கோவை, பீளமேட்டில் உள்ள பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் எமர்ஜென்சி அமுல்படுத்தப்பட்ட 50 ஆண்டு நிறைவு தினம் ஜூன் 25 ஆம் தேதி கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி நடந்த புகைப்பட கண்காட்சியை பாரதிய ஜனதா கட்சி தேசிய மகளிர் அணி தலைவியும் எம்.எல்.ஏவுமான வானதி சீனிவாசன் பார்வையிட்டார்.
இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “இன்று இந்திய நாட்டின் வரலாற்றில் முக்கியமான நாள். 1974 ஆம் வருடம் ஜூன் 25 ஆம் தேதி முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி மூலம் செயல்படுத்தப்பட்ட எமர்ஜென்சி இன்றுடன் 50 ஆண்டுகள் நிறைவடைகிறது. அதன் தீமைகளும் அதனால் ஏற்பட்ட விளைவுகளும், நெருக்கடியான அந்த காலகட்டத்தில் இந்திய ஜனநாயகம் எப்படி இருந்தது என்பது குறித்தும் இளைஞர்களிடம் எடுத்துக் கூறுவதற்காக இந்த கண்காட்சி மற்றும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. எமர்ஜென்சி காலத்தில் நாட்டின் ஜனநாயகம் செயல்படாமல் இருந்தது. 21 மாதம் நெருக்கடி நிலை இருந்தது. இதை எதிர்த்து போராடிய தியாகிகளை நாங்கள் நினைவு கூறுகிறோம்.
காங்கிரஸ் கட்சி ஒரு குறிப்பிட்ட குடும்பத்திடம் எப்போதும் அதிகாரம் இருக்க வேண்டும் என்பதற்காக செயல்பட்டது. அதற்கு மிகச் சரியான உதாரணம் இன்று தி.மு.க காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்து உள்ளது. ஆனால், அவசர நிலை காலகட்டத்தில்தான் இன்றைய முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் உட்பட தி.மு.க வினர் கொடுமைகளை அனுபவித்தார்கள். அரசியல் கட்சியினர் சிறைகளில் மிக மோசமாக நடத்தப்பட்டார்கள். எதற்காக நாங்கள் இதைச் சொல்கிறோம். கடந்த கால வரலாற்றை மறக்கக் கூடாது. இதற்காக காங்கிரஸ் கட்சி இதுவரை மன்னிப்பு கேட்கவில்லை.
நாங்கள் கல்வியில் அரசியல் செய்யவில்லை. தேசிய கல்விக் கொள்கை நாடு முழுவதும் லட்சக்கணக்கான மக்களிடம் கருத்து கேட்கப்பட்டு அதற்குப் பின் கொண்டவரப்பட்டது. தமிழக அரசு இதுதொடர்பாக முரண்பாடான கருத்துகளைத் தெரிவிக்கின்றனர். இது குறித்து மத்திய அமைச்சர் பதில் அளித்து உள்ளார். பாராளுமன்றத்தில் அவர்கள் கேட்ட போது கூட மத்திய அமைச்சர் விளக்கம் அளித்து உள்ளார். தனது அரசின் தோல்விகளை மறைக்கவே தி.மு.க மத்திய அரசை குறை கூறுகிறார்கள்.
சாதாரண குடும்பத்தினருக்கு கல்விக்கட்டணம் மிகப்பெரிய சுமையாக மாறிக்கொண்டிருக்கிறது. எதனால்? தமிழகத்தில் பெரும்பான்மையான பெற்றோர்கள் தமது பிள்ளைகள் தனியார் பள்ளிகளில் படித்தால்தான் நல்ல கல்வியைப் பெறும் என நினைக்கிறார்கள். ஏனெனில் தமிழகத்தில் பல இடங்களில் பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது. வகுப்பறைகள் வசதியில்லை. மாணவிகளுக்கு கழிப்பிடம் இல்லை. பல்வேறு விஷயங்களில் கல்வித்துறையில் மாற்றம் கொண்டுவரப்பட தேவையுள்ளது. அரசுப்பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கு இரு மொழிகளும் தனியார் பள்ளிகளில் பயிலும் மூன்று மொழிகளும் கற்பிக்கப்படுவதை அநீதியாக பார்க்கிறோம். மத்திய அரசு அனைவரும் ஒரே மாதிரியான கல்வி அறிவு பெற வேண்டும் என விரும்புகிறது.
காங்கிரஸ் ஆட்சி செய்த காலங்களில் கல்விக்கான அடிப்படை வசதியை அமைக்கவில்லை. இப்போதுதான் வட மாநிலங்கள் உட்பட பல இடங்களில் அடிப்படை வசதி ஏற்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் அடிப்படை கட்டமைப்புகள் நீண்டகாலமாகவே ஏற்படுத்தப்பட்டு இருந்தது. எனவே தமிழ்நாட்டை ஒடிசாவோடும் பிகாரோடும் ஒப்பிடாதீர்கள். நாமெல்லாம் வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிட வேண்டும். தேசிய கல்விக் கொள்கையை அனைவரும் வரவேற்கிறார்கள். நாங்கள் யாருக்கும் பாகுபாடு காட்ட வில்லை. தமிழை அதிகமாக கற்றுக் கொடுக்கக் கூடிய சூழ்நிலையை திமுக அரசு ஏற்படுத்த வேண்டும்.
சமஸ்கிருதம் இந்நாட்டில் யாருக்கும் தாய்மொழி இல்லை. சமஸ்கிருதம் பாரம்பரியமான பழமையான ஒரு மொழி. ஒவ்வொரு மாநிலமும் அந்தந்த மாநில மொழிக்கென துறையை வைத்திருக்கிறார்கள். அதற்காக செலவு செய்கிறார்கள். ஆனால், யாருக்கும் தாய்மொழி இல்லாத, பல்வேறு செழுமைகளைக் கொண்டிருக்கும் இந்திய மொழி சமஸ்கிருதம். சமஸ்கிருதத்திற்காக பாஜக மட்டும் அதிகமாக நிதி ஒதுக்கவில்லை. காங்கிரஸ் காலத்திலும் இதுதான் நிலைமை.
திராவிடம் என்பது ஒட்டுமொத்த தென்னிந்திய மாநிலங்களை உள்ளடக்கிய நிலப்பரப்பு என்பதை நாங்கள் நம்புகிறோம். இந்த நிலப்பரப்பில் வாழக்கூடிய மக்கள் திராவிடர்கள். நானும் திராவிடர்தான்.. இதிலென்ன சந்தேகம்... திராவிடம் என்ற பெயரால் குறிப்பிட்ட சமூக மக்களை இழிவுபடுத்துவது, ஹிந்து மத மக்களின் உணர்வுகளை காயப்படுத்துவது எல்லாம் திராவிடம் அல்ல. இந்தப்பகுதியில் வாழும் மக்கள் எந்த சமுதாயத்தை சார்ந்தவராக இருந்தாலும், எந்த மொழியைப் பேசினாலும் அவர்கள் திராவிடர்கள் என நாங்கள் நம்புகிறோம்.
முருகன் மாநாட்டால் அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை. எப்போதும் அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி குறித்தே பேச வேண்டுமா. எங்கள் கூட்டணி நன்றாக உள்ளது. தி.மு.க ஆட்சி அகற்றப்படுவது உறுதி. கூட்டணி ஆட்சி குறித்து அமித்ஷா தெளிவாக பேசி விட்டார். தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அ.தி.மு.கதான் தலைமை தாங்குகிறது” எனத் தெரிவித்தார்.