"பாஜகவின் பாசிசத் தன்மைக்கு இது எடுத்துக்காட்டு" விகடன் இணையதளம் முடக்கப்பட்டதற்கு முதல்வர் கண்டனம்!
முன்னணி தமிழ் வார இதழான விகடன் குழுமத்தின் இணையதளம் மத்திய அரசால் முடக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. பல இடங்களில் இணையதளத்தை பயன்படுத்த முடியவில்லை என வாசகர்கள் புகார் தெரிவித்திருந்தனர்.
இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள விகடன் குழுமம், விகடன் இணைய இதழில் பிரதமர் மோடியின் அமெரிக்க பயணம் குறித்து கேலிச்சித்திரம் வெளியிடப்பட்டதையும், அதற்கு எதிராக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மத்திய அரசுக்கு புகார் கடிதம் எழுதியதையும் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், கருத்து சுதந்திரத்திற்காக களத்தில் நிற்போம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒருவேளை கேலிச்சித்திரம் காரணமாக மத்திய அரசால் இணையதளம் முடக்கப்பட்டிருந்தால் அதனையும் சட்டப்படி எதிர்கொள்வோம் என்றும் விகடன் குழுமம் கூறியுள்ளது.
இந்நிலையில், இணையதளம் முடக்கப்பட்டத்தை கண்டித்து முதலமைச்சர் ஸ்டாலின் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
அதில், “ இதழியலில் நூறாண்டு காலமாக இயங்கி வரும் @vikatan- னின் இணையத்தளம் முடக்கப்பட்டிருப்பதற்குக் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கருத்துகளுக்காக ஊடகங்கள் முடக்கப்படுவது ஜனநாயகத்துக்கு அழகல்ல! பா.ஜ.க.,வின் பாசிசத் தன்மைக்கு இது எடுத்துக்காட்டு ஆகும். முடக்கப்பட்ட இணையத்தளத்துக்கு உடனடி அனுமதி வழங்கக் கேட்டுக் கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.