சென்னையில் டிசம்பர் 6 ஆம் தேதி அதாவது நாளை ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் ‘ எனும் நூல் வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது. இந்நூலை விகடன் பிரசுரமும் விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனாவின் நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ளன. இந்நூலில் டாக்டர் அம்பேத்கரின் மொத்தப் பரிமாணங்களையும் அரசியல் தலைவர்கள், ஆய்வாளர்கள் பலரும் ஆய்வு செய்து கட்டுரைகளை எழுதியுள்ளனர். 20 பேட்டிகள், 45 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. விசிக தலைவர் திருமாவளவனும் இதில் பேட்டி அளித்துள்ளார்.
இந்நூல் வெளியீட்டு விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் என இருவரும் பங்கேற்க இருக்கின்றனர் என முன்னர் செய்திகள் வெளியாகின. சமீபத்தில், வெளியான புத்தக வெளியீட்டு விழா குறித்து விளம்பரத்தில் விசிக தலைவர் திருமாவளவன் பெயர் இல்லாமல் இருந்தது. தவெக தலைவர் விஜய் நூலை வெளியிட்டு சிறப்புரையாற்றுவார் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதன்பின்னர், செய்தி நிறுவனமொன்று திமுகவின் உத்தரவின் பேரிலேயே திருமாவளவன் நூல் வெளியீட்டுவிழாவில் கலந்துகொள்ளவில்லை எனத் தெரிவித்திருந்தது. இந்த செய்திக்கு பலரும் கண்டனங்களைத் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு எச்சரிக்கை எனக் குறிப்பிட்டு தனது எக்ஸ் தளத்தில் நீண்ட பதிவொன்றை பதிவிட்டுள்ளார். அதில், “புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார், கார்ல் மார்க்ஸ் ஆகியோரைக் கொள்கை ஆசான்களாக ஏற்றுக்கொண்டு கால் நூற்றாண்டுக்கும் மேலாகக் களமாடி வருபவர் திருமாவளவன்.
தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகவும் ஒடுக்கப்பட்ட பெண்கள் மற்றும் தலித்களின் விடுதலைக்காகவும் சமரசமின்றி பாடாற்றி வருபவர். தேர்தல் புறக்கணிப்பு காலத்தில் எப்படி தீவிரத்துடன் சனாதனக்கும்பலை எதிர்த்தாரோ அப்படித்தான், தேர்தல் பாதைக்கு வந்த பிறகும் களமாடி வருகிறார். இன்றைக்குத் தமிழ்நாட்டில் சனாதனக்கும்பலை எதிர்த்துத் திணறவைப்பது சிறுத்தைகள் தான். அப்படிப்பட்ட பேரியக்கத்தை வழி நடத்திவரும் எமது தலைவரை யாரும் பின்னிருந்து வழி நடத்திட முடியாது. சில அரசியல் தரகர்கள் அப்படி முயற்சிக்கிறார்கள். நாளை திசம்பர் 6 அன்று நடக்கவிருக்கும் ‘அம்பேத்கர் எல்லோருக்குமான தலைவர்’ எனும் நூல் வெளியீட்டு விழாவில், திமுக கொடுத்த நெருக்கடியால்தான் எங்கள் தலைவர் போகவில்லை என உள்நோக்கம் கற்பிக்கிறார்கள்.
2001 ஆம் ஆண்டு முதன்முறையாக திமுக கூட்டணியில் மங்களூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டப்பேரவைக்குப் போனார் தலைவர் திருமாவளவன். 2003 ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் பதவியை அவர் ராஜினமா செய்தார். பதவிதான் வேண்டுமென்றால் திமுக தலைவர் சொன்னதைக் கேட்டுக்கொண்டு பதவியில் தொடர்ந்திருக்கலாம். ஆனால்,கொள்கை முக்கியமெனப் பதவியைத் துறந்தவர் எமது தலைவர்.
அப்படிப்பட்டக் கோட்பாட்டு உறுதிமிக்கத் தலைவரை இழுத்த இழுப்புக்கெல்லாம் கொண்டு செல்ல முடியும் என சில தரகர்கள் முயற்சிப்பது அரசியல் சோகமாகும். தமிழ்நாட்டில் சில ஊடக நிறுவனங்கள் புரட்சியாளர் அம்பேத்கர் பெயரை வைத்து அரசியல் செய்ய முயற்சிக்கின்றன. அம்பேத்கரின் கொள்கைகள் வெற்றி பெற வேண்டும் என்பதை விட, தங்களது அரசியல் சதி வெற்றி பெற வேண்டுமென அவர்கள் துடிக்கிறார்கள்.
புரட்சியாளர் அம்பேத்கர் யாத்துத் தந்த தொழிலாளர் உரிமைகள் மற்றும் பாதுகாப்புச்சட்டங்களைத் தூக்கி எறிந்து விட்டு ஊடகவியலாளர்களைப் பணி நீக்கம் செய்த ஊடக நிறுவனங்களை எதிர்த்துப் போராடாத சில முன்னாள் ஊடகவியலாளர்கள், எப்போதும் ஊடகவியலாளர்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்துவரும் எமது தலைவர் எழுச்சித்தமிழரை சுயநலத்துக்காக வசை பாடுகிறார்கள்.
அம்பேத்கர் குறித்த நூல் வெளியீட்டு விழாவுக்கு வரமாட்டேன் என எமது தலைவர் கூறவில்லை. புரட்சியாளர் அம்பேத்கர் குறித்த புரிதல் எதுவுமில்லாமல் அரசமைப்புச் சட்டத்தை ஒரு கையிலும் பகவத் கீதையை இன்னொரு கையிலும் வைத்துக்கொண்டு சமரச ‘பாயாசம்’ கிண்டுகிற ஒருவரோடு மேடையைப் பகிர்ந்துகொள்ள முடியாது என்றுதான் சொன்னார். ஆனால் நூல் வெளியீட்டாளர்கள் எமது தலைவரைப் புறக்கணித்துவிட்டுப் பாயாசம்தான் வேண்டும் எனப் போயிருக்கிறார்கள். அது அவர்கள் விருப்பம். ஆனால், எங்கள் தலைவர் நிகழ்ச்சியைப் புறக்கணித்துவிட்டார் என்ற பொய்ப் பிரசாரத்தை ஊக்குவிப்பது எமது தலைவரை அவமதிப்பது மட்டுமல்ல, புரட்சியாளர் அம்பேத்கரையும் அவமதிப்பதே ஆகும்.
நூல் வெளியீட்டாளர்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும், புரட்சியாளர் அம்பேத்கரும், எழுச்சித் தமிழரும் நெருப்பைப் போன்றவர்கள். அவர்களைப் பொட்டலம் கட்ட எவராலும் முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.