விமான நிலையத்திற்கு எதிராக போராடும் மக்களைச் சந்திப்பதற்காக பரந்தூர் வந்தடைந்தார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்.
பொடவூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தவெக தலைவர் விஜய் பரந்தூர் வந்தடைந்தார். தனியார் மண்டபத்தில் தொண்டர்கள் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மக்கள் மத்தியில் பேசிய விஜய், “கிட்டத்தட்ட 910 நாட்களுக்கும் மேல் உங்க மண்ணுக்காக போராடிக்கொண்டு இருக்கிறீர்கள்., உங்கள் போராட்டத்தைப் பற்றி ராகுல் என்ற சிறுவன் பேசியதைக் கேட்டேன். அந்த குழந்தையின் பேச்சு மனதை ஏதோ செய்தது. உடனே உங்கள் எல்லோரையும் பார்க்க வேண்டுமென தோன்றியது. உங்களுடன் பேச வேண்டும் என தோன்றியது. உங்கள் எல்லோருடனும் நான் நிற்பேன், தொடர்ந்து நிற்பேன்.
ஒவ்வொரு வீட்டிற்கும் மிக முக்கியமானவர்கள் வீட்டில் இருக்கும் பெரியவர்கள். அதுபோல்தான் நம் நாட்டிற்கும் மிக முக்கியமானவர்கள் உங்களைப் போன்ற விவசாயிகள். உங்களைப் போன்ற விவசாயிகளின் காலடி மண்ணைத் தொட்டு குமிபிட்டு என் பயணத்தை தொடங்க வேண்டும் என்ற முடிவுடன் இருந்தேன். உங்களது வீட்டில் இருக்கும் மகனாக என் கள அரசியல் பயணம் உங்கள் ஆசிர்வாதத்துடன் இங்கிருந்து தொடங்குகிறது.
நம் முதல் மாநில மாநாட்டில் கட்சியின் கொள்கைகளை எடுத்து சொன்னேன். சூழலியல் மற்றும் காலநிலை நெருக்கடிகளை எதிர்கொள்ளக்கூடிய, இயற்கைக்கு ஊறுவிளைவிக்காத பகுதிசார் மாநில வளர்ச்சி பரவலாக்கம். இதை நான் இங்கு சொல்வதற்கு காரணம் ஓட்டு அரசியலுக்காக அல்ல. அதே மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றி இத்திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தினேன். அதுமட்டுமில்லாமல், இந்த மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் நம் விவசாயிகளை பாதிக்கும் இத்திட்டத்திற்கு எதிராக சட்டப்போராட்டம் நடத்தவும் தயங்கமாட்டோம் என சொல்லியிருந்தோம். அதை இங்கு மீண்டும் வலியுறுத்துகிறேன். இந்த பிரச்னையில் நான் உங்களுடன் உறுதியாக நிப்பேன்.
நம்மை ஆளும் ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுக்கும் ஒன்றை சொல்ல நினைக்கின்றேன். நான் வளர்ச்சிக்கு எதிரானவன் கிடையாது. நான் ஏர்போர்ட் வரவேண்டாம் என சொல்லவில்லை. இந்த இடத்தில் வரக்கூடாது என்றுதான் சொல்லுகிறேன்., இதைநான் சொல்லவில்லை என்றால் இவன் வளர்ச்சிக்கு எதிரானவன் என சொல்ல ஆரம்பிப்பார்கள்.
ஒவ்வொரு வருடமும் மழைக்காலத்தில் சென்னை தத்தளிக்கிறது, சமீபத்தில் நடத்தப்பட்ட அறிவியல் ஆய்வில் சென்னையில் ஏற்படும் வெள்ளத்திற்குக் காரணம் சுற்றுவட்டாரப்பகுதிகளில் உள்ள சதுப்பு நிலங்களை அழித்ததுதான் காரணம் என சொல்லுகிறது. இப்படி ஒரு சூழலில் 90% விவசாய நிலங்கள், 90% நீர்நிலைகளை அழித்து பரந்தூர் விமான நிலையத்தை கொண்டு வரும் முடிவை எந்த அரசு எடுத்தாலும் அது மக்கள் விரோத அரசாகத்தான் இருக்கும்.
அரிட்டாபட்டியில் டங்க்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிராக தமிழ்நாடு அரசு தீர்மானம் கொண்டு வந்தார்கள். அதை மனப்பூர்வமாக வரவேற்கிறேன். ஆனால், அதே நிலைப்பாட்டைத்தானே இங்கு பரந்தூர் பிரச்னையிலும் எடுத்திருக்க வேண்டும். எடுக்கனும்.. எப்படி அரிட்டாபட்டி மக்கள் நம் மக்களோ அப்படித்தானே பரந்தூர் மக்களும் நம் மக்கள். அப்படித்தானே ஒரு அரசு யோசிக்க வேண்டும். ஆனால் அப்படி செய்யவில்லையே. ஏன் செய்யவில்லை. ஏனெனில், இந்த விமான நிலைய திட்டத்தையும் தாண்டி இத்திட்டத்தில் அவர்களுக்கு ஏதோ லாபம் இருக்கிறது. அதை நம் மக்கள் தெளிவாக புரிந்து வைத்திருக்கிறார்கள்.
நம் ஆட்சியாளர்களுக்கு ஒரு சில கேள்விகள். நீங்கள் எதிர்க்கட்சியாக இருக்கும்போது, 8 வழிச்சாலையை எதிர்த்தீர்கள், காட்டுப்பள்ளி துறைமுகத்தை எதிர்த்தீர்கள்., அதே நிலைப்பாட்டைத்தானே இங்கேயும் எடுக்க வேண்டும். எதிர்க்கட்சியாக இருக்கும்போது விவசாயிகளுக்கு ஆதரவு, ஆளும் கட்சியாக இருக்கும்போது விவசாயிகளுக்கு எதிர்ப்பா? உங்கள் நாடகத்தை எல்லாம் பார்த்துக்கொண்டு மக்கள் சும்மா இருக்க மாட்டார்கள். நம்புகிற மாதிரி நாடகம் ஆடுவதில்தான் நீங்கள் கில்லாடி ஆச்சே.
விமான நிலையத்திற்காக நீங்கள் ஆய்வு செய்த இடத்தை மறுஆய்வு செய்ய வேண்டும் என ஒன்றிய அரசையும் மாநில அரசையும் கேட்டுக்கொள்கிறேன். விவசாய நிலங்கள் இல்லாத, பாதிப்புகள் குறைவாக இருக்கிற இடமாக பார்த்து உங்கள் விமான நிலையத்தை கொண்டு வாருங்கள்.
உங்களுக்காகவும், உங்கள் ஊருக்காகவும், உங்கள் வீட்டுப் பிள்ளையான நானும், தமிழக வெற்றிக் கழகத்தின் தோழர்களும் சட்டத்திற்கு உட்பட்டு எல்லா வழிகளிலும் உங்களுடன் உறுதியாக நிற்போம். உங்களுடைய ஏகனாபுரம் ஊருக்குள் வந்து திடலில்தான் உங்களை சந்திக்க வேண்டும் என நினைத்தேன். ஆனால் எனக்கு பெர்மிசன் கிடைக்கவில்லை. நான் ஏன் ஊருக்குள் வரத்தடை என தெரியவில்லை” எனத் தெரிவித்தார்.