மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உத்தரப்பிரதேசத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தேசிய கல்விக்கொள்கையை தமிழக அரசு ஏற்றுக்கொண்டால்தான் நிதி விடுவிக்கப்படும். அரசியல் காரணங்களுக்காகவே தேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு எதிர்க்கிறது.
புதிய கல்விக்கொள்கைளை தமிழக அரசு ஏற்க வேண்டும். பிற மாநிலங்கள் புதிய கல்விக்கொள்கையை ஏற்கும்போது தமிழ்நாடு ஏன் ஏற்க மறுக்கிறது? அவர்கள் தமிழக அரசுக்கு எதிராக செயல்படுகிறார்களா? தங்கள் சொந்த அரசியல் காரணங்களுக்காக மக்களை குழப்புகிறார்கள். உலகமே மாறி வரும் சூழலில் மும்மொழிக்கொள்கைளை தமிழக அரசு ஏன் ஏற்க மறுக்கிறது? உள்ளூர் மொழிக்கே முதலிடம் என்ற தேசிய கல்விக்கொள்கையை தமிழக அரசு எதிர்க்கிறதா?” என தெரிவித்தார்.
இதனை அடுத்து தமிழ்நாட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கருத்துக்கு கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். இத்தகைய சூழலில், இந்தி எதிர்ப்புப் போராட்டம் உச்சக்கட்டத்தில் இருந்தபோது, அப்போதைய தலைவர்கள் பேசிய சில கருத்துகளை பார்க்கலாம்...
“இந்தி திணிப்பினால் மிகுதியாக பாதிக்கப்படுகின்ற மக்கள் நாம்தாம். உதை பந்துபோல் இங்குமங்குமாக நம்முடைய நிலை எடுத்தெறியப்படுகிறது. எனவே, காரியம் மிஞ்சுமுன் நாம் இதில் அக்கரை காட்ட வேண்டும். தேசிய மொழி என்று ஒன்று இருக்குமாயின், அது எங்கும் பேசப்படும் மொழியாக இருக்கவேண்டும், இல்லையேல், அது திணிக்கப்படுகின்ற மொழி என்பதிலே ஐயமில்லை.
இந்தியைத் திணிப்பதிலே அவர்கள் உறுதிகொண்டு வெற்றி பெற்றுவிடுவார்களாயின் எவ்வளவோ இடையூறுகளும் இன்னல்களும் நேரும். வெறும் கண்துடைப்பு வார்த்தைகளால் நம்மை ஏமாற்றக்கூடாது. நாம் விழிப்பாக இருந்து வேகமாகச் செயல்பட்டுத் தடுக்க வேண்டும். நாம் அனைவரும் இணைந்து நின்று இந்தித் திணைப்பை எதிர்ப்போம்”
அருணகிரி அடிகளார் தலைமையில் திருவண்ணாமலையில் 1957ல் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு மாநாட்டில் பேரறிஞர் அண்ணாவின் உரையிலிருந்து சில பத்திகள்..
“நான் நாட்டை ஆளுகின்ற காங்கிரஸ் சர்க்காரைக் கேட்கிறேன் - உங்களுக்கு உண்மையிலேயே ஆற்றலிருந்தால் - நம்பிக்கையிருந்தால் - தைரியம் இருந்தால், இந்தி வேண்டுமா - வேண்டாமா என்பதை, இந்தி பேசாத மக்களிடத்திலே ஓட்டெடுத்துக் காட்டுங்கள், வங்காளத்திலேயும் ஓட்டெடுங்கள் - மராட்டி நாட்டிலே ஓட்டெடுங்கள் - தமிழகத்திலே ஒட்டெடுங்கள் - கேரளத்திலேயும் வாக்கெடுங்கள் - ஆந்திரத்திலேயும் வாக்கு எடுங்கள்!”
“இன்றைய தினம் நான் சொல்வதை ஆணவம் என்று வடநாட்டுக்காரன் கருதிக்கொண்டாலும் அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. எங்களுடைய உரிமை என்ன என்பது எங்களுக்குப் புரிந்துவிட்டது. அந்த உரிமையைப் பெறுவதற்கு எங்களுக்குப் போதுமான ஆற்றல் இல்லாவிட்டாலும் அந்த ஆற்றல் கிடைக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்குக் கிடைத்திருக்கிறது. ஆகவே, இந்தக் காலத்திலே நீ பழைய காலத்தில் மிரட்டியதைப்போல், இந்தியைப் புகுத்தி விடலாம் என்று கருதினால் அது பகற்கனவாக முடியுமே தவிர நிச்சயமாக அது நடைபெறாது”
“ஆங்கிலத்தைப் பற்றிப் பேசுகின்ற நேரத்தில் சில தேசீய தோழர்கள் தங்களுடைய தேசீயம் முற்றிவிட்ட காரணத்தினாலே என்று நான் கருதுகிறேன் - சொல்லுகின்றார்கள் - “ஆங்கிலம் அன்னிய மொழி, ஆகவே ஆங்கிலம் ஆகாது” என்று “அன்னியருடைய வழிகளெல்லாம் நமக்குத் தேவையில்லை யென்றால், இரயில் அன்னியன் கொடுத்ததுதான் : கார்டு - கவர்களை அன்னியன் காலத்திலே தான் பார்த்தோம் : தபால் தந்தி அன்னியன் காலத்தில் தான் கிடைத்தது : ஆபரேஷன் இஞ்செக்ஷன் அன்னியன் காலத்தில் வந்தவைதான். இவை களெல்லாம் இருக்கலாம் - ஆனால், அவர்களுடைய மொழி மட்டும் இருக்கக்கூடாது என்று எடுத்துச் சொல்லுவது எந்த வாதம் என்பது எனக்குப் புரியவில்லை.
“ஆகையினாலே தான், ஆங்கிலத்தை அன்னியமொழி என்று கருதாமல், அன்னியரோடு தொடர்பு படுத்துகின்ற மொழி அன்னியர்கள் என்றால் உலகத்திலிருக்கின்ற அத்தனை அன்னியர்களோடும் தொடர்புபடுத்துவதற்கு ஆங்கிலம் ஒன்று இருந்தால் போதும் என்ற காரணத்தினாலே, ஆங்கிலத்தைத் தொடர்பு மொழியாகவும், தாய்மொழியை நம்முடைய ஆட்சி மொழியாகவும், அலுவல் மொழியாகவும், அறமன்றத்திலே இருக்கத்தக்க மொழியாகவும் ஏற்றுக்கொள்ள வேண்டும்”
இந்தி எதிர்த்திட வாரீர் — நம்
இன்பத் தமிழ்தனைக் காத்திட வாரீர் (இந்தி)
முந்திய காலத்து மன்னர் நம்
முத்தமிழ் நாட்டினில் தொத்திடு நோய்போல்
வந்தவட மொழிதன்னை — விட்டு
வைத்ததனால்வந்த தீமையைக் கண்டோம். (இந்தி)
செந்தமிழ் தன்னில் இல்லாத — பல
சீமைக் கருத்துக்கள் இந்தியில் உண்டோ?
எந்த நலம்செய்யும் இந்தி — எமக்கு
இன்பம் பயப்பது செந்தமிழன்றோ. (இந்தி)
தென்னாடு தான்எங்கள் நாடு — நல்ல
செந்தமிழ் தான்எங்கள் தாய்மொழி யாகும்
புன்மைகொள் ஆரிய நாட்டை — எங்கள்
பொன்னாட்டினோடு பொருத்துதல் ஒப்போம். (இந்தி)
இன்னலை ஏற்றிட மாட்டோம் — கொல்லும்
இந்தியப் பொதுமொழி இந்தி என்றாலோ
கன்னங் கிழிந்திட நேரும் — வந்த
கட்டாய இந்தியை வெட்டிப் புதைப்போம். (இந்தி)
”இந்திய தேசத்தில் மட்டுமேயன்றி இவ்வுலகம் எங்கணும் அழுந்திப் பயிலவும், பேசவும் வழங்கவும்பட்டு வரும் ஆங்கிலமொழியொன்றே உலக முழுமைக்கும் பொதுமொழியாய் பரவி வருதலால், அதுதன்னையே நம் இந்துமக்கள் அனைவரும் பொதுமொழியாய்க் கைக்கொண்டு பயிலுதலும் வழங்குதலும் அவர்கட்கு எல்லா வகையான கலங்களையும் தருவனவாகும். முதலில், உலகியல் வாழ்க்கைக்கு இன்றியமையாத பொருள் கடைக்கூட்டுவதற்கு எத்தொழிலைச் செய்வதாயிருந்தாலும், அத்தொழில் நுட்பங்களை நன்கறிந்து செய்தற்குதவி செய்யும் பல்லாயிரக்கணக்கான தொழிலறிவு நூல்கள் ஆங்கில மொழியிலன்றி வேறெதிலேனும் இருக்கின்றவா? பல்வகைக் கைத்தொழில்களைப் புரியுங்கால், அவற்றிற்கு வேண்டும் பல்வகைப் பண்டங்களைப் பல நாடுகளிலிருந்து வருவித்தற்கும், அவற்றால் தாஞ்செய்து முடித்த பண்டங்களைப் பல நாடுகளிலும் உய்த்து விலை செய்து ஊதியம் பெறுவதற்கும் ஆங்கில மொழியேயன்றி வேறெதுந் துணை செய்யுமோ? செய்யாதே. இன்னும் உலகமெங்கினும் நடைபெறும் வாணிகமெல்லாம் ஆங்கில மொழியின் உதவி கொண்டே நன்கு நடைபெறுதலை அறிந்துவைத்தும், அதனைப் பொதுமொழியாக வழங்காமல், விரிந்த வாணிக வாழ்க்கைக்கு ஒரு சிறிதும் பயன்படாத இந்தியை பொதுமொழியாக்க முயல்வோர் நமக்கு உண்மையில் உதவி செய்பவர் ஆவாரோ? கூர்ந்துபார்மின்கள்!”
இன்னும் ஏராளமானோர் இருக்கின்றனர்.. ஏராளமான கருத்துகளும் இருக்கின்றது.