வேல்முருகன் - விஜய் pt
தமிழ்நாடு

”கத்தி படத்தை எதிர்த்தபோது விஜய் தரப்பில் பேரம் பேசினார்கள்..” - தவாக தலைவர் வேல்முருகன்

கத்தி படத்தை எதிர்த்தபோது விஜய் தரப்பில் என்னிடம் பேரம் பேசினார்கள் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார்.

PT WEB

சென்னை வடபழனியில் நடந்த விருது விழாவில் பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், ‘கத்தி’ படத்தை எதிர்த்தபோது விஜய் தரப்பில் இருந்து தமக்குப் பேரம் பேசப்பட்டதாக பேசினார். காஸ்மோ பாலிட்டன் கிளப்பில் விஜயின் மேலாளர் பெரும் தொகை, கட்சி நிர்வாகிகளுக்கு வாகனங்கள் வழங்க முன்வந்ததாகவும், ஆனால் தாம் லஞ்சம் ஏற்காத அரசியல்வாதி என தன்னை நிலைநிறுத்திக் கொண்டதாகவும் கூறினார்.

சென்னை வடபழனியில் தனியார் அமைப்பின் விருது விழா தொடக்க நிகழ்வு நடைபெற்றது. இதில் நடிகர்கள் ராதா ரவி, அம்பிகா, ஜெகன், இயக்குநர் விக்ரமன், இசையாமைப்பாளர், பாடகர் ஆண்டணி தாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதில் பங்கேற்று பேசிய, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், அவருடைய பல போராட்டங்கள் குறித்து பேசினார். 

அப்போது பேசிய அவர், கத்தி படத்தை எதிர்த்தபோது விஜய் தரப்பில் இருந்து என்னிடம் பேரம் பேசப்பட்டது, அப்போதைய விஜயின் விஜயின் மேலாளர் எனக்கு காஸ்மோ பாலிட்டன் கிளப்பில் என்னை சந்தித்து ஒரு பெரும் தொகை கொடுப்பதாக கூறினார். கட்சியின் அனைத்து நிர்வாகிகளுக்கும் வாகனங்கள் வாங்கி தருவதாக கூறினார். இதுவரை யாரிடமும் ஒரு ரூபாய் கூட லஞ்சம் வாங்காத அரசியல்வாதியாக என்னை நிலைநிறுத்தி கொண்டேன் என்றார்.

அதன்பின் பேசிய ராதாரவி, வேல்முருகன் மனதில் பட்டதை பேசுபவர், அதனால் அவர் நிறைய பட்டிருக்கிறார். நானும் நடிகை அம்பிகாவும் அந்த காலத்தில் நடித்த பேய்வீடு, நாகம் போன்ற படங்கள் நன்றாக ஓடியது. என்னுடன் அந்த காலத்தில் நாயகியாக நடிக்க ஒப்புக்கொண்ட ஒரே நடிகை அம்பிகா தான்.

சினிமாவில் இருந்த ஒருவர் இன்று பெரிய இயக்கங்களுக்கு போட்டியாக இருக்கிறார். கூட்டம் சேர்வது பெரிதா, அந்த கூட்டம் அர்த்தமுடன் சேர வேண்டும் என்பது தான் முக்கியம் என்று பேசினார்.