சமீபத்தில் விஜய் பங்கேற்ற அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் பேசிய விசிக துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, மன்னராட்சி ஒழிக்கப்பட வேண்டும் என்றும் ஒரே நிறுவனம் திரைப்படத் துறையை கட்டுக்குள் வைத்திருப்பதாகவும் திமுகவை கடுமையாக விமர்சித்திருந்தார்.
இதற்கு திமுக தலைவர்களும் கடுமையாக எதிர்வினையாற்றி இருந்தனர். இந்நிலையில், கட்சியின் நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் விதமாக ஆதவ் அர்ஜுனா செயல்பட்டதாக கூறி அவரை 6 மாத காலம் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்வதாக விசிக தலைவர் திருமாவளவன் தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். அறிவிப்பினை வெளியிட்ட அடுத்த நொடியே முதலமைச்சர் ஸ்டாலினை சந்திப்பதற்காக தலைமை செயலகத்திற்கு சென்றுள்ளார் திருமாவளவன்.
இந்நிலையில், இது தொடர்பாக விசிக வன்னி அரசு புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில், “இது முழுக்க முழுக்க கட்சியின் நலன் கருதி எடுக்கப்பட்ட நடவடிக்கை. கட்சியினுடைய கட்டுப்பாட்டுக்கும் தலைமைக்கும் எதிராக தொடர்ச்சியாக அவர் செயல்படுவது கட்சிக்கே ஊறு விளைவிக்கக்கூடியது. இதன் அடிப்படையில்தான் இந்த ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
சம்பந்தப்பட்ட நூல் வெளியீட்டு விழாவில், பப்ளிசர்களில் ஒருவராக ஆதவ் அர்ஜுனா இருப்பதால், ‘நீங்கள் அதில் பங்கேறுங்கள் என்றும், ஆனால், நூல் தொடர்பாக மட்டும் பேசுங்கள். நூல் உருவாக்கம் குறித்து மட்டும் பேசுங்கள். மற்ற விஷயங்களையும் அரசியலையும் குறித்து பேச வேண்டிய அவசியம் இல்லை’ என்று தெரிவித்துதான் தலைவர் அவரை அனுப்பியிருந்தார்.
ஆனால், அவர் தலைவருடைய வார்த்தையை மீறி பேசியிருப்பது என்பது கட்சியினுடைய கட்டுப்பாட்டுக்கு எதிரானதாக இருப்பதை பார்க்க முடிகிறது. அதனாலேயே அவர்மீது இப்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.