்க கைக்கு வந்ததோ, இன்னும் குறிப்பா சொல்லணும்னா 1972-க்கு அப்புறம் கேள்வி கேட்கவே ஆளோ இல்லாம போச்சுல அதுக்கப்புறம் திமுக தலைமை இப்படித்தானே இருக்குது.
இப்ப நாங்க கேட்டம்ல சில கேள்விகள் அதெல்லாம் .. அதெல்லாம் உச்சநீதிமன்றம் கேட்டிருக்கு. இதில் இருந்து என்ன புரிய வருது, இந்த அரசு நடத்துற விசாரணையில சந்தேகம் ஏற்படுதுனா என்னா அர்த்தம். உங்க மேல நம்பிக்கை இல்லைனு அர்த்தம், இதெல்லாம் ஏன் எதுக்கும் முதல்வருக்கு புரியுதா?
உச்சநீதிமன்றம் சொன்னதோடு மட்டுமல்ல, நெஜத்திலும் இந்த மக்களுக்கு இந்த அரசாங்கம் மீதான நம்பிக்கை மண்ணுக்குள் புதைந்துவிட்டது. இதாவது முதல்வருக்கு புரியுதா? புரியவில்லை என்றால் 2026 தேர்தல்ல இந்த திமுக தலைமைக்கு மக்கள் இன்னும் ஆழமா அழுத்தமா புரிய வைப்பாங்க. அப்பக்கூட இவங்க என்ன பண்ணுவாங்க தெரியும்ல.. 5 வருடத்துக்கு ஒரு முறை பழக்க தோஷத்துல மக்கள் தீர்ப்பை தலைவணங்கி ஏற்கிறோம் என்று அறிக்கைவிட்டு அறிவாலயத்தில் ஓடி ஒளிஞ்சுக்குவாங்க. இப்பவே அந்த அறிக்கையை தயார் பண்ணி வச்சிக்கோங்க. மக்கள் தீர்ப்புக்கு தலை வணங்குகிறோம்.
நான் போன பொதுக்குழுவுல சொன்னததான் சொல்றேன் இயற்கையும், இறைவனும் நம் சொந்தங்களின் வடிவில் மாபெரும் மக்கள் சக்தியா கூடவே நிக்கும் போது எம் மக்களுக்கான அரசியலை தடுப்பவர் எவர்? அதனால் தோழர்களே நமக்கு வந்திருக்கிற இந்த இடையூறு வெறும் தற்காலிகமானதுதான். எல்லாவற்றையும் தகர்த்து எறிவோம். மக்களோடு கைகோர்த்து நிற்போம். களத்தில் போய் நிற்போம். நாம் பயணத்தில் தடம் மாறவே மாட்டோம். இப்பவும் சொல்றேன். 2026-ல ரெண்டே ரெண்டு பேருக்கு நடுவுல தான் போட்டி ஒன்று டிவிகே, இன்னொன்று டி.எம்.கே. வாகை சூடுவோம்., வரலாறு படைப்போம்..” இவ்வாறு பேசியிருக்கிறார்.
திமுகவுக்கும் தவெகவுக்கும் இடையே தான் போட்டி என்பதை மீண்டும் அழுத்தம் திருத்தமாக பேசியிருக்கிறார் விஜய். இன்றைய பொதுக்குழு பேச்சில் வேறு யாரைப்பற்றியும் விஜய் பேசவே இல்லை. சித்தாந்த எதிரி ஆக அறிவிக்கப்பட்ட பாஜக குறித்தும் அதிமுக குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை. தவெகவுக்கு எதிராக திமுக என்பதை மட்டுமே இருப்பதாக பதிவு செய்கிறார். இது அதிமுகவை பின்னுக்கு தள்ளும் ஒரு யுக்திதான்.
விஜய்யின் இன்றைய பேச்சில் முதல்வர் ஸ்டாலின் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். குறுகிய மனம் கொண்ட, மனிதாபிமானம், அரசியல் அறம், மாண்பு இதெல்லாம் எதுவுமே இல்லாம என்றெல்லாம் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தியிருக்கிறார். ஒருவகையில் திமுகவை பதில் அளிக்க இழுக்கும் வகையில் அவரது பேச்சு இருக்கிறது. திமுகவினர் கோபப்பட்டு பதில் அளிக்க முயலும் பொழுது அது திமுக vs தவெக என விவாதமாக மாற துணையாக இருக்கும். சீமானும் அதே தொணியில் தான் திமுகவை விமர்சித்து வந்தார். ஆனால் திமுக தரப்பில் அவருக்கு பெரிதாக பதில் அளிக்கப்படவில்லை. ஆனால், தவெகக்கு திமுக பதில் அளிக்கக் கூடிய நெருக்கடி அடிக்கடி உருவாக்கப்படுகிறது. அதுவும் விஜய் நேரடியாக முதல்வரை விமர்சிக்கும் பொழுது அது ட்ரீக்கர் பண்ணும் என்றே தோன்றுகிறது. ஆனால் இதனை திமுக எப்படி கையாளப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
திமுக குறித்து விமர்சிக்கும் பொழுது அண்ணா காலத்தை தவிர்த்து முன்னாள் முதல்வர் கருணாநிதி தலைமையிலான திமுகவை மட்டுமே விமர்சிக்கிறார். அதுவும் எம்.ஜி.ஆர் இருந்த காலமான 1972 வரை விட்டுவிட்டு அதன்பிறான திமுகவை மட்டுமே குறி வைத்து விமர்சிக்கிறார். அதனால், எம்.ஜி.ஆர்., அண்ணாவை தனக்கு சாதகமாக பயன்படுத்த எண்ணுகிறார்.
பொதுக்குழுவில் இன்றைய பேச்சு முழுவதும் வெறும் அரசியலாகவே இருந்தது. 41 பேர் உயிரிழந்துள்ள துயர சம்பவம் குறித்து உருக்கமாக பேசியிருக்க வேண்டும். வெறுமனே சில வார்த்தைகளில் கடந்து சென்றது போல் இருக்கிறது. நீதிமன்றத்தில் தவெகவுக்கு சாதகமாக இருக்கிறது என்பதால் விஜய் அரசியல் ரீதியாக இறங்கி அடிக்கலாம் என்ற தொணியிலேயே தயார் ஆகி வந்தது நன்றாகவே தெரிகிறது. அதுவும், மக்கள் மத்தியில் தமக்கு ஆதரவு இருப்பதாக அழுத்தம் திருத்தமாக பதிவு செய்வது போலவே அவரது பேச்சு இருக்கிறது. கொஞ்சம் கூட வருத்தம் அளிக்கும் தொணி இல்லவே இல்லை.