தவெக தேர்தல் வாக்குறுதிகள் x
தமிழ்நாடு

மாசம் ₹2500, 6 சிலிண்டர் FREE.. தவெக-வின் டாப் வாக்குறுதிகள்! முழு விவரம்

தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் வாக்குறுதிகள் என்னென்ன என்பதை இங்கே தெரிந்துகொள்ளலாம்..

PT WEB

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் விஜய் வெளியிட்டுள்ளார். "நாங்கள் மற்றவர்களைப் போலப் பொய் வாக்குறுதிகளை அளிக்கவில்லை, எங்களால் முடிந்ததை மட்டுமே நேர்மையான உத்தரவாதமாக வழங்கியுள்ளோம்" என்ற முன்னுரையுடன் அவர் வெளியிட்ட அறிக்கையின் விபரங்களை பார்க்கலாம்.

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்தால், 60 வயதிற்கு உட்பட்ட ஒவ்வொரு குடும்பத் தலைவிக்கும் மாதந்தோறும் 2,500 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என்றும், ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள் விலையில்லாமல் விநியோகம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்களின் திருமணத்தின் போது 1 சவரன் தங்கம் மற்றும் பட்டுச்சேலை வழங்கப்பட உள்ளது. மேலும், பிறக்கும் குழந்தைகளுக்குத் தங்க மோதிரம் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 5,00,000 ரூபாய் வரை வட்டியில்லா கடன் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

கல்வித் துறையில் பல புதிய அறிவிப்புகளை விஜய் வெளியிட்டுள்ளார். மாணவர்கள் உயர்கல்வி பயில எவ்வித அடமானமும் இன்றி 20,00,000 ரூபாய் வரை கல்விக்கடன் பெற அரசாங்கமே முழு உத்தரவாதம் அளிக்கும். அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் தாய்மார்களுக்கு ஆண்டுக்கு 15,000 ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்படும். மாநிலம் முழுவதும் நவீன வசதிகளுடன் 100 காமராசர் சிறப்புப் பள்ளிகள் மற்றும் உறைவிடப் பள்ளிகள் நிறுவப்படும். இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்திப் போட்டித் தேர்வுகளுக்கு மாணவர்களுக்கு இலவசப் பயிற்சிகள் வழங்கப்படும்.

மக்களின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்த, ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுக்கு 25,00,000 ரூபாய் வரையிலான மருத்துவக் காப்பீடு வழங்கப்பட உள்ளது. மேலும், அனைத்து மக்களுக்கும் ஆண்டுதோறும் கட்டணமின்றி முழு உடல் பரிசோதனை செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்படும். தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்கக் கடுமையான சட்டங்கள் கொண்டு வரப்படும்.

வேலைவாய்ப்பைப் பொறுத்தவரை, பட்டதாரிகளுக்கு மாதம் 4,000 ரூபாய் வரை உதவித்தொகை வழங்கப்படும். புதிதாக 5,00,000 அரசு வேலைவாய்ப்புகள் மற்றும் 5,00,000 இளைஞர்களுக்குச் சம்பளத்துடன் கூடிய பயிற்சி வாய்ப்புகள் உருவாக்கப்படும். சொந்தமாகத் தொழில் தொடங்க விரும்பும் இளைஞர்களுக்கு 25,00,000 ரூபாய் வரை கடன் உதவி வழங்கப்பட உள்ளது. அரசுத் தேர்வுகள் எப்போது நடக்கும் என்பதை முன்கூட்டியே அறிவிக்க முறையான கால அட்டவணை பின்பற்றப்படும்.

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த, ஆண்டுக்கு 15,000 ரூபாய் முதலீட்டு உதவி மற்றும் பழைய பயிர்க் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். நெல் குவிண்டாலுக்கு 3,500 ரூபாயும், கரும்பு டன்னுக்கு 4,500 ரூபாயும் குறைந்தபட்ச ஆதார விலையாக நிர்ணயிக்கப்படும். விவசாயிகளுக்கு 5,00,000 சோலார் பம்புகள் வழங்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மீனவர்களுக்குப் மீன்பிடி தடைக்கால நிவாரணம் 27,000 ரூபாயாக உயர்த்தப்படுவதோடு, 25,00,000 ரூபாய் விபத்துக் காப்பீடு மற்றும் நிரந்தர வீடுகள் கட்டித்தரப்படும்.

அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை ஏற்றுப் பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமல்படுத்துவது குறித்து மறுபரிசீலனை செய்யப்படும். 5 ஆண்டுகள் பணியாற்றிய தற்காலிக ஊழியர்கள் அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள். அங்கன்வாடி ஊழியர்களுக்கு 18,000 ரூபாயும், சுகாதாரப் பணியாளர்களுக்கு 10,000 ரூபாயும் ஊதியமாக உயர்த்தப்பட்டு, அவர்கள் ஓய்வு பெறும்போது 15,00,000 ரூபாய் பணிக்கொடையாக வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அடிப்படை வசதிகளில் ஒரு மாற்றமாக, அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் வரை கட்டணமில்லா மின்சாரம் மற்றும் இலவசக் குடிநீர் இணைப்பு உறுதி செய்யப்படும். நீண்டகாலமாகப் பட்டா இல்லாதவர்களுக்குச் சொந்தப் பட்டா வழங்கப்பட உள்ளது. முதியோர், கைம்பெண் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியம் 3,000 ரூபாயாக உயர்த்தப்படும். நிர்வாக ரீதியாகத் தமிழகப் பொருளாதாரத்தை உயர்த்தத் தனி அமைச்சகம் மற்றும் தொழில்நுட்ப நகரம் உருவாக்கப்படும். லஞ்சமில்லாத நிர்வாகத்தின் மூலம் அனைத்து அரசுச் சேவைகளும் மக்களின் வீட்டு வாசலுக்கே தேடி வரும் சூழல் உருவாக்கப்படும். மேலும், அரசின் நிதி ஒதுக்கீட்டில் 10% திட்டங்களை மக்களே நேரடியாகத் தீர்மானிக்கும் அதிகாரம் வழங்கப்படும்.

தவெக தேர்தல் வாக்குறுதிகள்

தனது உரையின் இறுதியில், தான் வெற்றி பெற்றால் மாதம் ஒருமுறை தனது தொகுதிக்கு நேரில் வந்து மக்களின் குறைகளைத் தீர்ப்பேன் என்றும், மக்கள் கேட்காமலேயே அவர்களின் தேவைகள் நிறைவேற்றப்படும் என்றும் விஜய் உறுதி அளித்துள்ளார்.