PT World Digest
PT World Digestpt web

PT World Digest| அமெரிக்காவில் இந்திய ஓட்டுநர்களுக்கு சிக்கல் to PAK செல்லும் சீன ஹாங்கோர் கப்பல்

இன்றைய PT World Digest பகுதியில் அமெரிக்காவில் இந்திய ஓட்டுநர்களுக்கு சிக்கல் முதல் பாகிஸ்தானுக்கு அதிநவீன நீர்மூழ்கிக் கப்பல்களை வழங்க சீனா முடிவு செய்துள்ளது வரையிலான செய்திகளைப் பார்க்கலாம்.

1. வங்கதேசத்தில் இசை ஆசிரியர் பணி இல்லை

Muhammad Yunus
Muhammad Yunus

வங்கதேசத்தில், அரசு பள்ளிகளில் இசை மற்றும் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை உருவாக்கும் திட்டத்தை நீக்கி இடைக்கால அரசு உத்தரவிட்டுள்ளது. இஸ்லாமிய அமைப்புகள் தொடர்ந்து கொடுத்த அழுத்தத்தின் காரணமாகவே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாரம்பரியமாக கடைபிடிக்கப்பட்டு வரும் கல்வி முறைக்கு மாற்றாக இந்த புதிய பணியிடங்கள் இருக்கும் எனக்கூறி, இஸ்லாமிய அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

2. ரஷ்யா: தேசிய ஒற்றுமை நாள்

russia national unity day
russia national unity day

ரஷ்யாவின் தேசிய ஒற்றுமை நாளை முன்னிட்டு 1612இல் மாஸ்கோவை விடுவிக்கக் காரணமாக இருந்த மினி மற்றும் போஜார்ஸ்கி நினைவுச் சின்னத்தில் அதிபர் புடின் மலர் அஞ்சலி செலுத்தினார். செஞ்சதுக்கத்தில் உள்ள செயின்ட் பசில் தேவாலயத்தின் முன் உள்ள நினைவுச் சின்னத்தில் திரளானோர் மலர் அஞ்சலி செலுத்தினர். ரஷ்யாவின் வரலாறை நினைவுகூரும் விதமாகவும், தேசப்பற்றை பறைசாற்றும் விதமாகவும் ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் நான்காம் நாள் தேசிய ஒற்றுமை தினம் அனுசரிக்கப்படுகிறது.

3. பிலிப்பைன்ஸை தாக்கிய சக்திவாய்ந்த புயல்

பிலிப்பைன்ஸின் மத்தியப் பகுதியை சக்தி வாய்ந்த புயல் தாக்கியதில் செபு தீவு கடுமையாக பாதிக்கப்பட்டது. அங்கு 24 மணி நேரத்தில் சுமார் 183 மில்லிமீட்டர் மழை பெய்ததாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இதனால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளத்தில் வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன. புயல் மற்றும் வெள்ளப்பெருக்கால் 26 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 21 பேர் செபு தீவைச் சேர்ந்தவர்கள். புயல் கரையைக் கடப்பதற்கு முன்பே சுமார் 3 லட்சத்து 80ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். விமான மற்றும் சரக்கு கப்பல் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

4. பாகிஸ்தான் அரசுக்கு எதிராக பெண் வழக்கறிஞர் வழக்கு

பாகிஸ்தானில், சானிட்டரி நாப்கின்கள் போன்ற மாதவிடாய் சுகாதாரப் பொருட்களுக்கு விதிக்கப்படும் 40% வரிக்கு எதிராக, 25 வயதான பெண் வழக்கறிஞர் லாகூர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். மாதவிடாய் சுகாதாரப் பொருட்களை ஆடம்பரப் பொருளாகக் கருதி அதிக வரி விதிப்பது, அரசமைப்புச் சட்டத்தை மீறும் செயல் என வழக்கறிஞர் மஹ்னூர் உமர் குற்றஞ்சாட்டியுள்ளார். இந்த வரி ஏழைப் பெண்களுக்குப் பெரும் சுமையாக இருப்பதாகவும், சுகாதாரமற்ற மாற்று வழிகளைப் பயன்படுத்த, இந்த வரிவிதிப்பு தூண்டுவதாக கூறிய அவர், இந்த அத்தியாவசியப் பொருட்களுக்கு முழு வரி விலக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

5. சீனாவிடம் நீர்மூழ்கிக் கப்பல்களை பெறும் பாக்

hangor
hangor

பாகிஸ்தானுக்கு அதிநவீன நீர்மூழ்கிக் கப்பல்களை வழங்க சீனா முடிவு செய்துள்ளது. சீனாவிடம் இருந்து பெறப்படும் அதிநவீன ஹாங்கோர் (Hangor) ரக நீர்மூழ்கிக் கப்பல்கள், அடுத்த ஆண்டு தங்கள் கடற்படையில் சேர்க்கப்பட உள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. அதிநவீன ஆயுதங்கள், சென்சார்களை கொண்டிருக்கும் இந்த நீர்மூழ்கிக் கப்பல்கள் நீருக்குள் பல வாரங்கள் இருக்கும் அளவிற்கு பேட்டரி திறனை கொண்டுள்ளன. இந்திய கடற்படையிடம் இல்லாத இந்த வகை நீர்மூழ்கிக் கப்பல்களை, பாகிஸ்தானுக்கு சீனா கொடுப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

6. ஜோனதன் பெய்லி உலகின் கவர்ச்சிகரமான ஆணாக தேர்வு

jonathan bailey
jonathan bailey

2025ஆம் ஆண்டில் உலகிலேயே கவர்ச்சி மிகுந்த ஆணாக நடிகர் ஜோனதன் பெய்லி (JONATHAN BAILEY) தேர்வு செய்யப்பட்டுள்ளார். புகழ்பெற்ற பீப்பிள் என்ற ஆங்கில நாளிதழ் ஜோனதன் பெய்லிக்கு இந்த கவுரவத்தை அளித்துள்ளது. ஜார்ஜ் க்ளூனி போன்ற ஜாம்பவான்கள் பெற்ற இவ்விருது தனக்கும் வழங்கப்பட்டுள்ளது மிகப்பெரிய கவுரவம் என 37 வயதான ஜோனதன் பெய்லி தெரிவித்துள்ளார். இவர் நடித்துள்ள விக்டு ஃபார் குட் என்ற திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

7. உலக லெவன் அணியில் யாமல்

உலகெங்கிலும் உள்ள 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கால்பந்து வீரர்கள் வாக்களித்து தேர்ந்தெடுக்கும் FIFPRO உலக லெவன் அணியில், இளம் பார்சிலோனா வீரர் யாமல் இடம்பிடித்துள்ளார். நடப்பு சீசனுக்கான FIFPRO உலக லெவன் அணியில், பார்சிலோனாவின் இரண்டு இளம் வீரர்களான பெட்ரி மற்றும் லாமின் யாமல் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். பெட்ரி கடந்த சீசனில் 59 ஆட்டங்களில் விளையாடி, 6 கோல்கள் மற்றும் 8 கோல் உதவிகளை வழங்கி, பார்சிலோனா அணி மூன்று முக்கிய கோப்பைகளை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். யாமல் 30 போட்டிகளுக்கு மேல் விளையாடி, உலகத் தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றார்.

8. இந்தியர்களின் விசா மறுப்பு விகிதம் உயர்வு

Canada Visa
Canada Visa

கனடாவில் இந்திய மாணவர்களுக்கான விசா விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவது ஆகஸ்ட் 2025இல் 74% ஆக உயர்ந்து, உலகிலேயே மிக அதிகமான மறுப்பு விகிதத்தை எட்டியுள்ளது. முந்தைய ஆண்டில் இது 32%ஆக இருந்தது. இந்திய ஏஜெண்டுகள் மூலம் சமர்ப்பிக்கப்பட்ட ஆயிரத்து 550க்கும் மேற்பட்ட போலியான சேர்க்கை கடிதங்கள் கண்டறியப்பட்டதால், கனடா மோசடி கண்டறிதல் சோதனைகளை அதிகரித்துள்ளது. இந்தியா-கனடா இடையேயான இராஜதந்திர உறவுகளில் ஏற்பட்டுள்ள சிக்கலும் இதற்கு முக்கிய காரணமாக உள்ளது. விசா மறுப்பு அதிகரிப்பு காரணமாக, இந்திய விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கையும் வெகுவாகக் குறைந்துள்ளது.

9. அமெரிக்காவில் இந்திய ஓட்டுநர்களுக்கு சிக்கல்

ஆங்கிலம் தெரியாத 7 ஆயிரம் லாரி ஓட்டுநர்கள் பணிபுரிய அமெரிக்கா தடை விதித்துள்ளது. இதனால் இந்திய ஓட்டுநர்களே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அமெரிக்காவில் அண்மைக்காலமாக நடந்த இரு மோசமான சாலை விபத்துகளுக்கு ஓட்டுநர்களுக்கு ஆங்கில மொழியறிவு இல்லாதும் ஒரு காரணம் என தெரியவந்தது. இந்நிலையில் சமூக தளத்தில் பதிவிட்டுள்ள அமெரிக்க போக்குவரத்துத் துறை அமைச்சர் 7 ஆயிரத்து 248 ஓட்டுநர்கள் பணிபுரிய தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். அமெரிக்காவில் ஒன்றரை லட்சம் இந்திய ஓட்டுநர்கள் உள்ள நிலையில் அவர்களில் 90% பேர் பஞ்சாப், ஹரியானாவை சேர்ந்தவர்கள்.

10. கனடாவில் இந்தியர் மீது தாக்குதல்

canada
canada

கனடாவில் டொராண்டோ நகரில் கடை ஒன்றில், இந்திய வம்சாவளி இளைஞரை, கனடியர் தாக்கும் அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது. எந்தக் காரணமும் இல்லாமல், அந்த நபர் இந்திய வம்சாவளி இளைஞரை சண்டைக்கு இழுத்ததாகக் கூறப்படுகிறது. இது அப்பட்டமான இனவெறித் தாக்குதல் என்றும், கனடாவில் இந்தியர்கள் மீது தாக்குதல் அதிகரித்துவருவதாகவும் சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com